தேடுதல்

Vatican News
ஈராக், ஈரான்  பதட்ட நிலைகள் ஈராக், ஈரான் பதட்ட நிலைகள்  (AFP or licensors)

ஈராக் பதட்ட நிலைகள் குறித்து கர்தினால் ஆழ்ந்த கவலை

கர்தினால் சாக்கோ : சுதந்திர நாடாக இருக்கும் ஈராக்கில், தங்கள் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள, வேறு நாடுகள் சண்டைகளை நடத்துவது கண்டனத்துக்குரியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஈராக் தலைநகரில் ஈரான் இராணுவ தளபதி, அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டது, மற்றும், அதைத் தொடர்ந்து ஈராக்கில் இடம்பெறும் போராட்டங்களால் எழுந்துள்ள பதட்ட நிலைகள் குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் ரஃபேல் சாக்கோ (Louis Rafael Sako).

கடந்த வாரம், ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து தங்கள் நாட்டு மக்கள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளதாக உரைத்த கர்தினால் சாக்கோ அவர்கள், சுதந்திர நாடாக இருக்கும் ஈராக்கில், தங்கள் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள, வேறு நாடுகள் சண்டைகளை நடத்துவது கண்டனத்துக்குரியது எனக் கூறினார்.

தங்கள் சண்டைகளால் இன்னொரு நாடு பாதிக்கப்படுவது குறித்து, சண்டையிடும் தரப்புகள் உணர்ந்து, மிதவாதத்தைக் கடைபிடிக்கவும், ஞானத்துடன் செயல்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வரவும் வேண்டும் என அழைப்பு விடுத்தார், கர்தினால் சாக்கோ.

ஈரான் நாட்டு இராணுவத் தளபதி காசிம் சொலைமானி (Qasem Soleimani) அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க அரசின் தாக்குதலில், அவர், பாக்தாத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதட்ட நிலைகள் உருவாகியுள்ளன. (AsiaNews)

06 January 2020, 15:26