புனித பூமியில் பணியாற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் புனித பூமியில் பணியாற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் 

புனித பூமியில் கூடுதலான மோதல்கள் உருவாகும் ஆபத்து

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாலஸ்தீன திட்டம் குறித்து, புனித பூமியில் பணியாற்றும், அனைத்து கிறிஸ்தவ மதத் தலைவர்களும், தங்கள் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளியிட்டுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், இஸ்ரேல், பாலஸ்தீன மோதல்களைத் தீர்க்க வழங்கியுள்ள ஒரு தீர்வு, இன்னும் கூடுதலான மோதல்களை உருவாக்கும் ஆபத்து உள்ளது என்று, புனித பூமியில் பணியாற்றும் அனைத்து கிறிஸ்தவ மதத்தலைவர்களும் கூறியுள்ளனர்.

சனவரி 28, இச்செவ்வாயன்று, அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு திட்டம் குறித்து, இப்புதனன்று, புனித பூமியில் பணியாற்றும், கத்தோலிக்க, மெல்கித்திய, மாரோனைட், சிரிய, ஆர்மேனிய மற்றும் கல்தேய வழிபாட்டு முறைகளைச் சேர்ந்த அனைத்து மதத் தலைவர்களும், தங்கள் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அரசுத்தலைவர் வெளியிட்டுள்ள இத்திட்டம், இஸ்ரேல் அரசை மட்டுமே சார்ந்திருக்கும் ஒருதலைப் பட்சமான முடிவு என்றும், இது, பாலஸ்தீனிய அரசு மற்றும் மக்களின் கருத்துக்களுக்கு சிறிதும் செவிமடுக்காத திட்டமாக அமைந்துள்ளது என்றும், அனைத்து மதத் தலைவர்களின் அறிக்கை கூறுகிறது.

இத்திட்டத்தை, அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் வெளியிட்ட வேளையில், அவருடன் வெள்ளை மாளிகையில் இருந்த இஸ்ரேல் பிரதமர், நெதன்யாஹு அவர்கள், இத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள வேளையில், பாலஸ்தீனிய அரசுத்தலைவர் முகம்மது அப்பாஸ் அவர்கள், இத்திட்டத்தை நிராகரித்துள்ளார் என்று, ஊடகங்கள் கூறியுள்ளன.

இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு பிரிவுகளையும், தனித்தனி நாடுகளாக கருத்தில் கொள்வதும், ஐ.நா. அவையாலும், உலக நாடுகளாலும் வரையறுக்கப்பட்ட இவ்விரு நாடுகளின் எல்லைகளை மதிப்பதும், இவ்விரு நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்கும் என்று வத்திக்கான் கூறிவருவதை, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2020, 14:56