தேடுதல்

Covid-19 தொற்றுக்கிருமி தடுப்பு நடவடிக்கை Covid-19 தொற்றுக்கிருமி தடுப்பு நடவடிக்கை 

நுண்ணிய கிருமியின் தாக்குதலை ஆயுதங்கள் தடுக்காது

செபங்களே நம்மிடம் இருக்கும் தலைசிறந்த காப்புக் கவசம். Covid-19 தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நம் செபங்கள் வழியே தாங்கி நிற்போம் - ஆசிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் சார்ல்ஸ் போ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்களாகிய நாம் அனைத்து சக்திகளும் கொண்டவர்கள் அல்ல என்பதை, நாம் சந்திக்கும் இயற்கை பேரிடர்களும், தொற்று நோய்களும் உணர்த்துகின்றன என்று, ஆசிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், பிப்ரவரி 26ம் தேதி வெளியிட்டுள்ள மடலில் கூறியுள்ளார்.

உலகின் பல நாடுகளைத் தாக்கி வரும் Covid-19 தொற்றுக்கிருமி நெருக்கடியைக் குறித்து, மியான்மாரின் யாங்கூன் பேராயரான கர்தினால் போ அவர்கள் எழுதியுள்ள இம்மடலில், இவ்வுலகம், பல்வேறு இராணுவத் தளவாடங்களைக் குவித்து வைத்தாலும், மிக நுண்ணிய கிருமியின் தாக்குதலை இந்த ஆயுதங்கள் தடுக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

செபங்களே நம்மிடம் இருக்கும் தலைசிறந்த ஆயுதம் என்பதை தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், Covid-19 தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நம் செபங்களால் தாங்கி நிற்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மனித குலத்தில் நாமே உருவாக்கியுள்ள மதம், மொழி, நாடுகள் என்ற அனைத்து எல்லைகளையும் கடந்து, துன்ப நேரத்தில் துணை கரம் நீட்டுவது ஒன்றே நாம் காட்டக்கூடிய ஒருங்கிணைப்பு என்று கர்தினால் போ அவர்கள் தன் மடலில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

தனக்குள் தானே அனைத்து தீர்வுகளையும் காணமுடியும் என்று கூறிவரும் இவ்வுலகின் அகந்தையை கேள்வி கேட்கும்வண்ணம் உருவாகியுள்ள இந்த நெருக்கடி நிலையில், நாம் விண்ணகத்தை நோக்கி நம் உள்ளங்களைத் திருப்புவோமாக என்று, ஆசிய ஆயர் பேரவைத் தலைவரின் மடல் விண்ணப்பிக்கிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2020, 15:37