கொரோனா தொற்றுக்கிருமி தடுப்பு நடவடிக்கை கொரோனா தொற்றுக்கிருமி தடுப்பு நடவடிக்கை 

கொரோனா கிருமியால் தாக்கப்படாமல் இருக்க...

புனித வெள்ளி திருவழிபாட்டிற்கு ஆலயம் செல்பவர்கள், சிலுவையை முத்தி செய்யும் நிகழ்வில், சிலுவையை முத்தி செய்வது அல்லது, அதைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கென பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள், சில வழிமுறைகளை அறிவித்துள்ளனர்.

பிப்ரவரி 26, வருகிற புதனன்று நடைபெறும் திருநீற்று திருவழிபாடுகளில், விசுவாசிகளின் நெற்றிகளில், திருநீற்றால் சிலுவை அடையாளம் வரையாமல், அதனை, தலை உச்சியில் தெளிக்குமாறு பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ரோமுலோ வாலெஸ் அவர்கள், திருநீற்றை தலை உச்சியில் போடுவது, பாவத்திற்காக மனம் வருந்துவதைக் குறிக்கின்றது என்றும், இது திருஅவையின் பழங்காலப் பழக்கத்தோடு ஒத்துச் செல்கிறது என்றும் கூறினார்.

புனித வெள்ளி திருவழிபாட்டிற்கு ஆலயம் செல்பவர்கள், சிலுவையை முத்தி செய்யும் நிகழ்வில், சிலுவையை முத்தி செய்வது அல்லது, அதைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும், அதேநேரம், திருச்சிலுவையின்முன் முழந்தாளிட்டு ஆழ்ந்த வணக்கம் செய்ய வேண்டுமென்று, பேராயர் வாலெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் வருகிற புதனன்று தவக்காலத்தை தொடங்கவிருப்பதை முன்னிட்டு இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ள பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள், தன்னடக்கம், பிறரன்பு மற்றும், செபத்தின் வழியாக, கிறிஸ்தவ வாழ்வைப் புதுப்பிக்குமாறு அழைப்பு   விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவத் தொடங்கியதற்குப்பின், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, இரண்டாவது முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்தொற்றுக்கிருமி, 24 நாடுகளுக்கும் அதிமாக, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைத் தாக்கியுள்ளது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2020, 15:26