தேடுதல்

Vatican News
கிறிஸ்மஸ் வழிபாட்டில், காப்டிக் திருத்தந்தை 2ம் Tawadros மற்றும் எகிப்து அரசுத்தலைவர் Al Sisi கிறிஸ்மஸ் வழிபாட்டில், காப்டிக் திருத்தந்தை 2ம் Tawadros மற்றும் எகிப்து அரசுத்தலைவர் Al Sisi  (AFP or licensors)

காப்டிக் கிறிஸ்மஸ் வழிபாட்டில், எகிப்து அரசுத்தலைவர்

மத்தியக் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் அமைதியற்ற நிலைக்கு, அப்பகுதியில் வாழும் மக்கள் காரணம் அல்ல; இந்த அமைதியற்ற, நெருக்கடியான நிலை வெளியிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது - எகிப்து அரசுத்தலைவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல வழிகளிலும் மாண்பு குறைந்துவரும் இந்நாள்களில், நாம் தொடர்ந்து மாண்புடன் வாழ்வோம், மாண்புள்ள மக்களுக்கு இறைவன் வெற்றியளிப்பார் என்பதை நாம் நம்புகிறோம் என்று, எகிப்து நாட்டின் அரசுத்தலைவர் Abdel Fattah al Sisi அவர்கள் தான் கலந்துகொண்ட கிறிஸ்மஸ் வழிபாட்டில் கூறினார்.

சனவரி 6, இத்திங்களன்று, எகிப்தின் காப்டிக் வழிபாட்டு முறை திருஅவையில், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் திருவிழிப்பு வழிபாட்டினை, காப்டிக் வழிபாட்டு முறை திருத்தந்தையான 2ம் Tawadros அவர்கள் தலைமையேற்று நடத்திய வேளையில், இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட அரசுத்தலைவர் Al Sisi அவர்கள் இவ்வாறு கூறினார்.

நாம் உண்மையில் இறைவனை அன்புசெய்பவர்கள் எனில், நாம் ஒருவர் ஒருவரையும் அன்பு செய்யவேண்டும், அவ்வாறு நாம் வாழும்போது, நம்மிடையே பகைமையை விதைக்க யாராலும் இயலாது என்று அரசுத்தலைவர் Al Sisi அவர்கள் எடுத்துரைத்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் அமைதியற்ற நிலைக்கு, அப்பகுதியில் வாழும் மக்கள் காரணம் அல்ல என்றும், இந்த அமைதியற்ற, நெருக்கடியான நிலை, வெளியிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்ட அரசுத்தலைவர் Al Sisi அவர்கள், இத்தகைய நிலையில் நாம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நம்மிடையே உறுதியான அன்பு நிலவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கெய்ரோ நகருக்கருகே 45 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காப்டிக் பேராலயம், இயேசுவின் பிறப்புக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும், எகிப்தின் அரசுத்தலைவர், Al Sisi அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளாக, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் திருவிழிப்பு வழிபாட்டில் பங்கேற்று வருகிறார் என்றும் பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

08 January 2020, 15:20