குழந்தை இயேசு, மரியா, யோசேப்பு - திருக்குடும்பம் குழந்தை இயேசு, மரியா, யோசேப்பு - திருக்குடும்பம் 

திருக்குடும்பத் திருவிழா : ஞாயிறு சிந்தனை

புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுதல் என்பது, பெரும்பாலான குடும்பங்கள் இன்று சந்தித்து வரும் முக்கியப் பிரச்சனை. இதே பிரச்சனையை, திருக்குடும்பமும் சந்தித்தது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருக்குடும்பத் திருவிழா : ஞாயிறு சிந்தனை

பாடலாசிரியரும், பாடகருமான மேத்யூ வெஸ்ட் (Matthew West) அவர்கள், 'கிறிஸ்மஸுக்கு அடுத்தநாள்' என்ற தலைப்பில் உருவாக்கிய பாடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், நம் ஞாயிறு சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கின்றன:

கிறிஸ்மஸ் முடிந்ததும், அனைத்தும் முடிந்துவிட்டதைப் போன்றதோர் உணர்வு

கிறிஸ்மஸ் முடிந்ததும், அனைத்தும் கரைந்துவிட்டதைப் போன்றதோர் உணர்வு

இவ்வுணர்வு நம்மை சிதைப்பதற்கு முன், நினைவில் கொள்வோம்...

உலகின் ஒளி இன்னும் இங்கே உள்ளார்.

அலங்காரங்களை கழற்றிவிடுங்கள்

விளக்குகளையும், விண்மீன்களையும் எடுத்துவிடுங்கள்

ஆனால், கிறிஸ்மஸுக்குப் பின்னரும், உங்கள் மகிழ்வை, இவ்வுலகம் எடுத்துவிட அனுமதிக்காதீர்கள்

உங்கள் மகிழ்வை உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள்

கிறிஸ்மஸுக்கு அடுத்தநாள் மகிழ்வு, ஆண்டு முழுவதும் உங்களைத் தொடர்வதாக.

ஏனெனில், கிறிஸ்மஸ் முடிந்தாலும், உலகின் ஒளி இன்னும் இங்கே உள்ளார்.

டிசம்பர் 25, கடந்த புதனன்று, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடினோம். அவ்விழாவுக்கு, பல நாள்கள் நாம் தயாரித்தோம். ஆனால், விழா முடிந்ததும், அல்லது, ஒருவேளை, அந்த விழா நாளன்றே, நாம், எதையோ இழந்து, களைத்துப்போனதைப்போல் உணர்ந்திருக்கலாம். கிறிஸ்மஸ் அலங்காரங்களையும், அடையாளங்களையும் அகற்றும் வேளையில், இவ்விழாவின் மகிழ்வையும் நாம் அகற்றிவிடாமல், ஆண்டு முழுவதும் தொடர்வதுதான், உண்மையான கிறிஸ்மஸ்.

கிறிஸ்மஸைத் தொடர்ந்து நம் வழிபாட்டில் இடம்பெறும் நாள்கள், இவ்விழாவின் உண்மைப் பொருளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஒரு திருநாளைத் தொடரும் நாள்களில், அத்திருநாளின் மகிழ்வை அதிகரிக்கும் வண்ணம், கொண்டாட்டங்கள் தொடரவேண்டும். அதற்குப் பதில், துயரம் நிறைந்த நினைவுகளைக் கொண்டாட, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார்.

கிறிஸ்மஸுக்கு அடுத்த நாள், டிசம்பர் 26ம் தேதி, கிறிஸ்துவுக்காக கொல்லப்பட்ட முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் திருநாள். டிசம்பர் 28, குழந்தை இயேசுவுக்காக தங்கள் உயிரை ஈந்த மாசில்லாக் குழந்தைகளின் திருநாள். கிறிஸ்மஸ் விழாவைத் தொடரும் ஞாயிறன்று, திருக்குடும்பத் திருநாள்.

இந்த மூன்று திருவிழாக்களையும், கொண்டாட முடியுமா என்று, நம் உள்ளங்களில் கேள்வி எழுகின்றது. இதற்கு முக்கியக் காரணம், 'திருவிழா' அல்லது, 'கொண்டாட்டம்' என்ற சொற்களுக்கு நாம் தரும் இலக்கணங்கள். நமது விழாக்களும், கொண்டாட்டங்களும், பெருமையைப் பறைசாற்றும் தருணங்களாகக் கருதப்படுகின்றன. எனவே, தொழுவத்தில் தங்கள் குழந்தையைப் பெற்று, நாடுவிட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்தையும், கிறிஸ்துவுக்காகக் கொல்லப்பட்ட புனித ஸ்தேவானையும், மாசற்றக் குழந்தைகளையும், கொண்டாடத் தயங்குகிறோம். வரலாற்றில், கிறிஸ்து பிறந்த நேரத்தில், அவரைச்சுற்றி நிகழ்ந்ததனைத்தும், உலகின் அளவுகோலின்படி, கொண்டாடுவதற்குத் தகுதியற்ற எதார்த்தங்களாகவே இருந்தன. அத்தகைய எதார்த்தங்கள் இன்றும் தொடர்கின்றன என்பது, வேதனை தரும் உண்மை.

சில ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கருகே, புறநகர் பகுதியில் இருந்த ஒரு கோவிலில், டிசம்பர் 24 இரவு, கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியை நிகழ்த்தச் சென்றிருந்தேன். அத்திருப்பலியின் நினைவு, ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் நேரத்தில் மனதில் எழும்.

அந்தக் கோவில் மக்களால் நிறைந்திருந்தது. திருவிழாவுக்கு ஏற்ற உடையணிந்து, வந்திருந்த மக்கள், உற்சாகத்துடன் திருவழிபாட்டில் பங்கேற்றனர். மறையுரை ஆற்றும் நேரம் நெருங்கியது. நான் மக்களை நிமிர்ந்து பார்த்தேன். கோவிலின் நுழைவாயிலையும் பார்த்தேன். அப்போது, திடீரென எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. அந்த எண்ணத்தை ஒரு கேள்வியாக்கி, மறையுரையைத் துவக்கினேன்:

"அன்பார்ந்தவர்களே, நாம் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இக்கோவிலுக்குள், மரியாவும், யோசேப்பும் நுழைந்தால், எப்படி இருக்கும்?" என்று கேட்டேன். கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது. பலர் முகத்தில் புன்னகை படர்ந்தது. ஒரு பெண்மணி, எழுந்து, சப்தமாக, "ஓ அது பெரிய பாக்கியமாக இருக்கும் சாமி. அதைப்போல ஒரு சந்தோசம் இருக்கவேமுடியாது" என்று சொன்னார். அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் பலர் தலையசைத்தனர். ஒரு சிலர், இலேசாக, கரவொலியும் எழுப்பினர்.

"அவ்வளவு அவசரமாக, ஆர்வமாகப் பதில் சொல்லிவிடாதீர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்" என்று அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்துவிட்டு, நான் தொடர்ந்தேன்:  "நம்மிடையே வந்திருப்பது, மரியாவும், யோசேப்பும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், நீங்கள் சொல்வதுபோல் சந்தோசம் கொள்ளலாம். ஆனால், வந்திருக்கும் இருவரை, நம்மில் யாருக்கும் தெரியாது. அவர்கள் ஊருக்குப் புதியவர்கள். பார்க்கப் பரிதாபமாக இருக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள், பகலும், இரவும், கடினமான பயணம் செய்து வந்திருக்கிறார்கள். சரியாக உண்ணாமல், உறங்காமல் வந்திருக்கும் அவர்களது உடையெல்லாம், அழுக்கும், புழுதியுமாய் இருக்கிறது. அவர்கள் குளித்து நாள்கள் ஆகிவிட்டன. இவை எல்லாவற்றையும் விட, அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி வேறு. எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலை. ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு பேறுகால வேதனை ஆரம்பித்திருக்கலாம். எனவேதான், யோசேப்பு, அருகில் நம் கோவிலைக் கண்டதும், உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில், அப்பெண்ணை இங்கு அழைத்து வந்துவிட்டார்" என்று, நான், அந்தக் காட்சியை விவரிக்க, விவரிக்க, கோவிலில் கூடியிருந்தோரிடையே ஆரம்பத்தில் உருவான பரபரப்பு, சிரிப்பு எல்லாம் அடங்கிவிட்டன. கொஞ்சம் இறுக்கமான அமைதி அங்கு நிலவியது.

இதில் கூடுதல் அழகு என்னவென்றால், அந்தப் புறநகர் பகுதியில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர், வேற்று நாட்டிலிருந்து அங்கு வந்து குடியேறியவர்கள். எனவே, ஊர் விட்டு ஊர் வந்துள்ள இரு புதியவர்களைப் பற்றி நான் சொன்னவை, அவர்களுக்கு அர்த்தமுள்ளதாய் பட்டது. தொடர்ந்து, மறையுரையில், முதல் கிறிஸ்மஸ் நிகழ்ந்தபோது, மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு ஆகிய மூவரும் சந்தித்த பிரச்சனைகளை அவர்களுடன் பகிர்ந்தேன்.

யோசேப்பும், மரியாவும், குழந்தை இயேசுவுடன், முதல் கிறிஸ்மஸைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களைவிட, கொடுமைகளையே அவர்கள் அதிகம் அனுபவித்தனர். பச்சிளம் குழந்தையுடன், அன்னை மரியாவையும் அழைத்துக்கொண்டு, இரவோடிரவாக, யோசேப்பு, எகிப்துக்கு ஓடவேண்டியிருந்தது. இதை இன்று நாம் நற்செய்தியாக வாசித்தோம்.

இன்றைய வாசகங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, திருக்குடும்பத் திருவிழா திருஅவையில் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலை, காரணம் ஆகியவற்றை, முதலில் சிந்தித்துப் பார்ப்போம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, சில துறவற சபைகளால் பரப்பப்பட்டு வந்தது. 1921ம் ஆண்டு, திருஅவை, இந்த பக்தி முயற்சியை, ஒரு திருநாளாக மாற்றியது. காரணம் என்ன? அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ம் ஆண்டு முடிவுற்ற உலகப்போரின் இறுதியில், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைந்திருந்தன. வீட்டுத்தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், பல இன்னல்களைச் சந்தித்துவந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருவிழாவையும், திருக்குடும்ப பக்தி முயற்சிகளையும் திருஅவை வளர்த்தது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது (1962-65) மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. காரணம் என்ன? இரண்டு உலகப் போர்கள் முடிவடைந்தபின், வேறு பல வழிகளில், மக்கள், தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில், உலகம் முன்னேறியதைப்போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, பல அடிப்படை நியதிகள் மாறிவந்தன. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள், வீட்டுக்கு வெளியே, அன்பை, நிம்மதியைத் தேடியபோது, அந்த அன்பையும், நிம்மதியையும் வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது, திருஅவை. கிறிஸ்மஸுக்கு அடுத்த ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக 1969ம் ஆண்டு அறிவித்த திருஅவை, அக்குடும்பத்தை நமக்கு எடுத்துக்காட்டாகவும் கொடுத்தது.

நமக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்கும் இயேசு, மரியா, யோசேப்பு என்ற இக்குடும்பம், எந்நேரமும், செபம் செய்துகொண்டு, இறைவனைப் புகழ்ந்துகொண்டு, எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்கவேண்டாம். அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுதல் என்பது, பெரும்பாலான குடும்பங்கள் இன்று சந்தித்து வரும் முக்கியப் பிரச்சனை. இதே பிரச்சனையை, திருக்குடும்பமும் சந்தித்தது.

அரியணையை நிரந்தரமாக்கிக்கொள்ளும் வெறியினால், பச்சிளம் குழந்தைகளையும் தன் எதிரிகள் என்று எண்ணி, அவர்களைக் கொன்று குவித்த மன்னன் ஏரோதின் வாளுக்குப் பலியாகாமல், குழந்தை இயேசுவையும், மரியாவையும் கூட்டிக்கொண்டு, இரவோடு இரவாக, பழக்கமில்லாத ஒரு நாட்டுக்குச் செல்லும்படி, வானதூதர், யோசேப்பைப் பணிக்கிறார். ஏரோது இறந்தபின், மீண்டும் யோசேப்பு, தன் தாய்நாடு திரும்புவதற்குப் பணிக்கப்படுகிறார். இந்நிகழ்வுகளை, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இதை நற்செய்தி என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. அதிகாரத்தில் உள்ள தனி மனிதர்களின் கட்டுக்கடங்காத வேட்கைகள், வெறியாக மாறும்போது, பலகோடி அப்பாவி மக்கள் பலியாகின்றனர் என்பதை நற்செய்தியும், வரலாறும், நமக்கு, மீண்டும், மீண்டும் சொல்கின்றன.

திருக்குடும்பத்திற்கு விடுதியில் இடமில்லை என்று விரட்டிய பெத்லகேம் மக்களைப் போல, அக்குடும்பத்திற்கு, இஸ்ரயேல் நாட்டில் இடமில்லாதவண்ணம் விரட்டிய மன்னன் ஏரோதைப் போல, இந்தியாவில், ஆளும் வர்க்கம், அண்மையில், சட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த அடக்குமுறைச் சட்டம், இந்தியாவில், யாருக்கு இடமுண்டு, அல்லது, இடமில்லை என்ற பாகுபாட்டை உருவாக்கி, பிரிவினை வெறியைத் தூண்டிவருகிறது.

நாடுவிட்டு நாடு செல்லும் குடும்பங்கள், நாட்டிற்குள்ளேயே அகதிகளாக வாழவேண்டிய கொடுமைக்கு உள்ளாக்கப்படும் குடும்பங்கள், நாட்டிற்குள்ளேயே தங்கள் குடியுரிமையை இழந்திருக்கும் குடும்பங்கள் அனைத்தையும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து, இறைவனிடம் நாம் மனமுருகி வேண்டுவோம்.

நாடுவிட்டு நாடு செல்லும்போது, அன்னியர்களாக உணர்வது இயற்கைதான். ஆனால், வீட்டுக்குள், குடும்பத்திற்குள், நான்கு சுவர்களுக்குள், அன்னியரைப் போல் உணரக்கூடிய போக்கு இன்று நம்மிடையே பெருகிவருகிறது என்பதை, நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, வயதில் முதிர்ந்த பெற்றோரை, தேவையற்றவர்களாக, அன்னியரைப் போல் நடத்தும் கொடுமை, பல குடும்பங்களில் நிகழ்கிறதே! இந்தப் போக்கினை இன்று எண்ணிப்பார்க்க நமது வாசகங்கள் அழைக்கின்றன. சீராக்கின் ஞானம் கூறும் வார்த்தைகள் ஆசீரளிக்கும் வார்த்தைகளாகவும், எச்சரிக்கை தரும் வார்த்தைகளாகவும் அமைந்துள்ளன.

சீராக்கின் ஞானம் 3: 3-4, 12-14

தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.... குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு: அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி: நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.

தங்கள் சுயநலனை முன்னிலைப்படுத்தி, பெற்றோரைப் புறக்கணித்து வாழ்வோருக்கு, இறைவன், நல்வழி காட்டவேண்டும் என்று மன்றாடுவோம்.

தங்களைச்சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி, அன்பை, அக்கறையை, ஆதரவை, தங்கள் குடும்பத்திலும், தாங்கள் வாழ்ந்த சூழல்களிலும் நிலைநாட்டிய மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு ஆகிய மூவரையும் மையப்படுத்தி, இந்தக் குடும்ப விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இக்குடும்பவிழா வெறும் கொண்டாட்டமாக மட்டும் இராமல், நம் வாழ்வாக மாறி, குடும்ப உணர்வை, நம்மிடையே, இன்னும் ஆழப்படுத்த, இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2019, 14:57