தேடுதல்

Vatican News
காமரூனில் தேசிய அளவில் கலந்துரையாடல் காமரூனில் தேசிய அளவில் கலந்துரையாடல்  (AFP or licensors)

அரசுத்தலைவர் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்குபெற..

மேற்கு மற்றும், மத்திய ஆப்ரிக்கா சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள காமரூன் நாட்டில், ஏறத்தாழ 2 கோடிப் பேர், 250க்கும் அதிகமான பூர்வீக மொழிகளைப் பேசுகின்றனர். அந்நாட்டில் பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வ மொழிகளாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

காமரூன் நாட்டின் வட மேற்கு மற்றும், தென் மேற்கு மாநிலங்களில் இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்குக்கொண்டு வருவதற்கு, சுவிட்சர்லாந்து தலைமையில் விடுக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில், அந்நாட்டு அரசு பங்குபெற வேண்டுமென்று, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆங்கிலம் பேசும் நாடுகளைச் சேர்ந்த 16 ஆயர்கள், காமரூன் நாட்டு அரசுத்தலைவர் பால் பியா அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த மடலில், அமைதிப் பேச்சுவார்த்தையில், ஆங்கிலம்பேசும் ஆயுதம் ஏந்திய புரட்சிக் குழுக்களும், வன்முறையில் ஈடுபடாத சமுதாயத் தலைவர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

காமரூனில் ஆங்கிலம் பேசும் இரு மாநிலங்களில் நிலவும் மனிதாபிமானப் பேரிடர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், அந்நாட்டில் ஆங்கிலம் பேசும் மக்களில் 6,56,000 பேர் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர் என்றும், இதனால் பல்லாயிரக்கணக்கான சிறார் பள்ளிப் படிப்பைக் கைவிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

அப்பகுதியில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும், வேறுபல கொடுமைகளால், ஐம்பதாயிரம் பேர் நைஜீரியாவில் புலம்பெயர்ந்துள்ளனர், நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன, மற்றும், குறைந்தது இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஆயர்களின் மடல் கூறுகிறது.

சுவிட்சர்லாந்து தலைமையில் விடுக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை, அரசியல் முறையில் பிரச்சனைக்குத் தீர்வு காண சிறந்த வழி எனவும் கூறியுள்ள ஆயர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கென பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று திருப்பலிகளையும் நிறைவேற்றினர். (Fides)

22 February 2020, 15:51