தேடுதல்

2019ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, புனித ரொமேரோ அவர்கள் மறைவின் 39வது நினைவு நாள் 2019ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, புனித ரொமேரோ அவர்கள் மறைவின் 39வது நினைவு நாள்  

எல் சால்வதோர் நாட்டில் மறைசாட்சிகளின் யூபிலி ஆண்டு

எல் சால்வதோர் நாட்டில், புனித ரொமேரோ, அருள்பணியாளர்கள் கிராந்தே, மற்றும் ஸ்பெசோத்தோ கொல்லப்பட்டதற்கு பின்புலத்தில் உள்ள முழு உண்மைகளை எல் சால்வதோர் அரசு கண்டுபிடித்து, மக்களுக்கு அறிவிக்கவேண்டும் - எல் சால்வதோர் ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எல் சால்வதோர் நாட்டில், 2020ம் ஆண்டு, மறைசாட்சிகளின் யூபிலி ஆண்டாக கொண்டாடப்படும் என்று அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

சான் சால்வதோர் பேராயராகப் பணியாற்றிவந்த புனித ஆஸ்கர் அர்னுல்ஃபோ ரொமேரோ அவர்கள், 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, திருப்பலியாற்றிய வேளையில் கொல்லப்பட்டதையடுத்து, இவ்வாண்டு நினைவுகூரப்படும் 40ம் ஆண்டு நிறைவு, மறைசாட்சிகளின் யூபிலி ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.

"அனைவரும் வாழ்வை நிறைவாகப் பெறும் பொருட்டு (காண்க. யோவான் 10:10) தன் உயிரை வழங்கிய கிறிஸ்துவைப் பின்பற்றி தங்கள் உயிரை வழங்கியோர், கிறிஸ்துவுக்கு மிக உன்னத சாட்சிகளாக திகழ்கின்றனர்" என்று, எல் சால்வதோர் ஆயர் பேரவை, இந்த யூபிலி ஆண்டுக்கென வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த யூபிலி ஆண்டின் சிறப்பு நிகழ்வுகளாக, மார்ச் 12ம் தேதி, இயேசு சபை அருள்பணியாளர் உருத்தீலியோ கிராந்தே (Rutilio Grande) அவர்கள் கொல்லப்பட்டதன் 43ம் ஆண்டு நிறைவு, மார்ச் 24ம் தேதி, புனித ரொமேரோ அவர்கள் மரணத்தின் 40ம் ஆண்டு நிறைவு, மற்றும் ஜூன் 14ம் தேதி, பிரான்சிஸ்கன் அருள்பணியாளர், கோஸ்மே ஸ்பெசோத்தோ (Cosme Spessotto) அவர்கள் கொல்லப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவு ஆகிய நினைவுகள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று மறைசாட்சிகளும் கொல்லப்பட்டதற்கு பின்புலத்தில் உள்ள முழு உண்மைகளை, எல் சால்வதோர் அரசு கண்டுபிடித்து, மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும், எல் சால்வதோர் ஆயர்கள், அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2020, 15:25