தேடுதல்

Vatican News
யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றினார் - மத். 1,20 யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றினார் - மத். 1,20 

திருவருகைக்காலம் – 4ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

சிக்கலானச் சூழல்களிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை, இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதாலும், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தியதாலும், யோசேப்பை, கனவுகளின் காவலர் என்று நாம் கொண்டாடலாம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருவருகைக்காலம் – 4ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

டிசம்பர் 25, வருகிற புதனன்று, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடவிருக்கிறோம். இந்த விழா, ஏனைய கிறிஸ்தவ விழாக்களைக் காட்டிலும், உலகினர் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு சமுதாய விழாவாக மாறியுள்ளது. கிறிஸ்மஸ்  காலத்திற்கே உரிய கனவுகள், உலகெங்கும் வலம் வரும் நேரம் இது. இவ்வேளையில், கனவுகள், நம் வாழ்வில் உருவாக்கும் தாக்கங்களைக் குறித்து சிந்திக்க, நல்லதொரு தருணம் இது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு செய்தி, நமது சிந்தனைக்கு உதவியாக உள்ளது. 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதம், "மரணப் படுக்கையில் இருந்த ஐந்து வயது சிறுவன், கிறிஸ்மஸ் தாத்தாவின் கரங்களில் இறந்தான்" என்ற செய்தி, அமெரிக்க நாளிதழ்களில் வெளியானது. இந்நிகழ்வு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டென்னஸி (Tennesse) நகர், மருத்துவமனையொன்றில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஒரு சிறுவன், கிறிஸ்மஸ் தாத்தாவைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதால், மருத்துவமனையில் இருந்தவர்கள், உடனே, அவ்வூரில் இருந்த Eric Schmitt Matzen என்பவருக்கு 'போன்' செய்தனர். அவர், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தி வருபவர். இந்த அழைப்பு வந்த 15 நிமிடங்களில், Matzen அவர்கள், அந்த மருத்துவ மனைக்கு, கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து சென்றார். சாகக்கிடக்கும் சிறுவனின் தாய், தன் மகனுக்குப் பிடித்த ஒரு விளையாட்டுப் பொருளை, பரிசாகக் கட்டி வைத்திருந்தார். அந்தப் பரிசை எடுத்துக்கொண்டு Matzen அவர்கள், சிறுவன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். அவரும், அச்சிறுவனும் ஐந்து நிமிடங்கள் மகிழ்வுடன் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், கிறிஸ்மஸ் தாத்தா அவனுக்கு அப்பரிசைக் கொடுத்தார். சற்றுநேரம் கழித்து, அச்சிறுவனை அவர் அணைத்தபடி இருக்க, அவனது உயிர் பிரிந்தது.

ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து பிறப்பு விழா நெருங்கும் வேளையில், கிறிஸ்மஸ் தாத்தா பற்றியச் செய்திகளை ஆங்காங்கே வாசிக்கிறோம். இந்தக் கதைகள் கண்களை ஈரமாக்கி, உள்ளத்தில் மென்மையான உணர்வுகளை வளர்க்கின்றன. கிறிஸ்மஸ் தாத்தா உண்மையா, பொய்யா என்ற விவாதங்களை, வயது வந்தவர்கள் மேற்கொள்ளலாம். ஆனால், நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும், கிறிஸ்மஸ் தாத்தாக்கள் எத்தனையோ சிறுவர், சிறுமியரின் உள்ளங்களில், கனவுகளையும், நல்லுணர்வுகளையும் உருவாக்கி வருகின்றனர். மரணத்தோடு போராடிய அச்சிறுவன், தன் சாவை அமைதியாகச் சந்திக்க, அவன் வளர்த்திருந்த கிறிஸ்மஸ் தாத்தா கனவு உதவியாக இருந்தது.

கிறிஸ்மஸ் தாத்தாவின் கரங்களில் இறந்த சிறுவனைப் பற்றிய செய்தி வெளியான வலைத்தளங்களில், பாராட்டுக்கள், முதலில் இடம்பெற்றாலும், ஒருசிலர், 'கிறிஸ்மஸ் தாத்தா' என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு ஊட்டக்கூடாது என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர், இச்செய்தி, Matzen அவர்களின் சுயவிளம்பர முயற்சி என்றும், இது உண்மை நிகழ்வு இல்லை என்றும் விமர்சனங்களை வழங்கியுள்ளனர்.

நல்ல செய்திகளைக் கேட்கும்போது, முதலில், நம் உள்ளங்களில், நல்லெண்ணங்களும், அதிர்வுகளும் உருவாகின்றன. ஆனால், நாம், அறிவிலும் வயதிலும் முதிர்ந்தவர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்ததும், சந்தேகங்கள், விமர்சனங்கள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை எழுந்து, கனவுகளை, கருவிலேயே புதைத்துவிடுகின்றன. "உன் கனவுகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள். ஏனெனில், கனவுகள் இறந்தால், வாழ்வு, சிறகொடிந்த பறவையாகும். கனவுகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள். ஏனெனில், கனவுகள் போய்விட்டால், வாழ்வு, பனியில் உறைந்துபோன தரிசு நிலமாகிவிடும்" என்பது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கறுப்பின கவிஞர் Langston Hughes அவர்களின் கூற்று.

கனவுகளைப்பற்றி, இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம்... இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் புனித யோசேப்பு. மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். அவரை, திருஅவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர்... என, பலவழிகளில் பெருமைப்படுத்துகிறோம். மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அம்சத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். புனித யோசேப்பை, கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம்.

மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி மூன்றுமுறை கூறப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த மரியாவை ஏற்பதா, விலக்கிவைப்பதா என்று யோசேப்பு போராடிக்கொண்டிருந்த வேளையில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி, அவருக்கு, கனவில் ஒரு செய்தி வருகிறது. இந்நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்களில், மரியா கருவுற்றிருக்கிறார் என்ற கசப்பான உண்மை, பேரிடிபோல் யோசேப்பைத் தாக்குகிறது. இச்சூழலில், யோசேப்பு, தன் பேரையும், புகழையும் மட்டும் காப்பாற்ற நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ, ஊருக்கு நடுவே, கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார்.

இந்தச் சிக்கலான சூழலில், யோசேப்பின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை நீதிமான் என்று ஊரில் நிலைநாட்டினால் போதும், மரியா எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்ற சுயநலக் கோட்டைக்குள் யோசேப்பு வாழ்ந்திருந்தால், இறைவனின் தூதர் அவரை நெருங்கியிருப்பாரா என்பது சந்தேகம்தான். சுயநல மனங்களில், கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது. மென்மையான மனங்களில், மேலான எண்ணங்களும், கனவுகளும் தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புக்கு இறைவன் தந்த செய்தியை நாம் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்: “யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக் கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே. அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்துகொள். இவ்வாறு நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல. இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்” என்பது, யோசேப்பு கனவில் பெற்ற செய்தி என்று நாம் சிந்திக்கலாம்.

எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்பும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்களை எண்ணிப்பார்க்கலாம்.

முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை, நல்ல செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக, யோசேப்பைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.

இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஒரு ‘க்ரீமை’ப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும், நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்! செயல்படுத்துகிறோம்!

ஆனால், யோசேப்பை வந்தடைந்த மூன்று கனவுகளும், கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு அவரை உந்தித் தள்ளிய சவால்கள். இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவற்றை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது. சிக்கலானச் சூழல்களிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை, இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதாலும், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தியதாலும், யோசேப்பை, கனவுகளின் காவலர் என்று நாம் கொண்டாடலாம்.

இன்றைய நற்செய்தி, யோசேப்பைக் குறித்து வேறொரு பாடத்தையும் நமக்குச் சொல்லித் தருகிறது. யோசேப்பு, இஸ்ரயேல் பாரம்பரியத்தில் ஊன்றி வளர்ந்த, நேர்மையான பக்திமான். பாரம்பரியத்தை மீறுவதென்பதை அவர் கனவிலும் கருதியிருக்கமாட்டார். இறைவனின் தூதர், அவரது கனவில் சொன்ன செய்தி, பாரம்பரியத்திற்கு முரணானதாகத் தெரிந்தது யோசேப்புக்கு. திருமணத்திற்கு முன் ஒரு பெண் கருவுற்றால், அவர் இறைவனின் கட்டளைகளை மீறியவர்; இஸ்ரயேல் இனத்திற்குக் களங்கம் விளைவித்தவர் என்று மோசே தந்த சட்டமும், பாரம்பரியமும் சொல்கின்றன. இதற்கு நேர்மாறாக, கனவில் யோசேப்புக்குக் கிடைத்த செய்தி இருந்தது. கன்னியான ஒரு பெண் கருத்தரித்திருப்பது கடவுளின் செயல்; அதுவும் அவர் கருவில் தாங்கியிருப்பது கடவுளையே என்பது, யோசேப்புக்கு, பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

பாரம்பரியம், சட்டம் ஆகியவற்றில் யோசேப்புக்கு ஆழ்ந்த, வெறித்தனமான பற்றும், பக்தியும் இருந்திருந்தால், மரியாவின் நிலையை அறிந்ததும், ஊரைக்கூட்டி, பாரம்பரியத்தை நிலைநாட்டியிருப்பார். மரியாவின் மீது அவரே முதல் கல்லை எறிந்திருப்பார். ஆனால், யோசேப்பு, பாரம்பரியத்தை, சரியான முறையில் புரிந்தவராய் இருந்ததால், பாரம்பரியத்தைக் கடக்கக் கூடியவர் கடவுள் என்பதை உணர்ந்திருந்தார். கடவுளிடம் அடையாளம் கேட்கத் தயங்கும் ஆகாசுக்கு, இறைவாக்கினர் எசாயா வழியாக, இறைவன் தந்த அடையாளமும் இதுதானே என்பதை, யோசேப்பின் மனம் எண்ணிப் பார்த்திருக்கும். தன்னிடம் அடையாளம் கேட்கும்படி இறைவன் அழைத்தபோது, அந்த அழைப்பை ஏற்கத் தயங்கிய ஆகாசை நாம் இன்றைய முதல் வாசகத்தில் சந்திக்கிறோம் (இறைவாக்கினர் எசாயா 7:10-14). தனக்கு வழங்கப்பட்ட அடையாளத்தை ஏற்க மறுத்த ஆகாசுக்கு நேர்மாறாக, தன் கனவில் கூறப்பட்டவைகளை மனதார நம்பி, செயல்பட்டார் யோசேப்பு. கடவுளை, நம்மோடு, ‘எம்மானுவேலா’கத் தங்க வைத்தார்.

சாத்திரம், சம்பிரதாயம் சட்டம், பாரம்பரியம் இவை அனைத்துமே மனித குலத்தைக் காப்பாற்ற தேவையானவைதான். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து நிற்பவர் கடவுள். பாரம்பரியங்களைக் கடந்த, அல்லது அவற்றிலிருந்து முரண்பட்ட ஒரு வழியில் கடவுள் வந்து நம்மோடு தங்குவதாக இருந்தால், அவரைச் சந்திக்க, நாமும் பாரம்பரியங்களைக் கடந்து, அல்லது உடைத்துச் செல்ல வேண்டியிருக்கும் புனித யோசேப்பைப் போல.

கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே நல்லுறவு வளரும் என்பதை, "எனக்கொரு கனவு உண்டு" (I have a dream) என்ற உலகப்புகழ்பெற்ற உரையாக வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களையும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்ல, சாதியப் பிரிவுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளிலிருந்தும் இந்தியா விடுதலை பெறவேண்டுமென்று கனவுகள் கண்டு, தன் கனவுகளை, கவிதைகளாக விட்டுச்சென்ற மகாகவி பாரதியார் அவர்களையும், “நீங்கள் உறங்கும்போது காண்பது கனவு அல்ல, மாறாக, உங்களை உறங்கவிடாமல் செய்யும் நல்லெண்ணங்களே கனவு” (“Dream is not that which you see while sleeping it is something that does not let you sleep.”) என்று கூறிய அப்துல் கலாம் அவர்களையும், வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. கனவு காணவும், அக்கனவை நனவாக்கவும் துணிபவர்கள் வாழ்வதால்தான், இவ்வுலகம் இன்றும் வாழ்ந்து வருகிறது.

கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகள் காண்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!

21 December 2019, 14:24