திருத்தந்தை 11ம் பயஸ் திருத்தந்தை 11ம் பயஸ் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-5

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், மறைப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததால் மறைப்பணி திருத்தந்தையாக நோக்கப்பட்டார். சீனா, ஜப்பான், இந்தியா மற்றும், தென்கிழக்கு ஆசியாவில், மறைப்பணிகளை அதிகமாக ஊக்குவித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 11ம் பயஸ் - 2

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1922ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல், 1939ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி வரை, அதாவது அவர் இறக்கும்வரை, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஆற்றினார். இவர் தனது திருஅவை பணியைத் துவங்கியபோது, மாபெரும் போர் அல்லது முதலாம் உலகப் போர் (ஜூலை,28,1914-நவ.11,1918), முடிவடைந்து ஏறக்குறைய நான்கு ஆண்டுகளே ஆகியிருந்தன. அப்போரின் தாக்கம், உலகில் உண்மையான அமைதியைக் கொணரவில்லை. அப்போர் முடிந்த பிறகு, தனியாட்களும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளும், நாடுகளும் உண்மையான அமைதியைக் காணவில்லை, நாடுகளுக்கு இடையே இருந்த பழைய போட்டியாளர்கள், தங்களின் செல்வாக்கைத் திணிப்பதைக் கைவிடாமலும் இருந்தனர். மேலும் அதிக அழிவுகளைக் கொணரும் புதிய போர்கள் வரக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. இந்நிலைமை, தேசிய அளவில் பணத்தையும், இளைஞர் சக்தியையும், மனிதரின் உடல், அறிவு, மதம் மற்றும், நன்னெறி வாழ்வை வீணாக்குவதாகவும் நோக்கப்பட்டது. இச்சூழலில், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், ஒரு சிலரின் ஆதாயங்களுக்காக, அதிகாரத்தையும், பாதுகாப்பையும் ஊக்கப்படுத்துவதை தவிர்த்து, பொதுநல வாழ்வை ஊக்கப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். ஒரு நாட்டின் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பது, தீவிர தேசியவாதத்திற்கு இட்டுச் சென்றால், அந்த நாட்டுப்பற்று, மாபெரும் அநீதிகளுக்குத் தூபமிடும். எல்லா மனிதரும் நம் சகோதரர், சகோதரிகள், எல்லாரும் ஒரே மாபெரும் மனிதக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், வாழ்விலும், வளத்திலும் தன் நாட்டைப் போன்று மற்ற நாடுகளும் இருப்பதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றன... இவ்வாறெல்லாம் ஒரு நாட்டினர் கருதாதபோது, அவர்களின் நாட்டுப்பற்று அர்த்தமற்றது என்று திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் கூறினார். எனவே, இவர், உலகில் அமைதியை நிலைநிறுத்துவதில், சமுதாயத்தால் பாதிக்கப்படாவண்ணம், திருஅவையும், கிறிஸ்தவமும் முழுவீச்சுடன் செயல்பட வேண்டும் என்று விரும்பினார்.

உண்மையான அமைதி கிறிஸ்துவில்...

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், திருஅவைகள், உலகின் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது குறித்து கவலை தெரிவித்தார். முதலாம் உலகப் போரில் ஆன்மீகப் பணியாற்றிய அருள்பணியாளர்கள் பலர், போரில் இறந்தனர். போர்க் காலத்தில் மூடப்பட்ட பல குருத்துவ பயிற்சி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படவில்லை. புலனின்பத்தால், பொருள்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பேராசையால், மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் அல்லது ஆட்சி செய்ய வேண்டும் என்ற அநீதியான ஆவலால் சமுதாயங்களில் தீமைகள் நிலவுகின்றன. எனவே உண்மையான அமைதி, கிறிஸ்துவை அமைதியின் இளவரசராக, அவரின் அரசாட்சியின்கீழ் மட்டுமே காண முடியும் என்றும், இந்த உண்மைக்கு உருக்கொடுக்க ஆயர்கள் உழைக்குமாறும், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார். "கிறிஸ்துவின் அரசாட்சியில் கிறிஸ்துவின் அமைதி" என்ற விருதுவாக்குடன் திருஅவையை வழிநடத்தத் துவங்கிய திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், முதல் பணியாக, உலகப்போக்கு வளர்ந்துவந்த சமுதாயங்களின் அனைத்து நிலைகளிலும் கிறிஸ்தவ விழுமியங்களை வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதே நோக்கத்திற்காக, இவர் 1922ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, Ubi arcano Dei consilio அதாவது “கடவுளின் புரிந்துகொள்ள முடியாத அல்லது விளக்கமுடியாத திட்டங்களின்போது” என்ற தலைப்பில், "கிறிஸ்துவின் அரசில் கிறிஸ்துவின் அமைதி" என்ற துணை தலைப்புடன் தனது முதல் திருமடலை வெளியிட்டார். "அனைத்தையும் கிறிஸ்துவில் மீட்டுயிர் பெறச் செய்ய வேண்டும் (Instaurare Omnia in Christo)" என்ற திருத்தந்தை 10ம் பயஸ் அவர்களின் இலக்கைப் பின்பற்றி, இவரும் செயல்படத் தொடங்கினார்.

கத்தோலிக்க நற்பணிக் குழு

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், Ubi arcano Dei consilio என்ற தனது முதல் திருமடலோடு, 1922ம் ஆண்டில் "கத்தோலிக்க நற்பணிக் குழுமம் (Catholic Action)" எனப்படும் கத்தோலிக்க செயல்திறன்மிக்க இயக்கத்தையும் உருவாக்கினார். இது, திருஅவையின் பணிகளில் பொதுநிலை விசுவாசிகளை ஈடுபடுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கத்தோலிக்க நற்பணிக் குழுமம், ஆயர்களின் மேற்பார்வையில், வறியோர் மற்றும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்கின்றவர்களுக்கு நேரிடையாகச் சேவைபுரிவதன் வழியாக, திருஅவையின் சமுதாயப் போதனைகள் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்படும் நோக்கத்தைக்கொண்டிருக்கிறது. பணியிடங்களை கிறிஸ்தவக் கோட்பாடுகளால் நிறைந்ததாக அமைக்கும் நோக்கத்தில், இளம் கத்தோலிக்க தொழிலாளர் கழகங்கள், Jocists போன்ற சிறப்பு இயக்கங்களுக்கும் இத்திருத்தந்தை அனுமதியளித்தார். இந்த கத்தோலிக்க அமைப்புகள், கம்யூனிச மற்றும், சோஷலிச தொழிற்சங்களுக்கு மாற்றாக அமைய வேண்டும் என்பதே திருத்தந்தையின் நோக்கம்.

மறைப்பணி திருத்தந்தை

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், மறைப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததால் மறைப்பணி திருத்தந்தையாக நோக்கப்பட்டார். சீனா, ஜப்பான், இந்தியா மற்றும், தென்கிழக்கு ஆசியாவில், மறைப்பணிகளை அதிகமாக ஊக்குவித்தார். அனைத்து துறவு சபைகளும், மறைப்பணிகளில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார். இவரது தலைமைப்பணியில் மறைப்பணிகள் இருமடங்காகின. உலக அளவில் 128 புதிய உயர்மறைமாவட்டங்களையும், 113 அப்போஸ்தலிக்க நிர்வாகங்களையும் உருவாக்கினார். இவர் திருஅவைக்குப் பொறுப்பேற்ற சமயத்தில், மறைப்பணி நாடுகளிலுள்ள எந்தவொரு மறைமாவட்டமும், மண்ணின் புதல்வர்களால் தலைமையேற்று நடத்தப்படவில்லை. எனவே மண்ணின் மைந்தர்களை திருஅவைப் பணிகளில் ஊக்குவிக்கும் விதமாக, இவரது காலத்தில் ஆறு சீன ஆயர்கள், ஆப்ரிக்காவில் ஒருவர், ஆப்ரிக்க-அமெரிக்க அருள்பணியாளர்கள், ஆயர்கள் போன்ற பலரை திருநிலைப்படுத்தினார்.  1939ம் ஆண்டில் மறைப்பணி நாடுகளில், அந்நாடுகளைச் சார்ந்த நாற்பது ஆயர்கள் இருந்தனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2020, 12:00