தேடுதல்

Vatican News
நைஜீரியா பதட்டநிலை நைஜீரியா பதட்டநிலை  (AFP or licensors)

கிறிஸ்மஸ் நாளில் 11 கிறிஸ்தவர்கள் படுகொலை

நைஜீரியாவின் வடகிழக்கில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் ஆயுத மோதல்களில் 36 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும், ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் – ஐ.நா.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ISIS இஸ்லாம் அரசைச் சார்ந்த, இஸ்லாம் தீவிரவாதக் குழு ஒன்று, மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், கிறிஸ்மஸ் நாளில் 11 கிறிஸ்தவர்களைக் கொலை செய்துள்ளது, நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே காழ்ப்புணர்வைத் தூண்டிவிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.    

சிரியாவில் தங்களின் இரு தலைவர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்தப் படுகொலைகளைச் செய்ததாக, அந்த பயங்கரவாதிகள், கிறிஸ்மஸூக்கு அடுத்த நாள் வெளியிட்டுள்ள, 56 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்றில் கூறியுள்ளனர்.

இது குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, அபுஜா பேராயர் Ignatius Ayau Kaigama அவர்கள், கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை என்றும், கண்டுகொள்ள முடியாத இடத்தில் இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதத்தில், சிரியாவில், ஜிகாதிகளின் தலைவர் Abu Bakr al-Baghdadi, பேச்சாளர் Abul Hasan Al Muhajir ஆகிய இருவரும் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, கிறிஸ்மஸ் நாளில், ஒரு கிறிஸ்தவரைச் சுட்டுக்கொன்ற பின்னர், எஞ்சியிருந்த பத்து கிறிஸ்தவர்களை, தலைவெட்டிக் கொலை செய்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

தங்கள் தலைவர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, அது நடந்து ஏறத்தாழ இரு மாதங்கள் சென்றபின், டிசம்பர் 22ம் தேதி, புதிய பயங்கரவாத நடவடிக்கையை ஐஎஸ் அமைப்பு அறிவித்து, பல்வேறு நாடுகளில், கொடூரமான தாக்குதல்களையும் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவின் போக்கோ ஹாரம் இஸ்லாம் தீவிரவாத அமைப்பின் கீழ், மேற்கு ஆப்ரிக்க மாநில இஸ்லாம் அரசு (ISWAP) என்ற பெயரில் போராடும் தீவிரவாதிகள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.      

இதற்கிடையே, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், இந்த படுகொலையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

28 December 2019, 15:44