மாற்றுத்திறனாளியான மகள் திவ்யாவை 12 ஆண்டுகளாக பள்ளிக்கு இடுப்பில் சுமந்து செல்லும் தாய் பத்மாவதி மாற்றுத்திறனாளியான மகள் திவ்யாவை 12 ஆண்டுகளாக பள்ளிக்கு இடுப்பில் சுமந்து செல்லும் தாய் பத்மாவதி 

விவிலியத்தேடல்: சிந்தும் சிறு துண்டுகள் போதும் 3

தாய் பத்மாவதி அவர்களைப்போன்று, பலகோடி அன்னையர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அங்கக் குறையுடன் பிறந்த தங்கள் மகள்களையும், மகன்களையும் வாழ்வில் வெற்றிபெறச் செய்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: சிந்தும் சிறு துண்டுகள் போதும் 3

பெண்களை மையப்படுத்தி இயேசு ஆற்றிய ஏழுப் புதுமைகளில், கானானிய பெண்ணின் மகளை குணமாக்கியப் புதுமையும் ஒன்று. இப்புதுமை பதிவுசெய்யப்பட்டுள்ளப் பகுதிக்கு, தமிழ் விவிலியத்தில் தரப்பட்டுள்ள தலைப்பு - கானானியப் பெண்ணின் நம்பிக்கை, ஆங்கிலப் பதிப்புக்களிலும், The Canaanite Woman’s Faith அல்லது, The Syrophoenician Woman’s Faith என்றே இப்பகுதிக்கு தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இயேசுவைச் சந்திக்க வந்திருந்த பெண்ணின் நம்பிக்கையே, இப்புதுமையின் மையக்கருத்தாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோம்.

பெண்கள், குறிப்பாக, அன்னையர் கொண்டிருக்கும் நம்பிக்கை, அசாத்தியமானது என்பதை நாம் அறிவோம். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு செய்தி, ஓர் ஏழைத்தாயின் அசைக்கமுடியாத உறுதியையும், நம்பிக்கையையும் வெளிக்கொணர்ந்தது. தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற அத்தாயைக் குறித்து ‘இந்து தமிழ் திசை’யில் வெளியானச் அச்செய்திக்கு, மாற்றுத்திறனாளி மகள்: 12 ஆண்டுகளாக பள்ளிக்கு இடுப்பில் சுமந்து செல்லும் தாய்! என்று தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. அச்செய்தியின் சுருக்கம் இதோ:

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. அவரின் ஒரே மகள் திவ்யா. பிறக்கும்போதே கால்களில் குறைபாட்டுடன் பிறந்தார் திவ்யா. மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால் தந்தை குடும்பத்தை விட்டுச்சென்று விட்டார். இதனால் தனி நபராக திவ்யாவை வளர்த்தார் தாய் பத்மாவதி.

சொந்த ஊரான பெருங்கோழி அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார் திவ்யா. மேல்நிலைக் கல்விக்காக உத்திரமேரூர் வந்த அவர், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

எக்காரணத்துக்காகவும் மகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பத்மாவதி அவர்கள், கடந்த 12 ஆண்டுகளாக, மகளை, இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார். சுமார் 2 கி.மீ. மகளைச் சுமந்துவந்து, அரசுப் பேருந்தில் பயணிக்கும் பத்மாவதி அவர்கள், மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்கு நடந்து செல்கிறார். கருவாய் மகளை 10 மாதங்கள் சுமந்த தாய், கல்விக்காக 12 ஆண்டுகளாகச் சுமப்பது, அங்குள்ள மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய் பத்மாவதி அவர்களின் தியாகமும், நம்பிக்கையும், இளம்பெண் திவ்யாவையும் சீரிய முறையில் சிந்திக்க வைத்துள்ளது. அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, ''நான் நன்றாகப் படித்து வேலைக்குச் செல்வேன். இதன் மூலமாக என்னை மாதிரி சிரமப்படுபவர்கள் எல்லாருக்கும் உதவுவேன். நாள் முழுவதும் அம்மா என்னுடனே இருப்பதால், வீட்டுச்சூழல் சிரமமாக இருக்கிறது. என் மேற்படிப்புக்கு முதல்வர் உதவ வேண்டும்''  என்று கூறினார்.

இச்செய்தி, நாளிதழில் வெளியானதையடுத்து, தமிழக அரசு, இளம்பெண் திவ்யாவுக்கு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தை வழங்கியுள்ளது என்ற செய்தி அடுத்த சில நாள்களில் வெளியானது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள், திவ்யாவின் நிலை அறிந்து, அவரின் படிப்புக்கு உதவ முன் வந்துள்ளதாக அவரின் தாய் பத்மாவதி நன்றி தெரிவித்துள்ளார்.

தாய் பத்மாவதி அவர்கள் 12 ஆண்டுகளாக, தன் மகள் மீது நம்பிக்கை கொண்டு அவரைச் சுமந்து சென்ற தியாகம், ஊடகங்களின் கவனத்தை பெறாமல் போயிருந்தாலும், அதன் விளைவாகக் கிடைத்த உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தாலும், அந்த அன்னை பத்மாவதி, தன் மகள் திவ்யாவை, கல்லூரிக்கும் சுமந்து சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. அன்னையரின் நம்பிக்கையும், மன உறுதியும் போற்றுதற்குரியன.

மனித வரலாற்றின் துவக்கத்திலிருந்து, உலகின் ஒவ்வொரு நாட்டிலும், தாய் பத்மாவதி அவர்களைப்போன்று, பலகோடி அன்னையர் வாழ்ந்துள்ளனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அங்கக் குறையுடன் பிறந்த தங்கள் மகள்களையும், மகன்களையும் வாழ்வில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அவர்களில் ஒருவராக, கானானிய இனத்தை, அல்லது, சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த ஒரு தாயை, நாம், இன்றைய விவிலியத்தேடலில் சந்திக்கிறோம்.

நோயுற்ற தன் மகளுக்காக இயேசுவைத் தேடி, அந்த அன்னை வந்த நிகழ்வை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

மாற்கு நற்செய்தி 7: 24-26

இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.

நற்செய்தியாளர் மாற்கு, அப்பெண்ணுக்கு, இரு அடையாளங்களை வழங்கியுள்ளார். அவரை, ஒரு கிரேக்கப்பெண் என்றும், சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 'கிரேக்கப்பெண்' என்று அவர் குறிப்பிட்டுள்ளது, நம் பேச்சு வழக்கில், பிறரை வேறுபடுத்திக் காட்ட நாம் பயன்படுத்தும் சொல்லாடல்களை எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது. யூதர்கள், தங்கள் இனத்தைச் சேராத மற்றவர்களை, புறவினத்தார் என்றோ, 'கிரேக்கர்' என்றோ கூறிவந்தனர்.

திருத்தூதரான புனித பவுல், இறை மக்களிடையே வேற்றுமைகள் இருக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்த, யூதர், கிரேக்கர் என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்:

கலாத்தியர் 3: 27-29

கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.

கிறிஸ்தவர்களிடையே நிலவிவந்த வேறுபாடுகளை வலியுறுத்த, புனித பவுல் பயன்படுத்தும் சொற்கள் – யூதர்-கிரேக்கர் என்ற பிரிவு.

நம்மைச் சாராத, அல்லது, நம்மால் புரிந்துகொள்ள இயலாத ஒன்றைக் குறித்து கேள்விப்படும்போது, "That's Greek to me", அதாவது, "அது எனக்கு கிரேக்கமாக உள்ளது" என்ற சொற்றொடரை நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறோம். கிரேக்க நாட்டில் உள்ளவர்கள், தங்களுக்குத் தெரியாத, அல்லது, தங்கள் இனத்தைச் சாராத ஒன்றைக் குறித்து தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும்போது, "அது எனக்கு சீனமாக உள்ளது" அல்லது, "நீ பேசுவது, துருக்கிய மொழிபோல் உள்ளது" என்ற சொற்றொடர்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, உலகெங்கும் உள்ள அனைவரும், தங்களுக்கு விளங்காத மொழியையோ, இனத்தையோ குறிப்பிட்டு, நமக்குள் வேறுபாடுகளை உணர்த்தி வருகிறோம்.

நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை பல்வேறு தருணங்களில் நாம் உணர்ந்தாலும், பிறருக்கு உணர்த்தினாலும், அவசரமான, அவசியமானத் தேவை என்று வரும்போது, மொழியைக் கடந்து, நாம் அடுத்தவருடன் தொடர்புகொள்ள முடிகிறது. சூழ்நிலையின் கட்டாயத்தால் வேற்று நாடுகளுக்கு, அல்லது, இந்தியாவில் வேற்று மாநிலங்களுக்கு நாம் செல்ல நேர்ந்தால், நம் தேவைகளை உணர்த்த ஏதோ ஒரு வழியை நாம் கடைபிடிக்கிறோம். நம் தேவைகளை, மொழி தெரியாத இடங்களிலும், பிறருக்குப் புரியவைத்து விடுகிறோம். தேவைகள், அதிலும், அவசரத் தேவைகள் உருவாகும்போது, மொழி, இனம், சாதி, மதம் என்ற அனைத்து பிரிவுச் சுவர்களும் தானாகவே தரைமட்டமாவது, நாம் அனைவரும் உணர்ந்துள்ள ஓர் அழகிய அனுபவம்.

பேயின் பிடியில் சிக்கியிருந்த தன் மகளை விடுவிக்கவேண்டும் என்ற அவசரத் தேவையுடன், ஒரு தாய், இயேசுவைத் தேடிவந்தார். அவருக்கும், இயேசுவுக்கும் இடையே, இனம், மொழி, மதம் என்று, பல வேலிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தையும் கடந்து, அந்தத் தாய், இயேசுவைத் தேடிவந்து, தன் வேண்டுதலை எழுப்பினார். அவரும், இயேசுவும் பயன்படுத்திய மொழிகள் வேறுபட்டவையாக இருந்திருக்கலாம். இருப்பினும், அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டனர் என்பதை உணர்கிறோம்.

அந்தத் தாய், இயேசுவை அணுகிவந்த நிகழ்வு, மத்தேயு நற்செய்தியில், ஒருசில வேறுபாடுகளுடன், கூடுதல் விவரங்களுடன் கூறப்பட்டுள்ளது.

மத்தேயு நற்செய்தி 15: 21-24

இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.

நற்செய்தியாளர் மத்தேயு, இயேசுவைத் தேடி வந்திருந்த தாயை, கானானியப் பெண் என்று குறிப்பிட்டிருப்பதன் பொருளையும், வேற்றினத்தைச் சேர்ந்த அப்பெண், இயேசுவிடம் தன் விண்ணப்பத்தை அளித்த விதம், அதற்கு இயேசு வழங்கிய பதிலிறுப்பு ஆகியவற்றையும், நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2020, 14:49