தேடுதல்

Vatican News
அபுதாபியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்வுகளில் இளையோர் அபுதாபியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்வுகளில் இளையோர் 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிவிழா கொண்டாட்டம்

இயேசுவின் இளையோர் இயக்கம் என்ற அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, அபுதாபியில் வெள்ளிவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் இளையோர் இயக்கம் என்ற அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி முடிய, அபுதாபியில் வெள்ளிவிழா நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் திருப்பீடத் தூதர், பேராயர், Francisco Padilla, தென் அரேபிய திருப்பீட நிர்வாகி, ஆயர் Paul Hinder, வட அரேபிய திருப்பீட நிர்வாகி, ஆயர் Camillo Ballin ஆகியோர், இந்த வெள்ளிவிழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

கானாவில் நடைபெற்ற திருமணத்தில், மரியா, பணியாளரை நோக்கி கூறிய "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்ற சொற்களை, மையக்கருத்தாகக் கொண்டு, கருத்தரங்குகள், சாட்சியப் பகிர்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த கொண்டாட்டங்களின் ஆரம்ப கூட்டுத் திருப்பலியில் பங்கேற்ற ஆயர் Hinder அவர்கள், இவ்விழாவில் கலந்துகொள்ளும் மக்கள், ஒப்புரவு அருளடையாளம் பெற்று, திருப்பலி விருந்தில் கலந்துகொள்ளும்போது, அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள சிறப்பு பரிபூரண பலனை பெறலாம் என்று அறிவித்தார்.

இத்திருப்பலியை தலைமையேற்று நடத்தி, மறையுரை வழங்கிய பேராயர் Padilla அவர்கள், இயேசுவின் இளையோர் இயக்கம் தற்போது, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட, 35 நாடுகளில் செயலாற்றுகிறது என்று குறிப்பிட்டார். (AsiaNews)

04 December 2019, 14:49