தேடுதல்

பாகிஸ்தானின் கராச்சி பேராயர் கர்தினால் ஜோசப் கூட்ஸ் பாகிஸ்தானின் கராச்சி பேராயர் கர்தினால் ஜோசப் கூட்ஸ் 

உலகிற்கு அமைதி ஆர்வலர்கள் தேவைப்படுகின்றனர்

இவ்வுலகிற்கு வெற்று வார்த்தைகள் அவசியமில்லை, மாறாக, அமைதியை ஏற்படுத்துகின்றவர்களே தேவைப்படுகின்றனர் – கராச்சி பேராயர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த உலகில், அமைதியை ஏற்படுத்துகின்றவர்கள் தேவைப்படுகின்றனர் என்று, பாகிஸ்தானின் கராச்சி பேராயர் கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், 2020ம் புதிய ஆண்டு செய்தியில் கூறியுள்ளார்.

கராச்சி புனித பேட்ரிக் பேராலயத்தில் சனவரி முதல் நாளன்று திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் கூட்ஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 53வது உலக அமைதி நாள் செய்தியை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

உரையாடல், ஒப்புரவு, மற்றும், சுற்றுச்சூழல் மனமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, நம்பிக்கையின் ஒரு பயணமாக உள்ளது என, அமைதியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விவரித்துள்ளார் என்று மறையுரையாற்றிய கர்தினால் கூட்ஸ் அவர்கள், இவ்வுலகிற்கு வெற்று வார்த்தைகள் அவசியமில்லை, மாறாக, அமைதியை ஏற்படுத்துகின்றவர்களே தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.

உண்மையைத் தேடும் மனிதர் அனைவரும், கருத்தியல்கள் மற்றும், மாறுபட்ட கருத்துக்களைக் கடந்து, உறுதிப்பாட்டுடன் உரையாடல் மேற்கொள்ளாமல் அமைதியை உண்மையாகவே நம்மால் அடைய முடியாது என்றும், கர்தினால் கூட்ஸ் அவர்கள் கூறினார்.

போர், ஆயுத மோதல்கள், சுற்றுச்சூழல் மாசுகேடு, ஒழுக்க மற்றும், கலாச்சாரச் சீரழிவு போன்றவற்றை முடிவுக்குக்கொண்டு வருவதற்கு, அமைதி மற்றும், உரையாடல் கலாச்சார விழுமியங்களில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு மனிதரும், சகோதரர், சகோதரிகளாக ஒன்றிணைந்து வாழ்வது, இன்றைய உலகிற்குத் தேவைப்படுகின்றது  என்றும், கராச்சி பேராயர் கூறினார்.

நாம் எல்லாரும் அமைதியை அடைய விரும்பினால் மட்டுமே அமைதி இயலக்கூடியது என்பதை, இன்றைய உலகின் நிலவரங்கள் நினைவுபடுத்துகின்றன என்றும், நம் இதயங்களில் அனைத்து விதமான வெறுப்பைக் களைந்து ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும் என்றும், கர்தினால் கூட்ஸ் அவர்கள், புத்தாண்டு திருப்பலியில் கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2020, 15:01