தேடுதல்

Vatican News
எரிந்துபோன ஆஸ்திரேலியக் காட்டில் தளிர்விட்டுள்ள செடி எரிந்துபோன ஆஸ்திரேலியக் காட்டில் தளிர்விட்டுள்ள செடி  (ANSA)

பருவநிலை மாற்ற சட்டவரைவு - ஆஸ்திரேலிய ஆயர்கள் ஆதரவு

ஆஸ்திரேலியாவில் எரிந்துவரும் காடுகளும், அதனால் உருவாகியுள்ள இழப்புக்களும், பருவநிலை மாற்ற சட்டவரைவுக்கு உந்து சக்தியாக இருந்தன - ஆயர் வின்சென்ட் லாங்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வண்ணம் ஆஸ்திரேலிய பாராளுமன்றம் பரிந்துரைக்கவுள்ள ஒரு சட்ட வரைவுக்கு, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் எரிந்துவரும் காடுகளும், அதனால் உருவாகியுள்ள இழப்புக்களும், இந்த புதிய சட்டவரைவுக்கு உந்து சக்தியாக இருந்தன என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குறித்து சட்டங்கள் இயற்ற இதுவே தகுந்த தருணம் என்றும், ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின், நீதி மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றம் பணிக்குழுவைச் சேர்ந்த, ஆயர் வின்சென்ட் லாங் (Vincent Long) அவர்கள் கூறினார்.

இந்தப் பேரழிவிலிருந்து மீண்டுவரும் மக்களுடன் இணைந்து, திருஅவையும் பயணிக்கிறது என்று கூறிய ஆயர் லாங் அவர்கள், தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்வதில், ஆஸ்திரேலிய தலத்திருஅவை, முழுமையாக ஈடுபட்டுள்ளது என்று எடுத்துரைத்தார்.

நான்கு மாதங்களாக நிகழ்ந்துவரும் இந்தப் பேரழிவினால், இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர், 2,500க்கும் அதிகமான இல்லங்கள் அழிந்துள்ளன, 100 கோடி விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

16 January 2020, 14:26