எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர், பியெர்பத்திஸ்தா பித்ஸபல்லா எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர், பியெர்பத்திஸ்தா பித்ஸபல்லா 

புனித பூமி காவலரின் புத்தாண்டு மறையுரை

ஓர் இல்லத்தில் அமைதி உருவாக, அவ்வில்லத்தின் அன்னையை நாம் பெரிதும் நம்பியிருப்பதுபோல, இவ்வுலகம் என்ற இல்லத்தின் அமைதிக்கு, நாம் அன்னை மரியாவை எதிர்நோக்கியிருக்கிறோம் - பேராயர் பித்ஸபல்லா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகின் அமைதியை, அன்னை மரியாவின் பரிந்துரையோடு நாம் பெற முடியும் என்ற நம்பிக்கையில், புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 'அன்னை மரியா இறைவனின் தாய்' என்ற பெருவிழாவன்று, உலக அமைதி நாளை நிறுவினார் என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர், பியெர்பத்திஸ்தா பித்ஸபல்லா (Pierbattista Pizzaballa) அவர்கள் கூறினார்.

சனவரி 1, இப்புதனன்று, புத்தாண்டு நாளின் திருப்பலியை தலைமையேற்று நடத்திய புனித பூமி காவலர், பேராயர் பித்ஸபல்லா அவர்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பிக்கப்பட்டு வரும் உலக அமைதி நாளைக் குறித்து தன் மறையுரையில் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஓர் இல்லத்தில் அமைதி உருவாக, அவ்வில்லத்தின் அன்னையை நாம் பெரிதும் நம்பியிருப்பதுபோல, இவ்வுலகம் என்ற இல்லத்தின் அமைதிக்கு, நாம் அன்னை மரியாவை எதிர்நோக்கியிருக்கிறோம் என்று, பேராயர் பித்ஸபல்லா அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு வெளியிட்டுள்ள உலக அமைதி நாள் செய்தியில், உரையாடல், ஒப்புரவு மற்றும் சுற்றுச்சூழலையொட்டிய மனமாற்றம் என்ற மூன்று அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளதை, பேராயர் பித்ஸபல்லா அவர்கள் நினைவுபடுத்தினார்.

உரையாடலும், ஒப்புரவும் புனித பூமியில் கடந்த பல ஆண்டுகளாகத் தேவைப்படுகிறது என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய பேராயர் பித்ஸபல்லா அவர்கள், புனித பூமியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் உரையாடலையும், ஒப்புரவையும் கொணர உழைக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இவ்வுலகில் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வது மட்டும் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று விரும்புவதால், திருத்தந்தை, தன் அமைதிச் செய்தியில் வலியுறுத்தியுள்ள உரையாடல் என்ற சொல், நம்மில் பலருக்கு எரிச்சலூட்டும் சொல்லாக மாறிவிட்டது என்று, பேராயர் பித்ஸபல்லா அவர்கள் குறிப்பிட்டார்.

புனித பூமியில் உள்ள தலத்திருஅவை, இறையழைத்தல், இறைவாக்குரைத்தல், செபித்தல், பிறரன்புப் பணியாற்றுதல், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் சமய உரையாடலை மேற்கொள்ளுதல் போன்ற கடமைகளை நிறைவேற்ற அழைக்கப்பட்டுள்ளது என்று, பேராயர் பித்ஸபல்லா அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2020, 15:01