தேடுதல்

ஆயர் பால் ஹின்டர் ஆயர் பால் ஹின்டர்  

மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களில் வன்முறையற்ற மனநிலை

மத்திய கிழக்குப் பகுதி, போர்கள், ஆயுதங்கள் மற்றும், வன்முறைகளால் நிறைந்துள்ளவேளை, கிறிஸ்தவர்கள், இத்தகைய போக்கிலிருந்து விலகியிருந்து, வன்முறையற்ற மனநிலை என்ற கொடையை, மற்றவரோடு பகிர்ந்துகொள்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மத்திய கிழக்கில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் அனைவரும், போர்கள் மற்றும், வன்முறைகளுக்கு எதிரான இதயங்களைக் கொண்டிருக்கின்றனர் என்று, தென் அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் ஹின்டர் அவர்கள் கூறியுள்ளார்.

சனவரி 13 வருகிற திங்கள் முதல், 16, வருகிற வியாழன் வரை அபு தாபியில் நடைபெறவுள்ள பொது ஆண்டுக் கூட்டம் பற்றி ஆசியச் செய்தியிடம் பேசிய, ஆயர் பால் ஹின்டர் அவர்கள், மத்திய கிழக்கில் இடம்பெறும் போர்கள் மற்றும், வன்முறைகள் மத்தியில், கத்தோலிக்கத் திருஅவையின் மறைப்பணியை எண்ணிப் பார்க்கிறேன் என்று கூறினார்.

மத்திய கிழக்கில் திருஅவை, உண்மையான உடன்பிறந்தநிலை மற்றும், ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கைக்கு, சிறப்பாகச் சான்று பகர்ந்து வருகிறது என்று எடுத்துரைத்த ஆயர் ஹின்டர் அவர்கள், நவீன சூழலில் நம் திருஅவையின் மறைப்பணி என்ற தலைப்பில், 2020ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்குப் பகுதி, போர்கள், ஆயுதங்கள் மற்றும், வன்முறைகளால் நிறைந்துள்ளவேளை, கிறிஸ்தவர்கள், இத்தகைய போக்கிலிருந்து விலகியிருந்து, இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, வன்முறையற்ற மனநிலை என்ற கொடையை, மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக, ஆயர் ஹின்டர் அவர்கள் தெரிவித்தார்.

நம் மத்தியில், பன்மைத்தன்மையில் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் மற்றும், ஏனைய கலாச்சாரம் மற்றும், மதத்தவர் மத்தியில், நாம் திறந்தமனம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று, தென் அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் பால் ஹின்டர் அவர்கள் கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2020, 14:51