தேடுதல்

Vatican News
கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே  

கர்தினால் தாக்லே அவர்களின் பிரியாவிடை நன்றித் திருப்பலி

கர்தினால் தாக்லே அவர்கள், வத்திக்கானில் பொறுப்பேற்கச் செல்வது, வருத்தத்தை அளித்தாலும், அவர் வடிவில், பிலிப்பீன்ஸ் நாடு, திருஅவைக்கு ஒரு கொடையை வழங்கியுள்ளது என்ற மகிழ்வும் உள்ளது - ஆயர் Roberto Gaa

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உங்கள் வாழ்வில் ஆற்றும் ஒவ்வொரு செயலும், நன்றித் திருப்பலியாக அமையட்டும், உங்கள் வாழ்வு முழுவதுமே ஒரு திருப்பலியாக மாறட்டும் என்ற சொற்களுடன், மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், தன் மறைமாவட்ட மக்களுக்கு விடை பகர்ந்தார் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உரோம் நகருக்குச் செல்லும் கர்தினால் தாக்லே அவர்கள், கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றிவந்த மணிலா உயர் மறைமாவட்டத்தின் பேராலயத்தில், சனவரி 27, இத்திங்களன்று, தன் நன்றித் திருப்பலியை நிறைவேற்றினார்.

அவ்வேளையில் அவர் வழங்கிய உணர்வுப்பூர்வமான மறையுரையில், தன் மறைமாவட்ட மக்கள் எப்போதும் திருப்பலியின் சாட்சிகளாக வாழவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அமல அன்னை பேராலயத்தில், கர்தினால் தாக்லே அவர்கள் நிறைவேற்றிய நன்றித் திருப்பலியில், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் பல்வேறு பேராயர்களும், ஆயர்களும், 3000த்திற்கும் அதிகமான விசுவாசிகளும் கலந்துகொண்டனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

கர்தினால் தாக்லே அவர்கள், தன் பணியை நிறைவு செய்து வத்திக்கானில் பொறுப்பேற்கச் செல்வது, வருத்தத்தை அளித்தாலும், அவர் வடிவில், பிலிப்பீன்ஸ் நாடு, திருஅவைக்கு ஒரு கொடையை வழங்கியுள்ளது என்ற மகிழ்வும் உள்ளது என்று ஆயர் Roberto Gaa அவர்கள் கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, கர்தினால் தாக்லே அவர்களின் வடிவில், நல்லதொரு மேய்ப்பரை, மணிலா தலத்திருஅவை கண்டது என்று கூறிய மணிலா துணை ஆயர் Broderick Pabillo அவர்கள், கர்தினால் தாக்லே அவர்கள், அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவராக பல்வேறு நாடுகளுக்குச் செல்லவேண்டியிருந்த போதும், தன் மறைமாவட்டப் பணிகளை முழுமையாக நிறைவேற்றினார் என்று கூறினார்.

ஏறத்தாழ, 30 இலட்சம் கத்தோலிக்கர் வாழும் மணிலா உயர் மறைமாவட்டத்தில், ஏறத்தாழ, 600 அருள்பணியாளர்கள், 700க்கும் அதிகமான அருள் சகோதரிகள் மற்றும் 400க்கும் அதிகமான மறைக்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

29 January 2020, 15:22