தேடுதல்

Vatican News
திருப்பலி வாசக நூல் திருப்பலி வாசக நூல் 

இந்தியாவில் ஆங்கிலத்தில் புதிய திருப்பலி வாசக நூல்

இந்தியாவில் புதிய ஆங்கில திருப்பலி வாசக நூல், வருகிற பிப்ரவரி 16ம் தேதி வெளியிடப்படும். அந்நூல், வருகிற ஏப்ரல் 5ம் தேதி குருத்தோலை ஞாயிறிலிருந்து நடைமுறைக்குவரும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இந்திய கத்தோலிக்க இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, ஆங்கில மொழியில் புதிய திருப்பலி வாசக நூலை, வருகிற பிப்ரவரி மாதம் 16ம் தேதி வெளியிடும் என்றும், அந்நூல், வருகிற ஏப்ரல் மாதம் 5ம் தேதி குருத்தோலை ஞாயிறிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய ஆங்கில திருப்பலி வாசக நூல் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ள, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைமைக்குழு, இப்புதிய நூல், இந்திய திருஅவை வரலாற்றில் ஒரு மைல்கல் என்றும், இது, உலகளாவிய திருஅவைக்கு, இந்திய திருஅவையின் பங்களிப்பு என்றும் கூறியுள்ளது.

வாழ்வில் கடவுளின் வல்லமைமிக்க அருளாக, இந்நூலை நாம் வரவேற்குமாறும் அக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவைக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள இப்புதிய வாசக நூல், இறைவார்த்தை பற்றிய நம் புரிதலை ஆழப்படுத்தவும், அதன் வழியாக நாம் அனைவரும் திருவழிபாட்டில் உயிர்த்துடிப்புடன் பங்குகொள்ளவும், நம்மை முழுமையாகவும், முழு உணர்வுடனும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கவும் அழைப்பு விடுக்கின்றது என்று, அக்குழு கூறியுள்ளது.

மூன்று தொகுப்புகளாக அச்சிடப்பட்டுள்ள இந்த புதிய திருப்பலி வாசக நூலில், English Standard Version Catholic Edition (ESVCE) விவிலியம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், விவிலியத்தின் மூல கையெழுத்துப் பிரதியை, மிகத்துல்லியமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக, ESVCE விவிலியப் பிரதி கருதப்படுகின்றது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை தலைவரான கோவா பேராயர் பிலிப்பிநேரி ஃபெராவோ, துணைத் தலைவரான சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனி சாமி, செயலரான, டெல்லி பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ ஆகிய மூவரும் இப்புதிய வாசக நூல் பற்றிய அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

21 January 2020, 15:13