தேடுதல்

Vatican News
திருத்தந்தை 11ம் பயஸ் திருத்தந்தை 11ம் பயஸ்  

சாம்பலில் பூத்த சரித்திரம்:20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-4

"கிறிஸ்துவின் அரசில் கிறிஸ்துவின் அமைதி" என்ற விருதுவாக்குடன் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, வத்திக்கான் வானொலி மையத்தை ஆரம்பித்தவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 11ம் பயஸ் -1

20ம் நூற்றாண்டில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களுக்குப்பின் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், திருத்தந்தை 11ம் பயஸ். அம்புரோஜ்ஜோ தமியானோ அக்கிலே ராத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், இத்தாலியின் மிலான் மாவட்டத்தைச் சேர்ந்த தேசியோ எனும் ஊரில், 1857ம் ஆண்டு மே 31ம் தேதி பிறந்தார். இவரது தந்தை, ஒரு பட்டுத்துணி தொழிற்சாலையை நடத்தி வந்தார். அக்கிலே ராத்தி அவர்கள், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், மெய்யியல், திருஅவை சட்டம், இறையியல் ஆகிய மூன்றிலும் அருள்முனைவர் பட்டம் பெற்றவர். 1879ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், பதுவை குருத்துவ கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். மிலானில் அம்புரோசியார் நூலகத்தில் முழுநேரப் பணியாளராக வேலை செய்வதற்கென, பேராசிரியர் பணியைத் துறந்தார். 1888ம் ஆண்டு முதல், 1911ம் ஆண்டுவரை, அம்புரோசியார் நூலகப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். அச்சமயத்தில், அம்பரோசியார் திருப்பலி வழிபாட்டுமுறையை தயாரித்து வெளியிட்டார். அது இப்போதும் மிலான் உயர்மறைமாவட்டம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. புனித சார்லஸ் பொரோமேயோ அவர்களின் வாழ்வு மற்றும் எழுத்துக்கள் பற்றி ஆய்வு செய்து வெளியிட்டார் இவர். ஓய்வுநேரங்களில் மலையேறுவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், இத்தாலியிலுள்ள Monte Rosa, the Matterhorn, Mont Blanc, Presolana ஆகிய மலைச் சிகரங்களைத் தொட்டுள்ளார். திருத்தந்தை 10ம் பயஸ் அவர்களின் அழைப்பின்பேரில் 1911ம் ஆண்டில் வத்திக்கான் நூலகத்தில் உதவித் தலைவராகப் பணியாற்ற வந்த, அருள்பணி அக்கிலே ராத்தி அவர்கள், பின்னர் அந்நூலகத்தின் தலைவராகவும் உயர்த்தப்பட்டார்.

போலந்தில் தூதரகப் பணி

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் (1914–1922) அவர்களின் வேண்டுகோளின்பேரில், அருள்பணி அக்கிலே ராத்தி அவர்கள், 1918ம் ஆண்டில் போலந்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றச் சென்றார். அச்சமயத்தில் போலந்து, ஜெர்மனி மற்றும், ஆஸ்ட்ரிய-ஹங்கேரியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. பின் அதே ஆண்டு அக்டோபரில் போலந்து சுதந்திரம் பெற்றது. அச்சமயத்தில் போலந்து மக்களுக்கு, வாழ்த்து தெரிவித்த முதல் நாட்டுத் தலைவர் திருத்தந்தை 15ம் பெனடிக்ட் ஆவார். போலந்தில் 1919ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பத்து புதிய ஆயர்கள் நியமிக்கப்பட்டனர். அருள்பணி ராத்தி அவர்களும், வார்சாவில் திருப்பீடத் தூதர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டு, 1919ம் ஆண்டு அக்டோபரில் பேராயராகவும் திருப்பொழிவு செய்யப்பட்டார். போலந்து அதிகாரிகள், லித்துவேனிய மற்றும், ருத்தேனிய (கிழக்கு ஸ்லாவிய) அருள்பணியாளர்களைச் சித்ரவதைப்படுத்தியபோது, அவர்களை திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களும், பேராயர் ராத்தி அவர்களும் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். போலந்துக்கு எதிராக, இரஷ்யாவின் விளாடுமீர் லெனின் அவர்கள் உருவாக்கிய Bolshevik கம்யூனிச அமைப்பின் படைகள் போர்தொடுத்தபோது, போலந்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் உலகினருக்கு அழைப்பு விடுத்தார். 1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், வார்சா நகரை இரஷ்யப் படைகள் நெருங்கியவேளை, அந்நகரைவிட்டுச் செல்ல மறுத்த ஒரே வெளிநாட்டுத் தூதர் பேராயர் ராத்தி அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 1921ம் ஆண்டு சூன் 11ம் தேதி, ஆன்மீக அதிகாரத்தை, அரசியலுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக போலந்து ஆயர்களை எச்சரித்தும், போலந்து ஆயர்கள், தங்கள் நாட்டை நீதியிலும், பொறுப்புணர்வுகளிலும் அன்புகூருமாறும், அண்டை நாடுகளில் வாழும் மக்களுடன் அமைதியான நல்லிணக்கத்துடன் வாழுமாறும் செய்தி வெளியிடுமாறு, பேராயர் ராத்தி அவர்களை, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் கூறினார். பேராயர் ராத்தி அவர்கள், சோவியத் யூனியனில் நல்மனம் கொண்ட மனிதர்களைக் கொண்டு, போலந்துக்கும், அந்நாட்டுக்கும் இடையே, குருதியைச் சிந்தவும் அஞ்சாமல் பாலங்களைக் கட்டியெழுப்ப உழைத்தார். பேராயர் ராத்தி அவர்கள், மறைசாட்சியாக கொல்லப்படுவதை விரும்பாத திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், பேராயர் ராத்தி அவர்கள், திருப்பீட தூதராக, இரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தடைசெய்தார்.   இருந்தபோதிலும், பேராயர் ராத்தி அவர்கள், தொடர்ந்து இரஷ்யாவுடன் தொடர்பு வைத்தார். இந்நடவடிக்கைக்கு போலந்தில் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவரும் போலந்தைவிட்டு வெளியேறுமாறு கட்டளையிடப்பட்டார்.

கர்தினால் ராத்தி

1921ம் ஆண்டு சூன் 3ம் தேதி, பேராயர் ராத்தி அவர்களை கர்தினாலாக உயர்த்தி, மிலான் பேராயராக நியமித்தார் திருத்தந்தை 15ம் பெனடிக்ட். அவர், 1921ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி, மிலான் பேராயராகப் பணியைத் தொடங்கினார். 1922ம் ஆண்டு சனவரி 22ம் தேதி, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், திடீரென நிமோனியா காய்ச்சலால் தாக்கப்பட்டு இறைபதம் சேர்ந்தார். இத்திருத்தந்தையின் இறப்பைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய திருத்தந்தை தேர்தலில், கர்தினால் ராத்தி அவர்கள், 1922ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை 11ம் பயஸ் அதாவது 11ம் பத்திநாதர் என்ற பெயருடன், தலைமைப் பணியை ஏற்ற இவர், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் நடுமாட ஜன்னல் வழியாக, ஊர்பி எத் ஓர்பி ஆசீர் கொடுக்க விரும்புவதாக கர்தினால்களிடம் கூறினார். இந்த நடுமாடம், 1870ம் ஆண்டில், இத்தாலியர்கள் உரோம் நகரைக் கைப்பற்றியதையடுத்து, இத்தாலிக்கு எதிராக, 52 ஆண்டுகளாக திறக்கப்படாமலிருந்தது. வத்திக்கான் நகரம் 1929ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி இறையாண்மை பெற்ற நாடாக உருவாகக் காரணமானவர் இவர். உலகம், முதலாம் உலகப் போரின் கடுமையான பாதிப்புக்களால் நிறைந்திருந்தவேளை, "கிறிஸ்துவின் அரசில் கிறிஸ்துவின் அமைதி" என்ற விருதுவாக்குடன் திருஅவையை வழிநடத்தியவர். திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, வத்திக்கான் வானொலி மையத்தை ஆரம்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

08 January 2020, 14:10