இந்திய ஆயர் பேரவை (CCBI) இந்திய ஆயர் பேரவை (CCBI) 

சனவரி 26, அரசியலைமப்பு பாதுகாப்பு நாள்

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் ஒதுக்கப்படுவதை நாம் எல்லாரும் மிக உறுதியுடன் எதிர்க்க வேண்டும் - பேராயர் தாமஸ் டி சூசா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் சமயச்சார்பின்மையின் முக்கியத்துவத்தை குடிமக்கள் அனைவருக்கும் உணர்த்தும் நோக்கத்தில், குடியரசு நாளாகிய, சனவரி 26ம் தேதியை, அரசியலைமப்பு பாதுகாப்பு நாளாக, இந்திய கத்தோலிக்கத் திருஅவை அறிவித்துள்ளது.

இந்தியாவின் 71வது குடியரசு நாள் சிறப்பிக்கப்பட்ட சனவரி 26, இஞ்ஞாயிறன்று, திருப்பலியின் இறுதியில், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை அனைவரும் வாசிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தினர்.

கேரளாவின் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், கேரளாவின் சீரோ மலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் பேராயர் ஜோசப் பவாத்தில், கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா போன்றோர் உட்பட, தலத்திருஅவைத் தலைவர்கள் சிலர், இந்திய தலத்திருஅவையின் இந்நடவடிக்கை குறித்து, Indian Express நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளனர்.

கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள் கூறுகையில், நாடு, எப்போதும் இல்லாத அளவு, இப்போது ஒரு நெருக்கடியான சமுதாயச் சூழலை எதிர்கொண்டு வருகிறது, அரசியலமைப்பு நூலை முத்தமிட்டு பதவிப்பிரமாணம் செய்யும் பிரதமர், அந்த அரசியலமைப்பிலுள்ள விழுமியங்களை மீறுவதற்குரிய முயற்சிகளுக்கு இட்டுச் செல்கிறார் என்று கூறினார். இந்த மீறுதல்களில் முக்கியமானது, மதத்தின் அடிப்படையில் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவது என்றும், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் ஒதுக்கப்படுவதற்கெதிராய் நாம் ஓங்கி குரல்கொடுக்க வேண்டும் என்றும், பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள் கூறினார்.

குடியுரிமை சட்ட திருத்தம், மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே சிதைத்துவிடும் என்று சொல்லி, இதற்கு எதிரான போராட்டங்கள், இந்தியா எங்கும் வலுவடைந்து வருகின்றன. (National Herald)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2020, 15:08