ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 

ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் விண்ணப்பம்

ஆஸ்திரேலிய நாளையொட்டி, ஆஸ்திரேலியாவின் அனைத்து மறைமாவட்டங்களிலும் திரட்டப்படும் நிதி உதவி, வின்சென்ட் தே பால் அமைப்பின் வழியே, தீயினால் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பிவைக்கப்படும் – ஆயர் பேரவைத் தலைவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் தீ விபத்தையொட்டி, அந்நாட்டின் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் மார்க் கோலெரிஜ் (Mark Coleridge) அவர்கள், மக்களின் உதவி கேட்டு, சிறப்பு விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் காணப்படாத ஒரு பேரிடர் இதுவென்றும், இப்பேரிடரின்போது, தீயுடன் போராடிவரும் தீயணைப்புத் துறையினரையும், வேறு வழிகளில் உதவிகள் ஆற்றிவரும் தன்னார்வத் தொண்டர்களையும், பேராயர் கோலெரிஜ் அவர்கள் பாராட்டியுள்ளார்.

ஒவ்வொரு ஆயரும், அவரவர் மறைமாவட்டங்களிலும், பங்குத் தளங்களிலும் திரட்டி வந்த உதவிகளை வெவ்வேறு பகுதி மக்களுக்கு அனுப்பி வருவதையும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து உழைப்பதையும் பேராயர் கோலெரிஜ் அவர்கள் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், சனவரி மாதம் சிறப்பிக்கப்படும் ஆஸ்திரேலிய நாளையொட்டி, கோவில்களில் சிறப்பு நிதி திரட்டப்படுவதை நினைவுறுத்தும் பேராயர் கோலெரிஜ் அவர்கள், இவ்வாண்டு, ஆஸ்திரேலியாவின் அனைத்து மறைமாவட்டங்களிலும் திரட்டப்படும் நிதி உதவி, வின்சென்ட் தே பால் அமைப்பின் வழியே, தீயினால் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், சனவரி 26ம் தேதி, ஆஸ்திரேலியா நாள் சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி, திங்களன்று, ஆஸ்திரேலியா நாள் என்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 8, இப்புதனன்று வழங்கிய புதன் மறைக்கல்வி உரையிலும், சனவரி 9, இவ்வியாழனன்று, பன்னாட்டுத் தூதர்களுக்கு வழங்கிய உரையிலும், ஆஸ்திரேலியாவின் பேரிடர் குறித்து தன் வருத்தத்தையும் அருகாமையையும் குறிப்பிட்டுப் பேசினார். (ICN/ ACBC)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2020, 16:07