மதுரைப் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் மதுரைப் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் 

இந்திய நடுவண் அரசின் குடிமக்கள் சட்டவரைவுக்கு எதிர்ப்பு

ஒரு நாட்டில் மதத்தை மையப்படுத்தி துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருள் இசுலாமியரின் குடியுரிமை மட்டும் மறுக்கப்படுதல், இன்னொருவகை பாகுபாடில்லையா?

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த மாதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்ட வரைவை ஏற்க இயலாது என்று, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான, மதுரைப் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், தமிழக ஆயர் பேரவை சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 9ம் தேதி, மிகப்பெரிய பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டவரைவு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள, பேராயர் பாப்புசாமி அவர்கள், குடிமக்களை மத முறைப்படி அடையாளப்படுத்தி ஒதுக்குதல், ஓரங்கட்டல், பாகுபடுத்துதல் போன்ற வன்முறைகளை, கிறிஸ்தவ சிறுபான்மையினர் எப்போதும், ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

தமிழகக் கிறிஸ்தவர்கள், இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கின்றனர் என்றும், இந்தியாவில், ஏற்கனவே, ஒவ்வொரு நாளும், மத சிறுபான்மையினரின் இருப்பும், பாதுகாப்பான வாழ்வும் கேள்விக் குறியாகியுள்ள நிலையை, மக்கள் அனைவரும் அறிவர் என்றும், மதுரைப் பேராயரின் அறிக்கை கூறுகின்றது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய மூன்று இசுலாமிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயரும் இசுலாமியருக்கு, குடியுரிமை மறுக்கப்படுமாம், இந்நாடுகளில் மத ரீதியாகத் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு  குடியுரிமை வழங்கப்படுமாம், இப்போக்கில் இந்திய நடுவண் அரசு கைக்கொள்ளும் தந்திரத்தையும், சூழ்ச்சியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அவ்வறிக்கை எடுத்துரைக்கின்றது.

ஒரு நாட்டில் மத ரீதியாக துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருள் இசுலாமியரின் குடியுரிமை மட்டும் மறுக்கப்படுதல், இன்னொருவகை பாகுபாடில்லையா என கேள்வி எழுப்பியுள்ள பேராயர் பாப்புசாமி அவர்கள், குடிமக்களின் ஆதாரத்தையே குறிவைக்கும் போக்கில் அமைந்த இச்சட்ட திருத்தம் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டவரைவு, ஆளுங்கட்சிக்கு ஏற்படையதாக இருக்கலாம், ஆனால் இது உண்மையிலேயே ஏற்கப்பெறுமானால் இந்திய சனநாயகத்தை, சனநாயகம்தரும் சமத்துவத்தை, மதச்சார்பற்ற கோட்பாட்டை யாரால் காக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ள பேராயர் பாப்புசாமி அவர்கள், தமிழக கிறிஸ்தவ சமுதாயம், அரசின் இச்செயல், யாருக்கோ வந்த இழப்பு என்று கருதாமல், மக்களின் அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குட்படுத்தும், இச்சட்ட திருத்தத்தை எதிர்க்க ஒன்றுகூட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2020, 15:04