தேடுதல்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் 

ஹாங்காங் காவல்துறையின் வன்முறைகளுக்கு கண்டனம்

ஹாங்காங் பிரச்சனைகளுக்கு நியாயமான முறையில் தீர்வு காணும் வழிகளை மேற்கொள்ளுமாறு, மியான்மார் கர்தினால் உள்ளிட்ட, உலகின் 40 முக்கிய அரசியல் தலைவர்கள் ஹாங்காக் அரசை விண்ணப்பித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஹாங்காங்கில், கிறிஸ்மஸ் விடுமுறை நாள்களில் காவல்துறை நடத்திய வன்முறைகளுக்கு தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ.

கிறிஸ்மஸ்க்கு முன்தினம், கிறிஸ்மஸ் நாள், பாக்சிங் நாள், டிசம்பர் 28 மாசற்ற குழந்தைகள் நாள் ஆகிய நாள்களில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும், அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளையும், வேதியப்பொருள்கள் கலந்த தூள்களையும், இரப்பர் குண்டுகளையும் காவல்துறை வீசிய கொடுஞ்செயல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன என்று கூறியுள்ளார், கர்தினால் போ.

யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள் உட்பட, உலகிலுள்ள 40க்கும் அதிகமான முக்கிய அரசியல் தலைவர்கள் கையெழுத்திட்டு, ஹாங்காங் அரசுத் தலைவர் Carrie Lam அவர்களுக்கு, டிசம்பர் 31ம் தேதி அனுப்பிய கண்டனக் கடிதத்தில், சிறாரும், இளைஞர்களும் கடுமையாய் அடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள் மிகவும் கவலை தருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களின் முகங்களில் இரப்பர் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன என்றும் கூறும் அக்கடிதம், இத்தகைய காவல்துறையின் அட்டூழியங்கள், பன்னாட்டு விதிமுறைகளைக் கடுமையாய் மீறுவதாக உள்ளன என்றும் கூறுகிறது.

ஹாங்காங் பிரச்சனைகளுக்கு நியாயமான முறையில் தீர்வு காணும் வழிகளை மேற்கொள்ளுமாறு, அக்கடிதம், ஹாங்காக் அரசுத் தலைவரை விண்ணப்பித்துள்ளது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2020, 15:00