தேடுதல்

ஜகார்த்தா பேரிடர் ஜகார்த்தா பேரிடர்  

ஜகார்த்தா பேரிடர் மீட்புப் பணியில் கத்தோலிக்கர்

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் இறுதியில் தொடங்கும் மழை காலத்தில் ஜகார்த்தா பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுவது இயல்பு. ஆயினும், 2013ம் ஆண்டுக்குப்பின், இவ்வாண்டில் அப்பகுதி கனமழையால் கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தா பகுதியை அண்மையில் தாக்கிய பெருவெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளில், இன்னும் காணாமல்போயுள்ளோரைத் தேடும் பணியில், கத்தோலிக்கத் தலத்திருஅவை, இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புடன் இணைந்து செயலாற்றி வருகின்றது என்று ஆசியச் செய்தி கூறுகின்றது.

இந்தோனேசிய கத்தோலிக்க சமுதாயம் உட்பட, நாடு முழுவதும், நாட்டுப்பற்று மற்றும், பரிவிரக்க உணர்வுடன் இப்பேரிடர் நெருக்கடி எதிர்கொள்ளப்படுகின்றது என்று, ஜகார்த்தா உயர்மறைமாவட்டம் கூறியுள்ளது.

பெருவெள்ளத்தால் கட்டாயமாக வீடுகளைவிட்டு வெளியேறியுள்ள 35 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள், கத்தோலிக்க ஆலயங்கள் உட்பட அரசின் கட்டடங்கள் மற்றும், வழிபாட்டுத்தலங்களில் அடைக்கலம் தேடியுள்ளனர். 

ஜகார்த்தா உயர்மறைமாவட்ட மனிதாபிமான அமைப்பு (Lembaga Daya Dharma Keuskupan Agung Jakarta), பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான மருந்துகள் உட்பட அடிப்படை உதவிகளை ஆற்றி வருகின்றது. 

BNPB எனப்படும், இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பேச்சாளர் Agus Wibowo அவர்களின் அறிக்கையின்படி, ஏறத்தாழ நான்கு இலட்சம் பேர், தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2020, 15:08