தேடுதல்

Vatican News
எர்பில் பகுதி திருஅவை வழிபாடு எர்பில் பகுதி திருஅவை வழிபாடு  (AFP or licensors)

ஈராக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார் என்று தான் நம்புவதாகவும், இதற்காக தூய ஆவியாரிடம் செபிக்கின்றோம் எனவும், எர்பில் பேராயர் வார்தா அவர்கள் கூறியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈரான் நாட்டின் முக்கிய இராணுவ தளபதி Qasem Soleimani அவர்கள் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு இடையே வளர்ந்துவரும் பதட்டநிலைகள், ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தை அதிகம் கவலையடைய வைத்துள்ளன என்று, எர்பில் பேராயர் பாஷர் வார்தா அவர்கள் கூறியுள்ளார்.

ஈராக்கில் 2003ம் ஆண்டு தொடங்கிய போருக்குப்பின்னும், குறிப்பாக, 2014ம் ஆண்டில் ஐ.எஸ். இசுலாமிய அரசு செயல்படத்தொடங்கியதற்குப் பின்னும், அப்பகுதியில் கிறிஸ்தவ சமுதாயம் 90 விழுக்காடாகக் குறைந்துள்ளவேளை, தற்போது நிலவும் பதட்டநிலைகள், கிறிஸ்தவ சமுதாயத்தை, மேலும் அச்சமுற வைத்துள்ளன என்று, பேராயர் வார்தா அவர்கள் கூறியுள்ளார்.

Aid to the Church in Need எனப்படும், கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கு, சனவரி 9, இவ்வியாழனன்று பேட்டியளித்த பேராயர் வார்தா அவர்கள், எங்களின் தாய்பூமியாகிய இப்பகுதியில், தொடர்ந்து வாழவே விரும்புகிறோம், இதற்கு பன்னாட்டு சமுதாயம் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

ஈரான், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு இடையே அதிகரித்துவரும் பதட்டநிலைகள் தணிக்கப்பட உலகளாவிய சமுதாயம் தனது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள பேராயர் வார்தா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

திருத்தந்தையின் பயணம் எப்போது நடைபெறும் என்பது தெரியவில்லை எனினும், தூய ஆவியாரிடம் இதற்காகச் செபிக்கின்றோம் என்றும், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ எல்லாரும் செபிக்குமாறும், எர்பில் பேராயர் வார்தா அவர்கள் கூறியுள்ளார்.

இசுலாமிய சட்டத்தின்கீழ், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம உரிமை கிடையாது என்றும், கிறிஸ்தவர்களும், யஜிதி சமுதாயமும் அச்சுறுத்தலில் உள்ளனர் என்றும், தற்போதைய சூழலில் கிறிஸ்தவர்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இணைத்துப் பேசப்படுகின்றனர் என்றும், இதனாலே தாங்கள் எளிதில் தாக்கப்படக்கூடும் என கிறிஸ்தவர்கள் அஞ்சுகின்றனர் என்றும், பேராயர் வார்தா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.  

10 January 2020, 14:54