Vatican News
தவக்காலமும், தவமுயற்சிகளும், நம்மை, புதுப்பிறப்பாக மாற்ற வேண்டும் தவக்காலமும், தவமுயற்சிகளும், நம்மை, புதுப்பிறப்பாக மாற்ற வேண்டும் 

விவிலியத்தேடல்: சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 1

தவக்காலத்தை, ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்’ என்ற கோணத்தில் பார்க்க நம்மை அழைக்கிறது, திருஅவை. மாற்றத்தை, குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க, நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 1

பிப்ரவரி 26, சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதனுடன், தவக்காலம் ஆரம்பமாகிறது. திருஅவை வரலாற்றின் பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு கால அளவுகளில் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டது. நாளடைவில், அதற்கு, ஆறு வாரங்கள் என்ற கால அளவு வரையறுக்கப்பட்டது. அந்த ஆறு வாரங்களில், வரும் ஞாயிற்றுக்கிழமைகள், உண்ணாநோன்பு நாள்களாக கடைபிடிக்கப்படாததால், தவக்கால நோன்புகள் 36 நாள்களே இடம்பெற்றன. ஆனால், இயேசு பாலைநிலத்தில் தவமுயற்சிகளை மேற்கொண்டது, 40 நாள்கள் என்ற கருத்தை மனதில் கொண்டு, 36 நாள்களுடன், இன்னும் நான்கு நாள்களை இணைத்து, தவக்காலத்தின் 40 நாள்கள், என்ற நியதி, 7ம் நூற்றாண்டில், நிர்ணயிக்கப்பட்டது. இந்த 40 நாள் தவமுயற்சிகள், திருநீற்றுப் புதனுடன் ஆரம்பமாகின்றன.

இந்த வழிபாட்டு காலத்திற்கு, வழங்கப்பட்டுள்ள ‘தவக்காலம்’ என்ற தமிழ்ச்சொல், ஆங்கிலத்தில், Lent அல்லது Lenten Season என்று அழைக்கப்படுகிறது. Lent என்ற சொல், 'lente' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இலத்தீன் மொழியில், 'lente' என்றால், ‘மெதுவாக’ என்று பொருள். Lenten என்ற சொல், Lencten என்ற ஆங்க்லோ சாக்ஸன் (Anglo Saxon) சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் 'வசந்தகாலம்'. 'மெதுவாக', 'வசந்தகாலம்' என்ற இரு சொற்களையும் இணைக்கும்போது உருவாகும், ‘மெதுவாக வரும் வசந்தகாலம்’ என்ற சொற்றொடரை, தவக்காலத்திற்கு, அழகியதோர் அடையாளமாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.

உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள், குளிர்காலம். குளிர்காலத்திற்கு முன்னர், மூன்று மாதங்கள், இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ, ஆறு, அல்லது, ஏழு மாதங்கள், மரங்களும், செடிகளும், தங்கள் இலைகளை இழந்து, பனியில் புதைந்துபோகும். இந்த மாதங்களில், மரங்களையும், செடிகளையும் பார்க்கும்போது, அவற்றில் உயிர் உள்ளதா, அவை பிழைக்குமா என்ற ஐயம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும், சிறு துளிர்கள், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள், தலை நிமிரும். வசந்தகாலத்தில், தாவர உலகம், மீண்டும் தழைத்துவரும்.

‘வசந்தம்’ - கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன், சவால்கள் நிறைந்த மாற்றங்கள், பொறுமையாக நிகழவேண்டும். ஆறு மாதங்களாய், உயிரற்றதுபோலக் காட்சியளிக்கும் தாவர உலகில், திடீரென, ஓரிரவில், மாற்றங்கள் உருவாகி, அது, பூத்துக்குலுங்குவது கிடையாது. நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்காதவண்ணம், மிக, மிக மெதுவாக, வசந்தகாலம் வந்துசேர்கிறது. மெதுவாக, நிதானமாக, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவக்காலம் என்றதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி, என்ற கடினமான அடையாளங்கள் மனதை நிரப்பும். ஆனால், தவக்காலத்தை, ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்’ என்ற கோணத்தில் பார்க்க நம்மை அழைக்கிறது, திருஅவை. மாற்றத்தை, குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க, நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம்.

மாற்றத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் - சாம்பல். இஸ்ரயேல் மக்கள் மேற்கொண்ட தவ முயற்சிகளுக்கு சாக்குத்துணியும், சாம்பலும், முக்கியமான அடையாளங்களாக இருந்தன என்பதை, விவிலியத்தில் ஆங்காங்கே காண்கிறோம்...

சாக்கு உடை அணிந்து, புழுதியைத் தங்கள்மேல் பூசிக்கொண்டு நோன்பிருக்குமாறு அம்மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று மக்கள் ஒன்று கூட்டப்பட்டனர். (நெகேமியா 9:1)

நினிவே நகர மக்கள், கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர், சிறியோர் அனைவரும், சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். இந்தச் செய்தி, நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். (யோனா 3:5-6)

மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்; சாம்பலில் புரளுங்கள்; இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். (எரேமியா 6:26)

திருநீற்றுப் புதனன்று, அருள்பணியாளர், நம் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரையும்போது, "மனம் திரும்பி நற்செய்தியை நம்புவாயாக" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். சில ஆண்டுகளுக்கு முன், சாம்பலைப் பூசும் நேரத்தில், அருள்பணியாளர் பயன்படுத்திய வார்த்தைகள், நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வார்த்தைகளாக அமைந்தன: "நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத் திரும்புவாய்."

சாம்பலை, அழிவின் அடையாளமாக மட்டும் எண்ணிப்பார்க்காமல், புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காண்பதற்கு, சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்றெழும் ஃபீனிக்ஸ் (Phoenix) பறவையை, தவக்காலத்தின் ஓர் அடையாளமாக நாம் சிந்திக்கலாம். 500 அல்லது 1000 ஆண்டுகள் வாழ்ந்ததாய் சொல்லப்படும் இப்பறவை, தன் வாழ்நாள் முடியும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி, அதற்குள் அமர்ந்துகொண்டு, தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து, அப்பறவை சாம்பலாகும்போது, அதன் அடுத்தத் தலைமுறையான பறவை வெளிவரும். ஃபீனிக்ஸ் பறவையைப்பற்றிய இத்தகவல், உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கிவிட்டு சிந்தித்தால், அற்புத எண்ணங்களை உருவாக்கும் ஒரு காட்சி இது. நெருப்பை, அழிவுக்கருவியாகப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, பல வேளைகளில், அந்நெருப்புக்குள் நிகழும் புதுமைகளை மறந்துபோக வாய்ப்புண்டு.

தீயில் இடப்படும் பொன் இன்னும் கூடுதலாக மின்னுவதைப் போல், தன்னையே தீயிட்டு கொளுத்திக்கொள்ளும் ஃபீனிக்ஸ், மறுபிறவி எடுத்துவருவது போல், இந்த தவக்காலமும், அதில் நாம் மேற்கொள்ளும் தவமுயற்சிகளும், நம்மை, புதுப்பிறப்பாக மாற்ற வேண்டும். நம்மையும் புடமிட்டு மெருகேற்ற வேண்டும்.

தவக்காலத்தின் ஆரம்பத்தில் நாம் பயன்படுத்தும் சாம்பலையும், அடிக்கடி, அழிவின் அடையாளமாகவே பார்க்கிறோம். சாம்பல், உயிர் வளர்க்கும் உரமாக பயன்படுவதையும் நினைத்துப் பார்க்கவேண்டும். பொன்னைப் புடமிட நெருப்பு பயன்படுவது போல், உலோகங்களைத் தூய்மையாக்க, சாம்பலும் பயன்படுகிறது, இல்லையா? நெருப்பு, சாம்பல், ஃபீனிக்ஸ் பறவை, வசந்தம் என்ற எண்ணங்களோடு, நம் தவக்கால முயற்சிகள் ஆரம்பமாகட்டும்.

தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக, நம் விவிலியத் தேடலில், கல்வாரியில், சிலுவையில் அறையுண்டிருந்த இயேசு கூறிய பொன்மொழிகளை, அவர், நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அழைப்பாக எண்ணிப்பார்க்க முயல்வோம். தவக்காலத்தின் ஏழு விவிலியத் தேடல்களிலும் கல்வாரிக்குச் செல்வோம். அங்கு, சிலுவையில் தொங்கியபடி, நமக்குத் தேவையான வாழ்க்கைப் பாடங்களை வழங்கிய இறைமகன் இயேசுவின் காலடியில் அமர்ந்து தியானிப்போம்.

இயேசு, சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்களைச் சிந்திப்பதற்கு முன், இந்த வாக்கியங்கள் சொல்லப்பட்டச் சூழலைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். ஒரு மனிதர் சாகும் நிலையில் உள்ளார் என்பது தெரிந்தால், அந்நேரத்தில், அவர் சொல்வதை, மிகக் கவனமாகக் கேட்போம். மறு வாழ்வின் வாசலில் நிற்கும் அந்த மனிதரின் வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். இறுதி மூச்சு போகும் வேளையில், அவர் சொல்வது, மிக முக்கியமான ஒரு செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதுவும், இறக்கும் நிலையில் இருப்பவர், அதிக உடல் வேதனைப்படுகிறார் என்று தெரிந்தால், அந்நேரத்தில், தன் வேதனையைப் பொறுத்துக் கொண்டு அவர் சொல்லும் வார்த்தைகள், இன்னும் அதிக மதிப்பு பெறும். இயேசு, வேதனையின் உச்சியில், அச்சிலுவையில், நம் வாழ்வுக்குத் தேவைப்படும் பாடங்களைச் சொல்லித்தருகிறார்.

இயேசுவின் வேதனையைக் கொஞ்சமாகிலும் உணர முயல்வோம். உரோமையர்கள் கண்டுபிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக, அவர்கள் கண்டுபிடித்தது, சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதைப்பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருப்பதால், உடல் தொங்கும். தொங்கிப்போன நிலையில், மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடவேண்டுமாயின், உடல் பாரத்தை, மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு, இரு ஆணிகளால் அறையப்பட்ட கரங்களையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி, விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண வேதனை அனுபவிப்பார்கள். ஒரு சிலர், இப்படி உயிரோடு போராடி எழுப்பும் மரண ஓலம், எருசலேம் நகருக்கும் கேட்கும் என்று, ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த மரண ஓலத்தை நிறுத்தவே, அவர்கள், மூச்சடைத்து விரைவில் இறக்கட்டும் என்பதற்காகவே, அவர்கள், மீண்டும் மேலே எழுந்து வர முடியாதபடி, அவர்கள் கால்களை முறித்துவிடுவார்கள். இதையே நாம், நற்செய்தியில் கூறப்பட்டுள்ள காட்சியில் வாசிக்கிறோம்.

இந்த மரண ஓலத்தில், வேதனைக் கதறலில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள், பெரும்பாலும், வெறுப்புடன் வெளிவரும். தங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்த மற்றவர்களையும், தங்களைக் காப்பாற்ற இயலாத கடவுள்களையும் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, சிலுவையில் சொன்ன வார்த்தைகள், அவரது மரண சாசனம். அந்த மரண சாசனத்தின் முதல் வரிகள் இவை: "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34)

தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு, அடிப்படையாக நமக்குத் தேவையானது, மன்னிப்பு. மன்னிப்பு பெறுவது, மன்னிப்பு வழங்குவது. என்ற  கருத்துக்களை வலியுறுத்தும்  இயேசுவின் முதல் கூற்றை, அடுத்த விவிலியத் தேடலில் சிந்திப்போம். நாம் ஆரம்பித்துள்ள இந்த தவக்காலம், புதுமைகளால், புதிய வாழ்வளிக்கும் வசந்தத்தால் நம்மை நிறைக்க வேண்டுமென ஒருவர் ஒருவருக்காய் வேண்டிக்கொள்வோம். 

25 February 2020, 15:01