மெக்சிகோ ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Rogelio Cabrera López மெக்சிகோ ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Rogelio Cabrera López 

மெக்சிகோ ஆயர்களின் புத்தாண்டு செய்தி

குடிபெயர்ந்தோருக்கு உதவிசெய்ய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிவைத்த 5 இலட்சம் டாலர்கள், மெக்சிகோ தலத்திருஅவையில் 32 உதவி திட்டங்களை துவக்க உதவியாக இருந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடிபெயரும் மக்கள், சிறியோரின் பாதுகாப்பு, வன்முறை, சமய சுதந்திரம் ஆகிய பிரச்சனைகளை, மெக்சிகோ தலத்திருஅவை 2019ம் ஆண்டு சந்தித்துள்ளது என்று, அந்நாட்டு ஆயர் பேரவை, 2020ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளது.

குடிபெயர்ந்தோர் பிரச்சனை

மெக்சிகோ ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Rogelio Cabrera López அவர்கள் கையொப்பமிட்டு, சனவரி 14ம் தேதி வெளியான இம்மடலில், கடந்து சென்ற ஆண்டை பின்னோக்கிப் பார்க்கையில், 2018ம் ஆண்டு முதல், மெக்சிகோ நாட்டை வந்தடைந்துள்ள குடிபெயர்ந்தோரின் பிரச்சனை பெரியதொரு சவாலாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

குடிபெயர்ந்தோருக்கு உதவிசெய்ய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிவைத்த 5 இலட்சம் டாலர்கள், 32 உதவி திட்டங்களை துவக்க உதவியாக இருந்தது என்று கூறும் இம்மடல், குடிபெயர்ந்தோரின் உணவு, உடை, உறைவிடம் என்ற தேவைகள் ஒவ்வொருநாளும் கூடிவருகின்றன என்று சுட்டிக்காட்டுகிறது.

சிறியோரின் பாதுகாப்பு

சிறியோரின் பாதுகாப்பு குறித்து பேசும் இம்மடல், இந்தப் பிரச்சனைக்கு உதவியாக, நாடெங்கும் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், 400க்கும் அதிகமான அருள்பணியாளர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில், இதுவரை 217 பேர், அருள்பணித்துவ நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், இம்மடல் எடுத்துரைக்கிறது.

வன்முறைக் கலாச்சாரம்

2019ம் ஆண்டு, ஆலயங்கள், அருள்பணியாளர்கள், மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ள வன்முறைகள் மிக அதிகமாக இருந்தன என்றும், சமுதாயத்தில் உருவாகியுள்ள வன்முறைக் கலாச்சாரத்தை மாற்ற, 272 மையங்கள், தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்றும், ஆயர்களின் மடல் கூறுகின்றது.

புலந்திருக்கும் 2020ம் ஆண்டில் அமைதி, ஒப்புரவு, உரையாடல் ஆகியவை வளரும் என்ற நம்பிக்கையுடன் நாம் இந்த ஆண்டை எதிர்நோக்கியிருக்கிறோம் என்று ஆயர்களின் மடல் நிறைவு பெறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2020, 14:33