சிரியாவில் போரினால் சிதைந்துள்ள அலெப்போ சிரியாவில் போரினால் சிதைந்துள்ள அலெப்போ 

சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் நம்பிக்கை

சிரியா நாட்டில், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அலெப்போவின் பன்னாட்டு விமான நிலையமும், தலைநகரிலிருந்து வரும் விரைவுவழிச் சாலையும் திறந்து விடப்பட்டிருப்பது, நேர்மறை உணர்வுகளை உருவாக்குகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியா நாட்டில், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அலெப்போவின் பன்னாட்டு விமான நிலையமும், தலைநகரிலிருந்து வரும் விரைவுவழிச் சாலையும் திறந்து விடப்பட்டிருப்பது, நேர்மறை உணர்வுகளை உருவாக்குகின்றன என்று, அலெப்போவின் கல்தேய வழிபாட்டு முறை பேராயர், Antoine Audo அவர்கள் கூறியுள்ளார்.

சிரியா நாட்டின் காரித்தாஸ் பணிகளின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், அலெப்போ பேராயருமான Audo அவர்கள், தலைநகரின் விரைவுவழிச் சாலை திறக்கப்பட்டதையொட்டி மக்கள் மேற்கொண்ட கொண்டாட்டம் மனதில் நம்பிக்கை உணர்வுகளை எழுப்புகின்றது என்று குறிப்பிட்டார்.

தொடர்புகளை நிலைநாட்டும் சாலைகளின் திறப்பு, அலெப்போவில் நிகழவேண்டிய ஏனைய மீள் கட்டுமானப் பணிகளுக்கு ஓர் அடித்தளம் என்று பேராயர் Audo அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

சிரியா நாட்டின் வர்க்கத்திற்கும், பொருளாதாரத்திற்கும் தலைநகராக விளங்கிய அலெப்போ நகரம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் விமானச் சேவையைத் துவங்கியிருப்பது, மக்கள் நடுவே பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது என்று பேராயர் Audo அவர்கள் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.

இந்த நம்பிக்கை, குறிப்பாக, இப்பகுதியைவிட்டு துரத்தப்பட்ட கிறிஸ்தவர்களை மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குக் கொணரும் என்ற நம்பிக்கையையும், அலெப்போவின் பேராயர் Audo அவர்கள் கூறினார்.

பன்னாட்டு மக்களின் உதவியின்றி மீள் கட்டமைப்பு சாத்தியமல்ல என்று கூறிய கல்தேய வழிபாட்டு முறை பேராயர் Audo அவர்கள், சிரியா நாட்டின் மீது கிறிஸ்தவர்களின் கவனத்தை அடிக்கடி திருப்பி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தன் சிறப்பான நன்றியைத் தெரிவித்தார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2020, 14:48