சாந்தா மரியா பெருங்கோவிலில் வறியோருக்கு மதிய விருந்து வழங்கிய சாந்த் எஜிதியோ அமைப்பினர் சாந்தா மரியா பெருங்கோவிலில் வறியோருக்கு மதிய விருந்து வழங்கிய சாந்த் எஜிதியோ அமைப்பினர் 

சிறைபட்டோருக்கும் வறியோருக்கும் கிறிஸ்மஸ் விருந்து

சனவரி 6ம் தேதி நிகழும் திருக்காட்சி பெருவிழா வரை, இத்தாலியில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட பல்வேறு சிறைகளில், கிறிஸ்மஸ் விருந்துகளும் பரிசுப் பொருள்களும் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் - சாந்த் எஜிதியோ அமைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சாந்த் எஜிதியோ (Sant'Egidio) என்றழைக்கப்படும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, டிசம்பர் 26, இவ்வியாழனன்று, உரோம் நகரில் அமைந்துள்ள ரெஜினா சேலி (Regina Coeli) சிறையில் உள்ள கைதிகளுக்கு மதிய உணவை, விருந்தாக வழங்கியது.

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 26ம் தேதி கொண்டாடப்படும் புனித ஸ்தேவான் திருநாளையொட்டி, "புனித ஸ்தேவான் மதிய உணவு" என்ற பெயரில் இந்த விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, சனவரி 6ம் தேதி நிகழும் திருக்காட்சிப் பெருவிழா வரை, இத்தாலியில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட பல்வேறு சிறைகளில், இத்தகைய விருந்துகளும் பரிசுப் பொருள்களும் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் என்று சாந்த் எஜிதியோ அமைப்பு கூறியுள்ளது.

மேலும், டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, சாந்த் எஜிதியோ அமைப்பைச் சார்ந்தவர்கள், இத்தாலியில் உள்ள 60,000த்திற்கும் அதிகமான வறியோருக்கு, கிறிஸ்மஸ் விருந்தினை, பல்வேறு நகரங்களில் வழங்கினர்.

உரோம் நகரில் இயங்கிவரும் சாந்த் எஜிதியோ அமைப்பு, திரஸ்தேவரேயில் உள்ள சாந்தா மரியா பெருங்கோவிலில் வறியோருக்கு மதிய விருந்தை வழங்கியது என்றும், உலகின் பல நகரங்களில், இவ்வமைப்பினர், 2,40,000த்திற்கும் அதிகமான வறியோருக்கு கிறிஸ்மஸ் விருந்தை வழங்கினர் என்றும் இவ்வமைப்பின் அறிக்கையொன்று கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2019, 14:46