தேடுதல்

Vatican News
அன்னை மரியா, இறைவனின் தாய் அன்னை மரியா, இறைவனின் தாய் 

அன்னை மரியாள் இறைவனின் தாய் - புத்தாண்டு பெருவிழா

மனித வாழ்விலே, நாம் இறைவார்த்தையை கேட்பதோடல்லாமல், இரசித்து, ருசித்து, அனுபவித்து, ஆண்டவரின் அருளோடு, வினாக்களுக்கு விடை தேடுகின்றபோது, பிறக்கின்ற இப்புத்தாண்டில், நல்லவை நடக்கும்
புத்தாண்டு செய்தி

அருள்பணி இராஜசேகர், கும்பகோணம் மறைமாவட்டம்

இறைமையும், மனிதமும் இணைந்தது மரியில் - இதனால் மாண்பும், புனிதமும் மலர்ந்து மனிதரில். புத்தம் புது பூவாய், பூத்திருக்கின்ற புத்தாண்டை, மனசெல்லாம் மாக்கோலத்துடனும், தெருவெல்லாம் பூக்கோலத்துடனும், புத்தாடையுடனும், புன்னகைப் பூக்களுடனும், நன்றிப்பாக்களுடனும், நெஞ்சில் சுரக்கும் நன்றி சுரங்களுடனும் கொண்டாடும் இந்நாளில், நம் திருஅவை, “அன்னை மரியா இறைவனின் தாய்" என்ற பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது.

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் கூறுவதுபோல, அன்னை மரியா, முதல் நற்கருணை பேழையாக இருந்து, இயேசுவை காத்தவர். அகிலத்தை ஆள்பவரை தன் உதரத்தில் காத்தவர், சர்ப்பத்தால் வந்த சாபத்தை கர்ப்பத்தால் தீர்த்தவர், காலம் நிறைவுற்றபோது, காலத்தில் கரையவும், மனிதத்தில் கலக்கவும், தன்னிலை துறந்து, நம் நிலை ஏற்க விரும்பியபோது "நான் ஆண்டவரின் அடிமை, உம்சொற்படியே  நிகழட்டும்" என்று ஆண்டவருக்கு அடிபணிந்தார் நம் அன்னை மரியா (லூக்,1:38).

கருவை சுமக்கும் தாய்க்கு, குழந்தை ஒரு சுமை இல்லை. இயேசுவை தன் உதரத்தில் மட்டுமல்ல, தன் உள்ளத்திலும் சுமந்தவள் அன்னை மரியா. இயேசுவுக்கும் மரியாவுக்கும் உள்ள உறவு, மனிதம் சார்ந்த உறவு மட்டுமல்ல, அதையும் கடந்த அதிசயமான, அற்புதமான உறவு. இந்த உறவு வெறும் சந்திப்பில் பூத்ததல்ல, மாறாக, உதரத்தில் பூத்தது. தாய்மை என்பது, கருவின் சரித்திரம், உயிரின் பிறப்பிடம், அன்பின் அடித்தளம், அழகின் அச்சாரம். இத்தகைய போற்றுதற்க்குரிய அன்னையை புறந்தள்ளிப் போகின்றவர்களும், புறங்கூறி பேசுகின்றவர்களும் அதிகரித்துவரும் இவ்வேளையில், நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் "அன்னை மரியாவை தன் தாயாக உணராத கிறிஸ்தவர்கள், அனாதைகள்" என்று குறிப்பிடுகிறார் (2 செப்டம்பர் 2014).

அன்னை மரியா, "இறைவனின் தாய்" என்ற இவ்விழா கோட்பாடு, இறையியல் அடிப்படையில், ஆழமான கிறிஸ்தியல் சிந்தனைகளைக் கொண்டது. நெஸ்டோரிஸின் தப்பறைக் கோட்பாட்டின்படி, ஒரு சாதாரண நாசரேத் பெண்மணி, இயேசுவின் மனித இயல்புக்கு மட்டும்தான் தாயா? அல்லது இறைத்தன்மை இயேசு பிறந்த பின் ஒட்டிக்கொண்டதா? போன்ற வினாக்களுக்கு கி.பி 431இல் கூடிய எபேசு மாமன்றம், ஒரு தெளிவான விடையை தந்தது. இயேசு கடவுளும் மனிதனுமானவர். அவரில் இரு இயல்புகளும், மனுவுரு எடுத்த நொடிப்பொழுதில் இணைந்தன. இறை மனித இயல்புகளைக் கொண்ட, இறைமகன் இயேசுவை, தன் உதரத்தில் சுமந்து கருவறையில் வைத்து காத்ததினால், அன்னை மரியா "இறைவனின் தாய்" என்று அறுதியிட்டு கூறியது.

மரியாவை இறைவனின் தாயாக, முதன்முதலில் அறியக்கூடிய பாக்கியத்தை பெற்றவர் எலிசெபெத். "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசெபெத் கூறுகிறார்" (லூக்கா 1:43). "வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடி கொண்டார்" (யோ. 1:14) என்ற இறைத் திருவுளம், அன்னை மரியா வழியாக உருபெற்றது. ஆண்டவர் இயேசு, தன்  தாயிடமிருந்து, மனிதச்சாயலை பெறுகிறார். ஆண்டவரின் மீட்புத்திட்டம் நிறைவேற மரியா கருவியாக விளங்குகிறார். எனவே, புத்தாண்டின் புது நாளில் "அன்னை மரியா இறைவனின் தாய்" என்ற பெருவிழாவை நாம் கொண்டாடுவது சாலச்சிறந்தது.

டைம்ஸ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க வார இதழ், ஒவ்வோர் ஆண்டும் உலகின் சிறந்த பெண்மணிகளை உலகுக்கு வெளிப்படுத்தி, அவர்கள் சார்ந்த துறையில், செய்த சாதனைகளை போற்றி கௌரவிக்கிறது. உலகின் மிகப் பெரிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின், பொது மேலாளராக சிறப்பாக பணிபுரிந்ததற்காக, அமெரிக்க நாட்டின்  "மெலிண்டா கேட்ஸ்" அவர்களை 2005ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக அறிவித்தது. அரசியல் ஆளுமை, தலைமைத்துவ பண்பு ஆகியவற்றை பாராட்டி, ஜெர்மனி நாட்டின் "ஆஞ்செலா மார்கெல்" அவர்களை 2015ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக அறிவித்தது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும், சுவீடன் நாட்டின் "கிரேட்டா துன்பெர்க்" அவர்களை, 2019ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக அறிவித்தது. இவர்கள், சாதாரண செயல்களை, அசாதாரண முறையில் செய்து, உலகத்தின் கவனத்தை ஈர்த்து, மாற்றத்தை கொண்டுவந்தவர்கள்.

ஆனால், நம் அன்னை மரியா இப்பொழுதும், எப்பொழுதும், முப்பொழுதும் தலைசிறந்த பெண்ணாக, சரித்திரத்தில் மட்டுமல்ல, காவியத்தில் மட்டுமல்ல, இறைத் திட்டத்தின்படி, இறை மனித உறவை, இணைக்கும் பாலமாக இருக்கிறார். முதல் பெண் ஏவாளின் கீழ்ப்படியாமையால் சாபம் வந்தது, அன்னை மரியாவின் "நிகழட்டும்" என்ற வசந்த வார்த்தையால் ஆசிர் வந்தது, ஆதவன் உதித்தது, அன்பு பிறந்தது, அகிலத்தில் அருள் மலர்ந்தது.

இந்த ஆண்டு எப்படி இருக்கும்? என் சுமை தீருமா? வறுமை நீங்குமா? தேர்வில் வெற்றிபெறுவேனா? வேலை கிடைக்குமா? நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? என்ற எண்ண அலைகளோடும், சின்ன சின்ன ஆசைகளோடும், விடைத்தெரியா வினாக்களோடும், புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் நமக்கு, அன்னை மரியா விடை கொடுக்கிறார். "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக்கொண்டிருந்தார்" (லூக் 2:51).  இறை வார்த்தையை கேட்டதோடல்லாமல் ரசித்து, ருசித்து, அசைப்போட்டு உள்ளத்தில் சிந்தித்து, இறை உறவை ஆழப்படுத்தினார், ஆண்டவரின் அருளைப் பெற்றார். நமது மனித வாழ்விலே, நாமும் இறைவார்த்தையை கேட்பதோடல்லாமல், இரசித்து, ருசித்து, அனுபவித்து, ஆண்டவரின் அருளோடு, வினாக்களுக்கு விடை தேடுகின்ற போது, பிறக்கின்ற இப்புத்தாண்டில், நல்லவை நடக்கும், இனிமை பொங்கும், அன்பு பெருகும், அருள் பொழியும், பாசம் பெருகும், சந்தோஷம் சங்கமிக்கும், வருஷமெல்லாம் வசந்தம் வீசும்.

இன்றைய முதல் வாசகத்தில் (எண்,6:22-27) ஆண்டவர் மோசே வழியாக ஆரோனுக்கு கொடுத்த இறையாசீர், இனிதே நமக்கு கிடைக்கட்டும். இறைவன் எல்லா தீமைகளிலிருந்து நம்மை காத்து, அவரது திருமுகத்தை நம்மீது திருப்பி, அருள் பொழிவாராக.  அமைதியை அருளி, நம்மை அவருக்கு உரியவர்கள் ஆக்குவாராக. அழகோவியமாம் அன்னை மரியாவின் வழியிலே, உயிரோவியமாம் நம் உள்ளம் கவர்ந்தவரின் பிள்ளைகளாக, இறைவனுக்கு உகந்தவர்களாக வருஷமெல்லாம் வாழ்வோம். ஆண்டவரின் அருளோடும், அன்னை மரியாவின் ஆசீரோடும், உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். (அ.பணி. இராஜசேகர், கும்பகோணம் மறைமாவட்டம்)

31 December 2019, 12:37