தேடுதல்

Vatican News
இங்கிலாந்து ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் இங்கிலாந்து ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ்  (Vatican Media)

கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் - புத்தாண்டு செய்தி

இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய அரசு, மக்களுக்கு நல்ல வாய்ப்புக்களை உருவாக்கவும், தேவையில் உள்ளோருக்கு தகுந்த உதவிகள் வழங்கவும், வேண்டிக்கொள்வோம் - கர்தினால் நிக்கோல்ஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புதிய ஆண்டின் துவக்கத்தை, வாணவேடிக்கைகளுடன் கண்டபோது மகிழ்ந்த நாம், அதேபோல், நமது வாழ்வும் வண்ணங்கள் நிறைந்ததாக விளங்கவேண்டும் என்று விரும்பினோம் என்று, இங்கிலாந்து ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறினார்.

வெஸ்ட்மின்ஸ்டர் பேராயரான கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், புத்தாண்டிற்கென விடுத்துள்ள செய்தியில், நம் ஒவ்வொருவரையும் புத்துணர்வு பெறச் செய்வதற்கு ஏற்ற வழிகளைக் குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தான் 'Liverpool' கால்பந்தாட்டக் குழுவின் விசிறி என்பதை, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், இக்குழுவினர், 2019ம் ஆண்டில் அடைந்த வெற்றிகள் தொடரவேண்டும் என்ற விருப்பத்தையும், அதேபோல், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வெற்றிகள் தொடர்வதை விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.

இச்செய்தியின் இறுதியில், புதிய ஆண்டில் இறைவனிடம் சமர்ப்பிக்கும் ஐந்து கருத்துக்களை ஒரு செபத்தின் வடிவத்தில், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய அரசு, மக்களுக்கு நல்ல வாய்ப்புக்களை உருவாக்கவும், தேவையில் உள்ளோருக்கு தகுந்த உதவிகள் வழங்கவும், வேண்டிக்கொள்வோம் என்பது, கர்தினால் வெளியிட்டுள்ள முதல் விண்ணப்பம்.

அதேபோல், வர்த்தக, பொருளாதார நிறுவனங்கள், தன்னார்வப் பணி நிறுவனங்கள், ஆகியவை மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் வெளியிட்டுள்ளார்.

அண்மையில், இலண்டன் மாநகரில், யூதர்களுக்கு எதிராக எழுந்துள்ள வெறுப்பு உணர்வுகள் களையப்படவேண்டும் என்றும், அனைத்து மக்களும் பொறுப்புணர்வுடன் சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபடவேண்டும் என்றும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்களின் புத்தாண்டு செய்தி விண்ணப்பித்துள்ளது.

02 January 2020, 14:57