தேடுதல்

Vatican News
லெஸ்போஸ் தீவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில் ஒன்று லெஸ்போஸ் தீவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில் ஒன்று 

லெஸ்போஸில் உள்ள புலம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்த...

லெஸ்போஸ் தீவின் முகாம்களில் வாழும் சிறாருக்கு, ஐரோப்பாவில் உள்ள துறவறக் குழுமங்கள், பங்குத்தளங்கள், மற்றும், குடும்பங்கள், புகலிடம் தருவது, நேர்மறையான உணர்வுகளை உருவாக்கி வருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் உள்ள புலம்பெயர்ந்தோரை, ஐரோப்பிய நாடுகளில் மீள்குடியமர்த்தும்படி, மூன்று கர்தினால்கள், ஐரோப்பிய அரசுகளுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆயர் பேரவைகளின் ஒன்றிய அமைப்பான COMECEயின் தலைவர், கர்தினால் Jean-Claude Hollerich, புலம்பெயர்ந்தோர் பணிகளின் ஒருங்கிணைப்பாளராக திருப்பீடத்தில் பணியாற்றும் கர்தினால் Michael Czerny மற்றும் திருத்தந்தையின் தர்மப்பணிகளை ஒருங்கிணைக்கும் கர்தினால் Konrad Krajewski ஆகிய மூவரும் இந்த விண்ணப்ப மடலை பிப்ரவரி 20, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளனர்.

நற்செய்தி சார்ந்த சக்தியைத் தட்டியெழுப்ப...

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்களுக்குள் இருக்கும் நற்செய்தி சார்ந்த சக்தியைத் தட்டியெழுப்ப தாங்கள் விடுக்கும் ஓர் அழைப்பு இது என்று இம்மூன்று கர்தினால்கள் விடுத்துள்ள விண்ணப்ப மடலின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது.

லெஸ்போஸ் தீவிலும், கிரேக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வாழும் 20,000த்திற்கும் அதிகமான மக்கள், குறிப்பாக, பெற்றோரும், உற்றாரும் இன்றி வாழும் 1,100 சிறார், பாதுகாப்பான இடங்களில் வாழ்வதற்குத் தேவையான முயற்சிகளை, ஐரோப்பிய சமுதாயம் மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பம், இம்மடலில், மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது.

முகாம்களில் வாழும் சிறாருக்கு புகலிடம்

புலம்பெயந்தோர் முகாம்களில் வாழும் சிறாருக்கு, அண்மைய நாள்களில், ஐரோப்பாவில் உள்ள துறவறக் குழுமங்கள், பங்குத்தளங்கள், மற்றும், குடும்பங்கள், புகலிடம் தருவது, நேர்மறையான உணர்வுகளை உருவாக்கி வருகிறது என்று கர்தினால்களின் மடல் சுட்டிக்காட்டியுள்ளது.

நல்ல சமாரியன் உவமையில், அடிபட்டு கிடந்த மனிதரைக் கடந்து சென்ற குரு, மற்றும் லேவியரைப் போல, புலம்பெயர்ந்தோரைக் கண்டும் காணாமல் கிறிஸ்தவர்கள் எவ்விதம் கடந்து செல்லமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லெஸ்போஸ் தீவில் எழுப்பிய கேள்வியுடன், கர்தினால்கள் Hollerich, Czerny, Krajewski ஆகிய மூவரும் தங்கள் விண்ணப்ப மடலை நிறைவு செய்துள்ளனர்.

20 February 2020, 15:01