20ம் நூற்றாண்டு திருத்தந்தையர் 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-1

20ம் நூற்றாண்டில், திருத்தந்தையர் பத்தாம் பயஸ், 15ம் பெனடிக்ட், 11ம் பயஸ், 12ம் பயஸ், 23ம் ஜான், 6ம் பவுல், 2ம் ஜான் பால் ஆகியோர், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை வகித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 13ம் லியோ அல்லது 13ம் சிங்கராயர் (Gioacchino Pecci, 2 மார்ச் 1810 – 20 ஜூலை, 1903) என்று சொன்னவுடனேயே, 1891ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி, அவர் வெளியிட்ட, வரலாற்றில் முத்திரை பதித்த, ‘ரேரும் நோவாரும்’ (Rerum Novarum) என்ற திருமடலே பலருக்கும் அதிகம் நினைவுக்கு வரும். "புதிய காரியங்களின்" எனப் பொருள்படும் இத்திருமடல், முதலீடு மற்றும் தொழிலின் உரிமைகளும், கடமைகளும் என்பது பற்றி விளக்குகிறது. அனைத்து கத்தோலிக்க முதுபெரும் தந்தையர், தலத்திருஅவைத் தலைவர்கள், பேராயர்கள், ஆயர்கள் ஆகிய அனைவருக்கும் அனுப்பப்பட்ட இந்த திறந்த திருமடல், தொழிலாளர் வர்க்கத்தின் நிலைகளை எடுத்துரைத்தது. முதலாளித்துவத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே, அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையே நிலவும் உறவுகள், மற்றும் கடமைகள் பற்றி விளக்குகிறது. ரேரும் நோவாரும் திருமடல், நவீன கத்தோலிக்கத் திருஅவையின் சமூகப் போதனைகளுக்கு அடித்தளமாகவும் கருதப்படுகிறது. இத்திருமடலைத் தழுவி, பின்னாளில், திருத்தந்தையர், குறிப்பாக, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1931ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி, Quadragesimo anno அதாவது நாற்பதாவது ஆண்டு என்ற திருமடலையும், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 1961ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி Mater et magistra அதாவது "அன்னையும், ஆசிரியரும்" என்ற திருமடலையும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1991ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி, Centesimus annus அதாவது "நூறாவது ஆண்டில்" என்ற திருமடலையும் வெளியிட்டனர்.

வரலாற்றில் மைல்கல் பதித்த சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் வாழ்கின்ற மக்களை மையப்படுத்தி வெளியிட்ட ‘ரேரும் நோவாரும்’ திருமடலை வெளியிட்ட திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், திருஅவையின் தலைமைப்பணியை 25 ஆண்டுகள் ஆற்றி, 1903ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி இறைபதம் சேர்ந்தார். திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், ‘ரேரும் நோவாரும்’ திருமடல் தவிர, செபமாலை பற்றி அவர் வெளியிட்ட பதினோரு திருமடல்களால் அவர் ‘செபமாலை திருத்தந்தை’ என அழைக்கப்படுகிறார். தம் மகனான இயேசு கிறிஸ்துவின் மீட்புப்பணியில், அன்னை மரியா, இடைநிலையாளர் என்ற கருத்தியலை முழுவதும் ஏற்றுக்கொண்ட முதல் திருத்தந்தை இவர். மேலும், திருத்தந்தை 13ம் லியோ அவர்களின் 25 ஆண்டுகால பாப்பிறைத் தலைமைப் பணி பற்றிக் குறிப்பிடுகையில், இத்தாலிய தீபகற்பத்தில், எட்டாம் நூற்றாண்டு முதல், 1870ம் ஆண்டு வரை, திருத்தந்தையரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நிலப்பகுதிகளை மீட்பதற்கு எடுத்த முயற்சிகள், 1896ம் ஆண்டில், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைகளை இரத்து செய்வதாக அறிவித்தது போன்றவைகளும் நினைவுகூரப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டில், மூன்று ஆண்டுகளே வாழ்ந்துள்ள திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், உறுதியான திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். இவர், தனது 91வது வயதில், 1901ம் ஆண்டு சனவரி மாதம் 18ம் தேதி வெளியிட்ட, கிறிஸ்தவ சனநாயகம் பற்றிய Graves De Commune Re எனப்படும் திருமடலே இதற்கு ஒரு சான்று. அந்த வயதிலும், அவரின் அறிவு மிகத் தெளிவாகச் செயல்பட்டது என்பதை, இத்திருமடல் உணர்த்துகின்றது.  கத்தோலிக்க சமூகப் போதனைகள் பற்றிய ரேரும் நோவாரும் என்ற திருமடலைத் தொடர்ந்து எழுதப்பட்ட Graves De Commune Re எனப்படும் திருமடலில் இத்திருத்தந்தை, சமுதாயம் முழுவதையும் மையப்படுத்தாமல், ஒரு சிலரை மட்டுமே மையப்படுத்தும் பொருளாதார அமைப்பிற்கு கத்தோலிக்கத் திருஅவை எதிரானது என்பதை மறுபடியும் உறுதிப்படுத்தியதோடு, கிறிஸ்தவ சனநாயகத்தின் புதிய கருத்தியல்களுக்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இத்திருமடலுக்கு இரு மாதங்களுக்குமுன், அதாவது 1900மாம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல் தேதி வெளியிட்ட மீட்பராம் கிறிஸ்து பற்றிய Tametsi Futura Prospicientibus திருமடலில், இயேசு கிறிஸ்துவை ஒருபோதும் அறியாதிருப்பது, அனைத்து அவப்பேறுகளிலும் மிகப் பெரியது என்று, அவர் எழுதியுள்ளார். 1899ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி வெளியிட்ட Annum Sacrum திருமடலில், கிறிஸ்துவின் பேரரசு, கத்தோலிக்க நாடுகளுக்கு மட்டுமல்லாமல், கிறிஸ்தவரல்லாதவர்களையும் உள்ளடக்கியது என்று இவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, 16ம் நூற்றாண்டில் திருஅவையின் தலைமைப் பணியாற்றிய, திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் அவர்களுக்குப்பின், திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், மாபெரும் திருத்தந்தையாகப் பணியாற்றினார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி கூற முடியும் என, இணையதளங்கள் குறிப்பிடுகின்றன. 

19 மற்றும், 20ம் நூற்றாண்டுகளில் திருஅவையின் தலைமைப் பணியாற்றிய திருத்தந்தை 13ம் லியோ அவர்களுக்குப்பின், 20ம் நூற்றாண்டில், திருத்தந்தையர் பத்தாம் பயஸ், 15ம் பெனடிக்ட், 11ம் பயஸ், 12ம் பயஸ், 23ம் ஜான், 6ம் பவுல், 2ம் ஜான் பால் ஆகியோர், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை வகித்துள்ளனர். இவர்களில், திருத்தந்தையர் பத்தாம் பயஸ் ((Giuseppe Sarto,1903-1914), 23ம் ஜான் (1958-1963), 6ம் பவுல் (1963-1978), 2ம் ஜான் பால் (1978 – 2005) ஆகியோர், புனிதர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையில் 350 ஆண்டுகளுக்குப்பின், புனிதராக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் திருத்தந்தையாவார். சிறார் திருநற்கருணை வாங்குவதற்கு இவர் அனுமதியளித்ததால், இவர், திருநற்கருணை திருத்தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2019, 11:39