பிலிப்பீன்ஸ் நாட்டில் கருப்பு நசரேன் பக்தி முயற்சி பிலிப்பீன்ஸ் நாட்டில் கருப்பு நசரேன் பக்தி முயற்சி 

போர்ச் சூழல் கொழுந்துவிட்டு எரியாமல் இருக்க செபிப்போம்

பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பணியாற்றச் சென்றிருப்போர், எவ்வித ஆபத்துக்கும் உள்ளாகாமல் இருக்க நாம் செபிக்கவேண்டும் - கர்தினால் தாக்லே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈரான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு இடையே பழிக்குப் பழி வாங்கும் உணர்வு மேலோங்காமல் இருக்க, அனைவரும் மிக உருக்கமாகச் செபிப்போம் என்று, மணிலா பேராயரும், நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் புதிய தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், சனவரி 9, இவ்வியாழனன்று விண்ணப்பம் விடுத்தார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் மிகப் புகழ்பெற்ற கருப்பு நசரேன் பக்தி முயற்சியின் முக்கியப் பகுதியான ஊர்வலத்தின் துவக்கத்தில், சனவரி 9 காலை திருப்பலியாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் உருவாகியிருக்கும் போர்ச் சூழல் மேலும் கொழுந்துவிட்டு எரியாமல் இருக்க செபிப்போம் என்று சிறப்பான முறையில் கேட்டுக்கொண்டார்.

பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பணியாற்றச் சென்றிருப்போர், எவ்வித ஆபத்துக்கும் உள்ளாகாமல் இருக்கவும் நாம் செபிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்த கர்தினால் தாக்லே அவர்கள், கூடியிருந்த அனைவரையும் மத்தியக் கிழக்கு பகுதியின் அமைதிக்காக மௌனமாகச் செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பிலிப்பீன்ஸ் அரசு, விடுத்துள்ள ஓர் அறிக்கையின்படி, ஈராக் நாட்டில் 2,191 பிலிப்பீன்ஸ் குடிமக்கள் பணியாற்றுகின்றனர் என்றும், இவர்களில் 1,800க்கும் மேற்பட்டோர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவத்திற்கு பணியாற்றும் முகாம் பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

சனவரி 9, இவ்வியாழனன்று நடைபெற்ற கருப்பு நசரேன் பக்தி ஊர்வலத்தில் 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்றும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த 12,000த்திற்கும் அதிகமான காவல்துறையினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2020, 15:54