தேடுதல்

ஆஸ்திரேலியாவின்  பெரும்பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீ ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீ 

ஆஸ்திரேலிய பேரிடர் துடைப்பில் கத்தோலிக்கர்

ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில், ஒரு கோடியே 20 இலட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் கருகியுள்ளது. இது, கடந்த ஆண்டில் அமேசானில் தீப் பற்றியெரிந்த காட்டுப்பகுதியைவிட இருமடங்கு அதிகம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது அந்நாட்டின்  பெரும்பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.

இந்த இயற்கை பேரிடர் குறித்து ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான Brisbane பேராயர் Mark Coleridge அவர்கள், சனவரி 7, இச்செவ்வயான்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பேரிடரில் உயிரைப் பணயம் வைத்து மீட்புப்பணியாற்றும் தீயணைப்புப் படையினரைப் பாராட்டியுள்ளார்.

இத்துன்பங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் பணி, மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது என்று கூறியுள்ள பேராயர் Coleridge அவர்கள்,  வார்த்தைகளைவிட செயல்கள் மேலும் அதிகம் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள், மற்றும், துறவு சபைகள் அனைத்தும் இடர்துடைப்புப் பணிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பேராயரின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில், ஒரு கோடியே 20 இலட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் கருகியுள்ளது. இது, கடந்த ஆண்டில் அமேசானில் தீப் பற்றியெரிந்த காட்டுப்பகுதியைவிட இருமடங்கு அதிகம் எனக் கூறப்படுகின்றது.

மேலும், ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து காட்டுத்தீயில் சிக்கி இலட்சக்கணக்கான விலங்குகள் இறந்துள்ளன, அவ்வெண்ணிக்கை இதுவரை 50 கோடி எனவும், இரண்டாயிரம் வீடுகள் எரிந்துள்ளன எனவும் செய்திகள் கூறுகின்றன. (Catholicleader)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2020, 15:04