சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக செபிக்கும் வாரம் சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக செபிக்கும் வாரம் 

விவிலியத்தேடல்: சிந்தும் சிறு துண்டுகள் போதும் 2

இவ்வுலகில், ஒன்றிப்பு முயற்சிகளைவிட, பாலங்களை அமைக்கும் முயற்சிகளைவிட, பிரிவுகளை உருவாக்கும் முயற்சிகளும், சுவர்களை எழுப்பும் முயற்சிகளும் வேரூன்றி வருவதைக் கண்டு வேதனையடைகிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: சிந்தும் சிறு துண்டுகள் போதும் 2

கிறிஸ்தவ உலகம், கத்தோலிக்கர், லூத்தரன், பாப்டிஸ்ட், ஆங்கிலிக்கன், சீரோ மலபார், சீரோ மலங்கரா என்று பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமுதாயத்தில் நிலவும் வேற்றுமைகள் நீங்கவேண்டும் என்று செபிப்பதற்காக, கத்தோலிக்கத் திருஅவையில், ஒவ்வோர் ஆண்டும், சனவரி 18ம் தேதி முதல், 25ம் தேதி முடிய கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக செபிக்கும் வாரம், என்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சனவரி 25ம் தேதி, திருத்தூதரான புனித பவுல் மனமாற்றம் அடைந்த திருநாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை, இப்போது கடைபிடித்து வருகிறோம். இத்தருணத்தில், இவ்வுலகில், ஒன்றிப்பு முயற்சிகளைவிட, பாலங்களை அமைக்கும் முயற்சிகளைவிட, பிரிவுகளை உருவாக்கும் முயற்சிகளும், சுவர்களை எழுப்பும் முயற்சிகளும் வேரூன்றி வருவதைக் கண்டு வேதனையடைகிறோம்.

நீ, நான்... நீங்கள், நாங்கள்... நாம், அவர்கள்... நாம், அந்நியர்கள்... என்று மக்களைக் கூறுபோடும் வெறி வளர்வதால், சண்டைகளும், கலவரங்களும் பெருகிவருகின்றன. இக்கலவரங்களில் பெரும்பாலும் ஈடுபடுவது, காயப்படுவது, உயிர்பலியாவது யார்? இளையோரே. மதத்தின் பெயரால், அல்லது, இனத்தின் பெயரால், அடிப்படைவாதக் குழுக்கள் செய்துவரும் ‘மூளைச் சலவை’க்குப் (brainwash) பலியாகும் பல்லாயிரம் இளையோரைப் பற்றி நாம் அறிவோம்.

அடிப்படைவாதக் குழுக்களில் இணையும் இளையோரைக் குறித்து, Ellen Teague என்ற இளம்பெண், செய்தித்தாள் ஒன்றில் கூறியிருந்த எண்ணம், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "நாளைய உலகைப் பற்றிய நம்பிக்கையை இளையோர் இழந்து வருகின்றனர். அதனால், இன்றைய உலகை அழிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை" என்று அவர் சொன்னது, சிந்திக்கவேண்டிய உண்மை.

இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் இளையோருக்கு, நாம்-பிறஇனத்தவர் என்ற பிரிவுகளால் காயப்பட்டிருக்கும் நமக்கு, விவிலியத்தின் பல இடங்களில் இறைவன் கூறும் செய்தி, நம்பிக்கை தருகிறது. எடுத்துக்காட்டாக, இறைவாக்கினர் எசாயா வழியே இறைவன் வழங்கும் நம்பிக்கை செய்தி இதோ:

எசாயா 56: 1,6-7

ஆண்டவர் கூறுவது இதுவே; நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய "இறைமன்றாட்டின் வீடு" என அழைக்கப்படும்.

விவிலியத்தின் பல இடங்களில் காணக்கிடக்கும் இத்தகைய உறுதிமொழிகள், பலருக்கு, மன நிறைவையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. இன்றும் தருகின்றன. அவர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில், வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த காந்தி அவர்கள், விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை, ஆழமாக வாசித்தபின், ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக் கொடுமைகளில் சிக்கித்தவித்த இந்தியாவுக்கு, கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார். தன் விருப்பத்தை, நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடன், அவர், ஒரு ஞாயிறன்று, கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில், வெள்ளை இனத்தவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர், காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென அடுத்த வீதியில் உள்ள கோவிலுக்கு அவர் செல்லவேண்டும் என்றும் கூறினார். அன்று, அந்தக் கிறிஸ்தவக் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காந்தி அவர்கள், மீண்டும் அக்கோவிலுக்குள் நுழையவில்லை. “கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாக இருப்பதே மேல்" என்று, அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

எல்லா உண்மையான மதங்களிலும், ஒற்றுமை, அன்பு ஆகியவை, அடித்தள நெறிகளாக இருந்தாலும், பெரும்பாலான மதங்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களில், பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. யூத மதத்திலும், பாகுபாடுகளை வலியுறுத்த, மதத்தலைவர்கள் முயன்றனர். எருசலேமிலிருந்து வந்திருந்த பரிசேயர், மற்றும் மறைநூல் அறிஞருக்கும், இயேசுவுக்கும் இடையே, சுத்தமானது, தீட்டானது என்ற பாகுபாட்டை மையப்படுத்தி நிகழ்ந்த ஓர் உரையாடலை, சென்ற வாரத் தேடலில் சிந்தித்தோம். அந்த உரையாடலில், வாய்க்குள் செல்லும் எதுவும் மனிதரை தீட்டுப்படுத்தாது, மாறாக, மனதிலிருந்து வெளிவருவதே, மனிதரைத் தீட்டுப்படுத்தும் என்பதை, இயேசு, வலியுறுத்திக் கூறியதையும் கண்டோம். (மத்தேயு 15:10-11; மாற்கு 7:14-16)

தங்களையே உயர்வானவர்கள், சுத்தமானவர்கள் என்றும், புறவினத்தாரை தீட்டுப்பட்டவர்கள் என்றும் பாகுபடுத்தும் எண்ணங்களை பரிசேயர்கள், தங்கள் உள்ளத்தில் வளர்த்துக்கொண்டதே அவர்களைத் தீட்டுப்படுத்துகிறது என்பதை தெளிவுபடுத்திய இயேசு, தன் கூற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பதுபோல், புறவினத்தார் வாழ்ந்த ஒரு பகுதிக்குச் சென்றார் என்று, சென்ற விவிலியத்தேடலை நிறைவு செய்தோம்.

புறவினத்தார் வாழ்ந்த பகுதிக்கு இயேசு சென்றதை, இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். (மத். 15:21) என்று நற்செய்தியாளர் மத்தேயு சுருக்கமாகக் கூறியுள்ளார். நற்செய்தியாளர் மாற்கு, இதை, இன்னும் சிறிது விரிவாக, இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. (மாற்கு 7:24) என்று கூறியுள்ளார்.

"தாம் அங்கிருப்பதை... மறைக்க இயலவில்லை" என்ற கூற்று, விவிலிய விரிவுரையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களில் ஒருவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த W.L.Watkinson என்ற மெத்தடிஸ்ட் மறைப்பணியாளர். மாற்கு நற்செய்தியில் காணப்படும் இக்கூற்றை, அவர், அழகிய சில உருவகங்களுடன் விளக்குகிறார்.

“புதர்களுக்கிடையே, கண்ணுக்குத் தெரியாமல் மலர்ந்திருக்கும் 'வயலட்' மலர், காற்றில் தன் நறுமணத்தை கலந்து, அப்பக்கம் வருவோருக்கு தன் இருப்பை உணர்த்துகிறது. இரவில், மரக்கிளையில் அமர்ந்து பாடும் குயிலை நாம் காண இயலவில்லை எனினும், தன் குரல் வழியே, அது, தன்னையே அடையாளப்படுத்துகிறது. அதேவண்ணம், புறவினத்தார் வாழும் தீர் பகுதியில், இயேசு அறிமுகமானவர் இல்லையெனினும், அவரால், ஒரு வீட்டுக்குள் தன்னையே மறைத்துக்கொள்ள இயலவில்லை. அவரிலிருந்து வெளிப்பட்ட நன்மைத்தனம் அப்பகுதியை நிறைத்தது” என்று வாட்கின்சன் அவர்கள் கூறியுள்ளார்.

தீர், சீதோன் பகுதிக்கு இயேசு வந்திருப்பதை அறிந்த ஒரு பெண், தன் மகளுக்கு நலம் வேண்டி, இயேசுவை அணுகிவந்தார். மறைந்திருக்கும் எண்ணத்துடன் வந்திருந்த இயேசுவை, புறவினத்தைச் சேர்ந்த பெண் நாடிவந்ததை, வாட்கின்சன் அவர்கள் மற்றோர் உருவகத்தின் வழியே சித்திரிக்கிறார்.

"வீட்டில், சன்னலுக்கருகே, மலர்கள் அடங்கிய ஒரு தொட்டியை வைத்து, அச்சன்னலின் கதவுகளை மூடிவைத்தாலும், அம்மலர்களை நாடிவரும் தேனீக்கள், அம்மலர்களை அடையும் முயற்சியில், சன்னல் கதவுகளின் மீது முட்டிக்கொண்டிருக்கும். அதேபோல், இறைவன் தன்னையே மறைத்துக் கொண்டாலும், நம்பிக்கை கொண்டுள்ள இதயம், அவரை நாடிவரும்" என்று கூறியுள்ளார்.

வந்திருந்தவர், "ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனைத்தைச் சேர்ந்தவர்" (மாற்கு 7:26) என்று நற்செய்தியாளர் மாற்கும், அவர், "தீர் சீதோன் எல்லைப்பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண்" (மத்தேயு 15:22) என்று மத்தேயுவும் குறிப்பிட்டுள்ளனர்.  

நான்கு நற்செய்திகளிலும், இயேசு ஆற்றும் 35 புதுமைகளில், பெண்களை மையப்படுத்தி ஆற்றப்படும் புதுமைகள் ஏழு. யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில், முதல் புதுமையும், இறுதிப் புதுமையும், பெண்கள் விடுக்கும் விண்ணப்பத்தின் பேரில் இயேசு ஆற்றும் புதுமைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கானா திருமண விருந்தில் திராட்சை இரசம் தீர்ந்ததும், அன்னை மரியா விடுத்த விண்ணப்பத்தை இயேசு நிறைவேற்றியது, முதல் புதுமை. இலாசரை உயிர்ப்பிக்கும் இறுதிப் புதுமையிலும், இலாசரின் இரு சகோதரிகள் இயேசுவிடம் விடுத்த விண்ணப்பம், அவரை, பெத்தானியாவுக்கு அழைத்துச் சென்றது.

இவ்விரு புதுமைகள் நீங்கலாக, மீதி ஐந்து புதுமைகள், ஒத்தமை நற்செய்திகளில் பதிவாகியுள்ளன. பேதுருவின் மாமியார் குணமாதல், இறந்துபோன யாயீரின் மகள் உயிர் பெற்றெழுதல், இரத்தப்போக்கு நோயுள்ள பெண் இயேசுவின் ஆடைகளின் விளிம்பைத் தொட்டதால் குணமடைதல், ஆகிய இம்மூன்று பெண்களை மையப்படுத்திய புதுமைகளும், ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் பதிவாகியுள்ளன. கானானிய பெண், அல்லது, சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண் விடுத்த விண்ணப்பத்தின் பேரில் அவரது மகளை இயேசு குணமாக்கும் புதுமை, மத்தேயு, மற்றும் மாற்கு ஆகிய இரு நற்செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ஏழாவது புதுமையாக, லூக்கா நற்செய்தியில், நயின் நகரத்தைச் சேர்ந்த கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பிக்கும் புதுமையைக் காண்கிறோம். கானானிய அல்லது கிரேக்கப் பெண்ணின் மகளை இயேசு குணப்படுத்தும் புதுமையில் நம் தேடல் பயணத்தை அடுத்த வாரம் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2020, 14:58