தேடுதல்

மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!..." என்றார்  (யோவான் 1:29) மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!..." என்றார் (யோவான் 1:29) 

பொதுக்காலம் 2ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" (யோவான் 1:29) என்று திருமுழுக்கு யோவானால் அறிமுகமாகும் இயேசுவை ஏற்றுக்கொள்ள இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 2ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் (Copenhagen) நகரிலுள்ள எவாஞ்செலிக்கல் லூத்தரன் கோவிலில், இயேசுவின் அழகியதொரு திருஉருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. Christus என்றழைக்கப்படும் இச்சிலையை, Bertel Thorvaldsen என்ற சிற்பி வடிவமைத்தார்.

பளிங்குக் கல்லில் இயேசுவின் உருவத்தைச் செதுக்க விழைந்த பெர்டெல் அவர்கள், அதை, முதலில், களிமண்ணால் உருவாக்கினார். அவர் வடிவமைத்த உருவத்தின் முகமும், இரு கரங்களும் விண்ணை நோக்கி உயர்ந்திருப்பதைப் போல் அமைந்திருந்தன. களிமண்ணால் உருவாக்கப்பட்ட அச்சிலை, காய்ந்து கடினமாவதற்கு, பெர்டெல் அவர்கள், அதை, தன் கலைக்கூடத்தில், இரவு முழுவதும் விட்டுச்சென்றார்.

அன்றிரவு, கடலிலிருந்து வீசிய பனிக்காற்று, அக்கலைக்கூடத்தில் புகுந்து, களிமண்ணால் செய்யப்பட்டிருந்த இயேசுவின் உருவத்தை மேலும் ஈரமாக்கியது. உயர்த்தப்பட்ட கரங்களுடனும், விண்ணை நோக்கிய முகத்துடனும் வெற்றியை உணர்த்தும்வண்ணம் பெர்டெல் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இயேசுவின் உருவம், அந்த ஈரப்பதத்தின் காரணமாக, சிரம் தாழ்த்தி, கரங்களை கீழ் நோக்கி விரித்து, அனைவரையும் அணைப்பது போல் மாறியிருந்தது.

அடுத்த நாள் காலையில், கலைக்கூடம் வந்து சேர்ந்த சிற்பி பெர்டெல் அவர்கள், மாற்றமடைந்திருந்த அவ்வுருவத்தைக் கண்டு, அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தார். ஆனால், ஓரிரவில், தானாகவே மாற்றமடைந்திருந்த இயேசுவின் உருவம், அதுவரை தான் எண்ணிப்பார்க்காத ஓர் அழகிய இயேசுவை, தனக்குக் காட்டியதாக, சிற்பி பெர்டெல் அவர்கள் உணர்ந்தார். சிரம் தாழ்த்தி, கரங்களை விரித்து நின்ற அந்த உருவத்தை அவர் பளிங்குக் கல்லில் செதுக்கி, அந்த உருவத்திற்கு அடியில், "Kommer til mig" ("Come to me") அதாவது, "என்னிடம் வாருங்கள்" (மத். 11:28) என்ற சொற்களைப் பொறித்தார்.

வெற்றிப் பெருமிதத்துடன் விண்ணகம் நோக்கி தன் கண்களையும், கரங்களையும் உயர்த்தியிருந்த உருவத்தையும், 'என்னிடம் வாருங்கள்' என்று அழைப்பதுபோல் தன் கண்களையும், கரங்களையும் இவ்வுலகை நோக்கித் திருப்பியிருந்த உருவத்தையும், இயேசுவுக்கு காட்டி, அவரை, உலகிற்கு அறிமுகப்படுத்த எந்த உருவம் பொருத்தமாக இருக்கும் என்று கேட்டால், இயேசுவின் பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதை, நாம் எளிதில் கற்பனை செய்யமுடியும். இரக்கம், கருணை, வரவேற்பு என்ற பல பண்புகளை வெளிப்படுத்தும்வண்ணம், "என்னிடம் வாருங்கள்" என்று அழைக்கும் வடிவில் தான் அறிமுகமாவதையே இயேசு விரும்புவார்.

அத்தகைய ஓர் அறிமுகம், இன்றைய ஞாயிறு வழிபாட்டில் நமக்குத் தரப்பட்டுள்ளது. "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்." (யோவான் 1:29) என்று, திருமுழுக்கு யோவான், இயேசுவை அறிமுகம் செய்துவைக்கும் நற்செய்திக்கு செவிமடுக்கவும், அவ்வாறு அறிமுகமாகும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

கடந்த இரு வாரங்களாக, திருக்காட்சி, மற்றும் திருமுழுக்கு ஆகிய இரு நிகழ்வுகள் வழியே நமக்கு அறிமுகமான இயேசு, இன்று, மூன்றாவது வாரமாக, வேறொரு வழியில் அறிமுகமாகிறார். இந்த அறிமுகம், யோவான் நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ளது.

மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!..." என்றார்  (யோவான் 1:29). இன்றைய நற்செய்தி இவ்வாறு ஆரம்பமாகிறது. "நான் மெசியா அல்ல" (யோவான் 1:19) என்று முந்தின நாள் திட்டவட்டமாகக் கூறிய திருமுழுக்கு யோவான், மறுநாள், இயேசுவைக் கண்டதும், 'இதோ மெசியா' என்று அவரை அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" (யோவான் 1:29) என்று அவரை அறிமுகம் செய்து வைக்கிறார்.

'மெசியா' என்ற சொல்லின் முதல் பொருள், 'அர்ச்சிக்கப்பட்டவர்' என்றாலும், அந்த அர்ச்சிப்பின் விளைவாக, அவர் ஓர் அரசராக, தலைமைகுருவாக மாறும் நிலையும் அச்சொல்லுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி, அதிகாரம் என்ற எண்ணங்களுடன் தொடர்புள்ள 'மெசியா' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், 'ஆட்டுக்குட்டி' என்ற சொல்லின் வழியே, இயேசுவின் பணிவாழ்வை அறிமுகப்படுத்துகின்றனர், திருமுழுக்கு யோவானும், நற்செய்தியாளர் யோவானும்.

ஒருவரை முதல் முறையாகச் சந்திக்கும்வேளையில், அல்லது, அவர் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்படும் வேளையில், அவரைப்பற்றி நம் மனதில் பதியும் உருவம், எண்ணம் ஆகியவை ஆழமானதாக, நீண்ட காலம் நீடிப்பதாக அமையும் என்பதைக் கூற ஆங்கிலத்தில், "First impression is the best impression" என்ற கூற்று பயன்படுத்தப்படுகிறது. இதை மனதில் கொண்டே, ஒருவர் அறிமுகமாகும் வேளையில், அவரைப்பற்றி சொல்லப்படும் கருத்துக்களில் அதிக கவனம் செலுத்தப்படும்.

'ஆட்டுக்குட்டி' என்ற சொல்லில், பலியாகுதல், பாவங்களைச் சுமத்தல், விருந்தில் உணவாகுதல் போன்ற எண்ணங்கள் வெளிப்படுகின்றன. கூடுதலாக, பாஸ்கா இரவன்று, ஆட்டுக்குட்டியின் இரத்தம், கதவு நிலைகளில் பூசப்பட்டதால், இஸ்ரயேல் மக்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டனர். எனவே, 'ஆட்டுக்குட்டி' மக்களின் கவசமாகவும் அமைந்தது. பலியாதல், பழிதீர்த்தல், உணவாதல், உயிர்களைக் காத்தல் என்ற அனைத்து அர்த்தங்களும் இயேசுவுக்கு அற்புதமாகப் பொருந்தியிருந்ததால், அவரை, திருமுழுக்கு யோவான், "கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று அறிமுகப்படுத்தினார்.

இயேசு, 'கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று அறிமுகமாகும் இன்றைய நற்செய்தி, மனித வாழ்வில் நிகழும் அறிமுகங்கள், அவற்றில் பொதிந்திருக்கும் பொருள் ஆகியவற்றைச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது.

விளம்பரத்தை விரும்பும் இன்றைய உலகில், 'மக்கள் திலகம்', 'சூப்பர் ஸ்டார்', 'சாதனைப் புலி', 'லிட்டில் மாஸ்டர்'... போன்ற மிகைப்படுத்தப்பட்ட பட்டங்கள் வழியே தலைவர்கள், நடிகர்கள், மற்றும், விளையாட்டுவீரர்கள் அறிமுகம் செய்துவைக்கப்படுவதை நாம் அறிவோம். இவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களில் பூசப்பட்டிருக்கும் செயற்கைத்தனம், நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் நிரப்புகின்றது.

இத்தகைய ஒரு சூழலில், தங்கள் வாழ்வை மக்களின் நலனுக்காகக் கையளித்த பல உன்னத மனிதர்கள், தாங்கள் எவ்வாறு நினைவுகூரப்படவேண்டும் என்பதைக் குறித்து தெளிவான எண்ணங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கறுப்பினத்தவரின் சம உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர்.

1968ம் ஆண்டு, தன் 39வது வயதில் கொல்லப்பட்ட மார்ட்டின் லூத்தர் அவர்கள், இறப்பதற்கு இரு மாதங்களுக்கு முன், அட்லான்டா நகரில், எபனேசர் பாப்டிஸ்ட் ஆலயத்தில், தன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் அன்று தன் உரையில் கூறிய ஒரு சில எண்ணங்கள் இதோ:

"அவ்வப்போது நான் என் மரணத்தையும், என் அடக்கச் சடங்கில் என்ன சொல்லப்படும் என்பதையும் எண்ணிப் பார்த்திருக்கிறேன். உங்களில் யாராவது அவ்வேளையில் உயிரோடு இருந்தால், என் அடக்கச் சடங்கில் மறையுரை வழங்குபவரிடம், என்னைப்பற்றி அதிகம் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

நான் உலக அமைதி நொபெல் விருது பெற்றதைச் சொல்லவேண்டாம். அதேவண்ணம், நான் பெற்றுள்ள ஏனைய விருதுகளைக் குறித்து சொல்லவேண்டாம். அவை முக்கியமல்ல.

மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர், தன் வாழ்வை, மற்றவர்களுக்குப் பணியாற்றுவதற்காக வழங்கினார் என்று, அந்த மறையுரையாளர் சொல்லட்டும். பசித்தோருக்கு உணவளிக்கவும், ஆடையற்றோரை உடுத்தவும் நான் முயன்றேன். சிறைப்பட்டோரைச் சந்திக்க முயன்றேன். மனித குலத்திற்குப் பணியாற்ற முயன்றேன். மறையுரையாளர் இவற்றையெல்லாம் சொல்லட்டும்.

நான் எனக்குப்பின், சொத்துக்களை விட்டுச்செல்லப் போவதில்லை. ஆனால், ஒரு குறிக்கோளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை விட்டுச் செல்வேன். அதைமட்டும், என் அடக்கச் சடங்கில் சொல்லுங்கள்" என்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறினார். இந்த உரை வழங்கிய இரு மாதங்களில், 1968 ஏப்ரல் 4ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்.

தன் மரணத்தைக் குறித்தும், தான் எவ்வாறு நினைவுகூரப்படவேண்டும் என்பது குறித்தும் அவர் வழங்கிய உரை, அன்று பதிவு செய்யப்பட்டதால், இரு மாதங்களுக்குப் பின், அவரது அடக்கச் சடங்கில், அவ்வுரை மீண்டும் ஒலிபரப்பானது.

மக்களால் தான் எவ்விதம் நினைவுகூரப்படவேண்டும் என்பதில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள், மிகத் தெளிவான எண்ணங்கள் கொண்டிருந்தார். 1929ம் ஆண்டு, சனவரி 15ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் பிறந்ததையடுத்து, அவரது பிறந்தநாள், அமெரிக்க ஐக்கிய நாட்டில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் நாள் என்று, ஒவ்வோர் ஆண்டும், சனவரி மாதம் மூன்றாம் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 20, இத்திங்களன்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் நாள் சிறப்பிக்கப்படுகிறது.

நாம் யார், நாம் எவ்வாறு இவ்வுலகில் நம் அடையாளத்தைப் பதிக்கப்போகிறோம், எவ்வகையில் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற விழைகிறோம் என்பனவற்றைக் குறித்த தெளிவுகள் நமக்குத் தேவை. இத்தகையத் தெளிவு இல்லாதபோது, அவரைப் போல், இவரைப் போல் என்று போலி முகமூடிகளை அணிந்து வாழவேண்டியிருக்கும். இத்தகையத் தெளிவு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பை நமக்குள் உருவாக்கும். வேறு யாரும் நம்மை மதிப்பதற்கு முன், நமது பார்வையில் நாம் மதிப்புப் பெறவேண்டும். நமது பார்வையில், இறைவன் பார்வையில், நாம் மதிப்பு பெற்றவர்கள் என்பதை, இறைவாக்கினர் எசாயாவைப்போல், நாமும், நெஞ்சுயர்த்திச் சொல்ல இயலும்.

எசாயா 49: 3, 5

ஆண்டவர் என்னிடம், நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன் என்றார்... கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்: ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்.

ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மதிப்புப் பெறும்போதுதான், அடுத்தவரையும் நம்மால் மதிக்கமுடியும். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் திருமுழுக்கு யோவான், இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. தன்னைச் சுற்றிலும் எப்போதும் அலைமோதும் கூட்டத்தை யோவான் தன்வசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால், அப்படியே செய்திருக்க முடியும். தன்னைச் சுற்றி வாழ்க என்று குரலெழுப்பும் கூட்டத்தினால் தன் மதிப்பு உயர்வதாக யோவான் உணரவில்லை. இறைவனின் வழியை ஏற்பாடு செய்வதில்தான் தன் மதிப்பு அடங்கியுள்ளது என்று அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். எனவே, தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை இயேசுவின் பேரில் திருப்பினார், திருமுழுக்கு யோவான். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

யோவான் நற்செய்தி 1:29-30

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” என்றார்.

தன்னை விட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று சொல்வதற்கு, வார்த்தையளவில் ஒலிக்கும் தாழ்ச்சி மட்டும் போதாது. தன்னம்பிக்கையும், தன்னைப் பற்றியத் தெளிவும் தேவை. இத்தகையத் தெளிவும், நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் போலியானத் தாழ்ச்சி தெரியும். தன்னைப் பற்றிய உயர்வான எண்ணங்களும், தன்னைப் பற்றிய சரியான மதிப்பும் கொண்டிருந்தால் மட்டுமே, அடுத்தவரை உயர்வாக எண்ணமுடியும், மதிக்கமுடியும்.

நாம் ஒவ்வொருவரும் நம்மைப்பற்றி உண்மையான, உயர்வான மதிப்பு கொள்ளவும், அதன் பயனாக, மற்றவர்களையும் உயர்வாக மதிக்கவும், 'கடவுளின் ஆட்டுக்குட்டி'யான இயேசுவும், அவரை உலகிற்கு அறிமுகம் செய்த திருமுழுக்கு யோவானும், நமக்குச் சொல்லித்தர வேண்டுமென மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2020, 15:01