ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய பள்ளி திறப்பு விழாவில் ஆயர் பால் ஹிண்டர் ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய பள்ளி திறப்பு விழாவில் ஆயர் பால் ஹிண்டர்  

அரபு அமீரகத்தில் புதிய கத்தோலிக்கப் பள்ளி திறப்பு

பல்வேறு கலாச்சாரங்களையும், மரபுகளையும் சார்ந்த மாணவர்கள், ஒருவரையொருவர் சந்திப்பதற்கும், மதிப்பதற்கும் உரிய வகையில் அவர்களை உருவாக்குவதே, பள்ளிகளின் தலையாயக் கடமை - ஆயர் பால் ஹிண்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு கலாச்சாரங்களையும், மரபுகளையும் சார்ந்த மாணவர்கள், ஒருவரையொருவர் சந்திப்பதற்கும், மதிப்பதற்கும் உரிய வகையில் அவர்களை உருவாக்குவதே, பள்ளிகளின் தலையாயக் கடமை என்று, திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர், பள்ளி திறப்பு விழா ஒன்றில் உரையாற்றினார்.

ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், ஏமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தென் அரேபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் பால் ஹிண்டர் (Paul Hinder) அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு பகுதியான Ras Al Khaimahவில் புனித மரியா உயர் நிலைப்பள்ளியை, சனவரி 27, இத்திங்களன்று திறந்து வைத்தபோது, இவ்வாறு கூறினார்.

நாம் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற கருத்தை வலியுறுத்த, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல்-அசார் தலைமை குரு, அகமத் அல்-தய்யிப் அவர்களும் கையொப்பமிட்ட அறிக்கையை, ஆயர் ஹிண்டர் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆயர் பால் ஹிண்டர் அவர்கள் தலைமையேற்ற இந்த பள்ளி திறப்பு விழாவில், Ras Al Khaimah அமீரகத்தின், பொருளாதாரத் துறையின் தலைவர் Sheikh Ahmed bin Saqr Al Qasimi அவர்கள் உட்பட, பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

22 நாடுகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் தற்போது பயின்றுவரும் புனித மரியா உயர் நிலைப்பள்ளியில், 1,800 மாணவர்கள் பயில்வதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2020, 15:20