2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மணிலா பேராலயத்தில் கடைபிடிக்கப்பட்ட “சிவப்பு புதன்” - கோப்புப் படம் 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மணிலா பேராலயத்தில் கடைபிடிக்கப்பட்ட “சிவப்பு புதன்” - கோப்புப் படம் 

கிறிஸ்து அரசர் பெருவிழாவையடுத்த புதன், “சிவப்பு புதன்”

உலகில், குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும், ஆப்ரிக்காவில் கிறிஸ்தவர்கள் அதிகம் சித்ரவதைகளுக்கு உள்ளாகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் சித்ரவதைக்குள்ளாகும் கிறிஸ்தவர்களின் நெருக்கடிநிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், பிலிப்பீன்ஸ் ஆயர்கள், “சிவப்பு புதன்” என்ற ஒரு நாளை உருவாக்கியுள்ளனர்.

மணிலாவில், சனவரி 25, கடந்த சனிக்கிழமையன்று, தங்களின் 120வது ஆண்டு ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை துவங்கிய ஆயர்கள் அனைவரும், முதல் நாள் அமர்விலேயே, “சிவப்பு புதன்” என்ற ஒரு நாள், பிலிப்பீன்ஸ் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஒரே மனதாக இசைவு தெரிவித்துள்ளனர்.  

பிலிப்பீன்ஸ் ஆயர்களின் இத்தீர்மானம் குறித்து ஊடகங்களிடம் பேசிய, Aid to the Church in Need (ACN) என்ற உலகலாவிய பிறரன்பு அமைப்பின் பிலிப்பீன்ஸ் கிளையின் தேசிய இயக்குனர் ஜோனத்தான் லூசியானோ அவர்கள், ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் புதன்கிழமையன்று, “சிவப்பு புதன்” கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆயர்களின் இத்தீர்மானம், பிலிப்பீன்சில் அனைத்து ஆலயங்கள் மற்றும், கத்தோலிக்க நிறுவனங்களில் அதிகாரப்பூர்வமாக கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவித்த லூசியானோ அவர்கள், இத்தகைய ஒரு நாள், உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று, இந்த பிறரன்பு அமைப்பு முயற்சித்து வருகிறது என்று கூறினார்.

மணிலாவின், திருத்தந்தை 12ம் பயஸ் கத்தோலிக்க மையத்தில் துவங்கிய இக்கூட்டத்தில், 90க்கும் அதிகமான ஆயர்கள் பங்குபெற்றனர். இக்கூட்டம், சனவரி 27, இத்திங்களன்று நிறைவடைந்தது.

உலகெங்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கடும் அடக்குமுறைகளில் துன்புறும் கிறிஸ்தவர்களை நினைத்து, “சிவப்பு புதன்” என்ற நாள், 2016ம் ஆண்டில் பிரித்தானியாவில் முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டில் பிலிப்பீன்சில் கடைப்பிடிக்கப்பட்டது. அது தற்போது பிலிப்பீன்சில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (CBCP)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2020, 15:14