தேடுதல்

Vatican News
இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்ததாக நம்பப்படும் திருத்துணி இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்ததாக நம்பப்படும் திருத்துணி  (Vatican Media)

இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்த துணி 2020ல்..

Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுமத்தின் ஐரோப்பிய இளைஞர்களின் அடுத்த கூட்டம், 2020ம் ஆண்டு டிசம்பர் 28 முதல், 2021ம் ஆண்டு சனவரி 1 வரை இத்தாலியின் தூரின் நகரில் நடைபெறும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் தூரின் நகர் பேராலயத்தில் வைத்து பாதுகாக்கப்படும், இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்ததாக நம்பப்படும் திருத்துணி, 2020ம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுமம், ஐரோப்பிய இளைஞர்கள் கூட்டத்தை, 2020ம் ஆண்டு டிசம்பரில், தூரின் நகரில் நடத்தவிருப்பதை முன்னிட்டு, அச்சமயத்தில் அந்த திருத்துணி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“இப்பூமியில் நம்பிக்கை திருப்பயணம்” என்ற தலைப்பில், டிசம்பர் 28, கடந்த சனிக்கிழமை முதல், சனவரி 01, இப்புதன் வரை, போலந்து நாட்டின் Wroclaw நகரில் நடைபெற்ற Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுமத்தின், ஐரோப்பிய இளைஞர்கள் கூட்டத்தில், இதனை அறிவித்தார், தூரின் பேராயர் Cesare Nosiglia.

ஐரோப்பிய இளைஞர்களின் அடுத்த கூட்டம், 2020ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதல், 2021ம் ஆண்டு சனவரி ஒன்றாந் தேதி வரை, இத்தாலியின் தூரின் நகரில் நடைபெறும் என்று, Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுமம் அறிவித்துள்ளது.

இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்ததாக நம்பப்படும் திருத்துணி, 2000மாம் யூபிலி ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. அதற்குப்பின், ஐந்தாவது முறையாக, 2020ம் ஆண்டு டிசம்பரில் திறந்து வைக்கப்படவுள்ளது.

2015ம் ஆண்டு, ஏப்ரல் 19ம் தேதியிலிருந்து சூன் 24ம் தேதி வரை, தூரின் பேராலயத்தில் அத்திருத்துணி பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. அந்த ஆண்டு சூன் 21 முதல் 22 வரை தூரின் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதைப் பார்வையிட்டு செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

01 January 2020, 16:13