தேடுதல்

Vatican News
அரசுத் தலைவரும் கர்தினாலும் சந்திப்பு அரசுத் தலைவரும் கர்தினாலும் சந்திப்பு 

கிறிஸ்மஸ் விழாவையொட்டி, ஜகார்த்தாவில் பல்சமய கூட்டம்

ஜகார்த்தா பேராயர் கர்தினால் Ignatius Suharyo அவர்கள் தலைமையேற்று நடத்திய கிறிஸ்மஸ் பல்சமய வழிபாட்டில், இந்தோனேசியாவின் அரசுத்தலைவர், Joko Widodo அவர்கள் கலந்துகொண்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, இந்தோனேசியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவையும், கிறிஸ்தவ சபைகளின் கழகமும் இணைந்து, ஜகார்த்தாவில் பல்சமய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், ஜகார்த்தா பேராயருமான கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்த பல்சமய வழிபாட்டில், இந்தோனேசியாவின் அரசுத்தலைவர், Joko Widodo அவர்கள் கலந்துகொண்டார்.

"நாம் நண்பர்களாய் இருப்போம்" (யோவான் 15:14-15) என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இந்தப் பல்சமய கூட்டத்தில், கத்தோலிக்கர், கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் என்று, 10,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்று, ஆசிய செய்தி கூறியுள்ளது.

இக்கூட்டத்தின் முதல் பகுதியில், கர்தினால் Suharyo அவர்கள் தலைமையேற்று நடத்திய திருப்பலி முடிவுற்றபின், இரண்டாம் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது, இந்தோனேசிய அரசுத் தலைவர் உட்பட, பல அரசு, மற்றும் சமயத் தலைவர்கள் வாழ்த்துரைகள் வழங்கினர்.

இந்தோனேசியாவில் நிலவும் பன்முகத்தன்மையைக் கொண்டாட, கிறிஸ்மஸ் காலம் தகுந்ததொரு தருணம் என்றும், இத்தகைய சமுதாய இணக்கத்தை நாம் புத்தாண்டிலும் தொடரவேண்டும் என்றும் அரசுத்தலைவர் Widodo அவர்கள் கூறினார்.

அண்மையக் காலங்களில் வெறுப்பைத் தூண்டும் மேடைப் பேச்சுக்களும், இணையதள பகிர்வுகளும் இடம்பெற்றுவருவதால், "நாம் நண்பர்களாய் இருப்போம்" என்ற சொற்கள், இவ்விழாவின் மையக் கருத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டன என்று கர்தினால் Suharyo அவர்கள் சுட்டிக்காட்டினார். (AsiaNews)

02 January 2020, 15:06