கொல்கத்தாவில், சமய ஒற்றுமை வேண்டி ஊர்வலம் கொல்கத்தாவில், சமய ஒற்றுமை வேண்டி ஊர்வலம் 

கொல்கத்தாவில், சமய ஒற்றுமை வேண்டி ஊர்வலம்

இந்தியாவில் தற்போது நிலவும் சமய வெறுப்பு சூழல் அகலுமாறு, 175க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் இணைந்து கொல்கத்தாவில், ஊர்வலம் ஒன்றை மேற்கொள்கின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி, இவ்வாண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில், சமய ஒற்றுமை வேண்டி, ஊர்வலமும், செபங்களும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தூதரான புனித பவுலின் மனமாற்றத் திருநாள் ஒவ்வோர் ஆண்டும் சனவரி 25ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, அதற்கு முந்தைய ஒரு வாரம், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாண்டு, சனவரி 18ம் தேதி முதல் 25ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் இந்த ஒன்றிப்பு வாரத்தில், சனவரி 20ம் தேதி, வருகிற திங்களன்று, கொல்கத்தாவில், கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து, ஊர்வலம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

இந்தியாவில் தற்போது நிலவும் சமய வெறுப்பு சூழல் அகலுமாறு, 175க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் இணைந்து இந்த ஊர்வலத்தை மேற்கொள்கின்றன என்று, இதன் ஒருங்கிணைப்பாளரான அருள்பணி டோமினிக் கோமஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

புனித பவுல் பேராலயத்திலிருந்து புறப்படும் இந்த ஊர்வலம், 3.5 கிலோமீட்டர் கடந்து, மாயோ சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முன்னர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சீர்திருத்த சட்டத்தினால், இந்தியாவில் உருவாகியுள்ள சமய பாகுபாடுகள் நீங்குவதற்கு, ஒரு புதுமை நிகழவேண்டியுள்ளது என்று கூறும் அருள்பணி கோமஸ் அவர்கள், நாட்டில், நீதியின் அடிப்படையில், ஒற்றுமையும், அமைதியும் உருவாக அனைவரும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்வோம் என்று அழைப்பு விடுத்துள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2020, 14:38