தேடுதல்

Vatican News
Auschwitz வதைமுகாம் நுழைவாயில் Auschwitz வதைமுகாம் நுழைவாயில் 

Auschwitz நினைவு நாள் - வெறுப்புணர்வுக்கு எதிராக கண்டனம்

உடனடி அரசியல் தேவைகளுக்காக, உண்மை மறக்கப்படுவதையும், அது சொந்த ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துப்படுவதையும் அனுமதிக்க முடியாது - ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித மாண்பை மிதித்து நசுக்கும் இனப்பாகுபாடு, அந்நியர் மீது வெறுப்பு, யூதமத விரோதம் ஆகிய அனைத்து செயல்களுக்கு எதிராக நாம் எல்லாரும் போராட வேண்டுமென்று, ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர்கள், அழைப்பு விடுத்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் Auschwitz-Birkenau நாத்சி வதைமுகாமில் சிறைப்படுத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, CCEE எனப்படும், ஐரோப்பிய ஆயர்கள் பேரவை கூட்டமைப்பு மற்றும், COMECE எனப்படும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர்கள் பேரவையின் தலைமைக்குழு கையெழுத்திட்டு, சனவரி 25, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டின் உரிமையும், சுதந்திரமும், சனநாயகமும், கலாச்சாரமும் மதிக்கப்படவும், ஒப்புரவும் அமைதியும் நிலவவும், இந்த 75ம் ஆண்டு நிறைவு நாளில், நவீன உலகை கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், உடனடி அரசியல் தேவைகளுக்காக, உண்மை மறக்கப்படுவதையும், அது, சொந்த ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துப்படுவதையும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

மெழுகுதிரி ஏற்றி செபம்

Auschwitz-Birkenau வதைமுகாமில் சிறைப்படுத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை நினைவுகூரும் முறையில், சனவரி 27 வருகிற திங்கள், ஐரோப்பிய நேரம் மாலை 3 மணிக்கு, அனைவரும் மெழுகுதிரி ஏற்றி, இந்த மரண முகாமில் இறந்த அனைத்து நாட்டினர், மதத்தவர் மற்றும், அவர்களின் உறவினர்களுக்காகச் செபிப்போம் என்றும், ஐரோப்பிய ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த கால கொடூரமான அனுபவங்கள் இருக்கின்றபோதிலும், இப்போதும் இந்த உலகம், வன்முறையின் புதிய அச்சுறுத்தல்கள் மற்றும், வன்முறை போராட்டங்களில் வாழ்ந்து வருகின்றது என்று கூறியுள்ள ஆயர்கள், வன்முறை ஒருபோதும் அமைதிக்கு இட்டுச்செல்லாது என்று வரலாறு நமக்குக் கற்பித்திருந்தாலும், அதற்கு முரணாக, அதிக வன்முறையும், மரணமும் இடம்பெற்று வருகின்றது என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய மூவருமே, இந்த முன்னாள் வதைமுகாமைப் பார்வையிட்டு செபித்துள்ளனர் என்றுரைக்கும் ஆயர்கள், நாத்சிகளால் இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதைப் போன்று, கமயூனிச சர்வாதிகாரத்திலும் இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வதைமுகாமில், 1942க்கும், 1945ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், 10 இலட்சத்திற்கு அதிகமான யூதர்கள், 75 ஆயிரம் போலந்து நாட்டவர், 21 ஆயிரம் ரோமா இனத்தவர், 15 ஆயிரம் இரஷ்யர்கள், இன்னும், பிற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கைதிகள் போன்றோர், ஜெர்மன் தேசிய சோசலிஷவாதிகளால் கொல்லப்பட்டனர் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

1945ம் ஆண்டு சனவரி மாதம் 27ம் தேதி, ஐரோப்பிய நேரம் மாலை 3 மணிக்கு, சோவியத் படைகள், Auschwitz-Birkenau வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த மக்களை விடுதலை செய்தன. இந்நிகழ்வின் 75ம் ஆண்டு நிறைவு, சனவரி 27, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

25 January 2020, 16:10