தாயின் கருவில் வளரும் குழந்தையை திருத்தந்தை பிரான்சிஸ் ஆசீர்வதித்தல் - கோப்புப் படம் தாயின் கருவில் வளரும் குழந்தையை திருத்தந்தை பிரான்சிஸ் ஆசீர்வதித்தல் - கோப்புப் படம் 

இந்திய அரசின் புதிய கருகலைப்பு சட்டத்தை எதிர்த்து...

கருவில் வளரும் குழந்தையைக் கலைப்பதற்கு, இந்திய அரசு வழங்கியுள்ள 24 வாரங்கள் என்ற உத்தரவு, இன்னும் அதிகமான உயிர்கள், குறிப்பாக, பெண் குழந்தைகளின் உயிர்கள் பலியாக வழி வகுக்கின்றது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருவில் வளரும் குழந்தையைக் கலைப்பதற்கு இந்தியாவில் நிலவி வந்த 20 வாரங்கள் என்ற சட்டத்தை, 24 வாரங்களாக நீடித்து, இந்திய அரசு வெளியிட்டிருக்கும் புதியச் சட்டத்தை, இந்தியாவில், வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் அமைப்பு, வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.

இந்திய அரசு, சனவரி 29, இப்புதனன்று வெளியிட்டுள்ள இச்சட்டத்தை எதிர்த்து, இந்திய அளவில் போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக, கேரள ஆயர்கள் அவையின், 'வாழ்வுக்கு ஆதாரம்' பணிக்குழுவின் தலைவர், ஆயர் பால் முலசேரி (Paul Mulassery) அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

கருவில் வளரும் குழந்தையைக் கலைப்பதற்கு, இந்திய அரசு வழங்கியுள்ள 24 வாரங்கள் என்ற இந்த உத்தரவு, இன்னும் அதிகமான உயிர்கள், குறிப்பாக, பெண் குழந்தைகளின் உயிர்கள் பலியாக வழி வகுக்கின்றது என்று, வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் அமைப்பு கூறுகிறது.

கருவைக் கலைக்க 12 வாரங்கள் என்ற எல்லை வகுக்கப்பட்டிருந்ததை, 1971ம் ஆண்டு மாற்றி, 20 வாரங்கள் என்று இந்திய அரசு அறிவித்தது என்றும், கடந்த 50 ஆண்டுகளாக பழக்கத்தில் இருந்த இந்த சட்டம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, உயிர்கள் மீது அரசின் மதிப்பு குறைந்து வருவதைக் காட்டுகிறது என்றும், இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 64 இலட்சம் பேருக்கு கருக்கலைப்பு நடைபெறுகிறது என்றும், இவற்றில், பாதிக்கு மேற்பட்டோருக்கு நடைபெறும் கருக்கலைப்பு, சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுகிறது என்றும், ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2020, 15:00