தேடுதல்

Vatican News
சிரியாவில் இவ்வாண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்ட அருள்பணியாளருக்கு இறுதி மரியாதை சடங்கு சிரியாவில் இவ்வாண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்ட அருள்பணியாளருக்கு இறுதி மரியாதை சடங்கு  (AFP or licensors)

மறைப்பணியாளர்கள் கொலையுண்டதில் ஆப்ரிக்க கண்டம் முதலிடம்

2019ம் ஆண்டில் 29 பேர் மறைசாட்சிகளாக உயிரிழந்துள்ளதாகவும், இதில் 18 பேர் அருள்பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டில், தங்கள் விசுவாசத்திற்காக, வன்முறை வழியில் கொல்லப்பட்ட மறைப்பணியாளர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது, கத்தோலிக்க செய்தி நிறுவனமான ஃபீதேஸ்.

2019ம் ஆண்டில், இதுவரை, 29 பேர் மறைசாட்சிகளாக உயிரிழந்துள்ளதாகவும், இதில் 18 பேர் அருள்பணியாளர்கள் எனவும் தெரிவிக்கிறது ஃபீதேஸ் வெளியிட்ட புள்ளி விவரம்.

மொத்தம் கொல்லப்பட்ட 29 பேரில் 18 அருள்பணியாளர்களும், ஒரு நிரந்தர தியாக்கோனும், அருள்பொழிவு பெறாத இரு ஆண் துறவிகளும், இரு அருள் சகோதரிகளும், 6 பொதுநிலையினரும் அடங்குவர். 

கடந்த எட்டு ஆண்டுகளாக, மறைப்பணியாளர்கள் கொல்லப்படும் எண்ணிக்கையில், அமெரிக்க கண்டமே முதலிடத்தை வகித்து வந்த நிலையில், கடந்த ஆண்டும், இவ்வாண்டும், இவ்விடத்தை ஆப்ரிக்க கண்டம் கைப்பற்றியுள்ளது.

ஆப்ரிக்க கண்டத்தில் 15 பேரும், அமெரிக்க கண்டத்தில் 12 பேரும், ஆசியா, மற்றும், ஐரோப்பாவில் ஒருவர் வீதமும் மறைசாட்சிகளாக உயிரிழந்துள்ளனர்.  ஆப்ரிக்காவின் 10 நாடுகளிலும், அமெரிக்க கண்டத்தின் 8 நாடுகளிலும் என, இவ்வாண்டு, மொத்தம் 20 நாடுகளில் மறைசாட்சிய மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

30 December 2019, 15:19