தேடுதல்

கிறிஸ்மஸ் காலத்தில் சாக்கடலில் கிறிஸ்தவ திருப்பயணிகள் கிறிஸ்மஸ் காலத்தில் சாக்கடலில் கிறிஸ்தவ திருப்பயணிகள் 

'புனித பூமியின் ஒருங்கிணைப்பு' குழு - ஆயர்களின் வேண்டுகோள்

புனித பூமியின் காசா பகுதி, ஒரு திறந்தவெளி சிறையாக உள்ளது, அங்கு மனித உரிமைகள் பெருமளவு மறுக்கப்படுவதால், மனிதாபிமான நெருக்கடி நிலை அங்கு உருவாகியுள்ளது - ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைத்து மக்களுக்கும் மாண்பு என்ற விழுமியத்தின் அடிப்படையில், புனித பூமியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரு அரசுகளும், புதிய அரசியல் தீர்வுகளைக் காணவேண்டும் என்று, உலக ஆயர்களின் பிரதிநிதிகள் விண்ணப்பம் விடுத்துள்ளனர்.

'புனித பூமியின் ஒருங்கிணைப்பு' என்ற பெயரில், ஒவ்வோர் ஆண்டும் புனித பூமிக்கு பயணம் மேற்கொண்டுவரும் ஆயர்களின் குழு, சனவரி 11ம் தேதி முதல், 16ம் தேதி முடிய அங்கு மேற்கொண்ட ஒரு பயணத்தின் முடிவில், இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளது.

பன்னாட்டு சட்டங்களைப் பின்பற்றுதல், பாலஸ்தீனா என்ற நாட்டை அங்கீகரிக்க, திருப்பீடம் வழங்கியுள்ள வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை, இரு அரசுகளும் பின்பற்றுமாறு, ஆயர்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காசா பகுதியில் நிலவும் சூழலைப் பார்வையிட்ட ஆயர்கள், அப்பகுதி, ஒரு திறந்தவெளி சிறையாக உள்ளது என்றும், அங்கு மனித உரிமைகள் பெருமளவு மறுக்கப்படுவதால், மனிதாபிமான நெருக்கடி நிலை அங்கு உருவாகியுள்ளது என்றும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் எடுத்துரைக்கின்றனர்.

அப்பகுதியில், அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் ஆகியவை இல்லாதச் சூழலிலும், அங்குள்ள மக்கள், தங்களை வரவேற்று விருந்தோம்பியது, தங்கள் உள்ளங்களைத் தொட்டது என்றும், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு, அருள்பணியாளர்களும், இருபால் துறவியரும் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குரியன என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

புனித பூமிக்குச் செல்லும் திருப்பயணிகளும், இன்னும் உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும், இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே, நீதியான நல்லுறவு வளர செபிக்குமாறு, ஆயர்கள், தங்கள் அறிக்கையின் இறுதியில், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2020, 14:12