கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே  

கிறிஸ்மஸ், பரிசுப்பொருள்கள் பற்றியதல்ல

கிறிஸ்மஸ் பெருவிழா, அலங்காரங்கள், பரிசுப்பொருள்கள் மற்றும், பணம் பற்றியது அல்ல, மாறாக, கடவுளின் அன்பைப் பற்றியது - கர்தினால் தாக்லே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸ் பெருவிழா, அலங்காரங்கள், பரிசுப்பொருள்கள் மற்றும், பணம் பற்றியது அல்ல, மாறாக, கடவுளின் அன்பைப் பற்றியது என்று, பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை அதிகாரி ஒருவர், இத்திங்களன்று கூறினார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் பாரம்பரியமாக நடைபெறும், “Simbang Gabi” எனப்படும், கிறிஸ்து பிறப்பு நவநாள் திருவழிபாட்டை டிசம்பர் 16, இத்திங்களன்று, திருப்பலி நிறைவேற்றி துவக்கி வைத்த, மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை விளக்கினார்.

வீடுகளில் குடில்கள் அமைக்கும் பாரம்பரிய முறைகள் மறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த கர்தினால் தாக்லே அவர்கள், தற்போது மக்கள் கிறிஸ்மஸ் மரத்திற்குக் கீழ் பரிசுப்பொருள்களை வைக்கின்றனர், பரிசுப்பொருள்கள் கொடுக்க முடியவில்லை என்றால், அவற்றுக்குப் பதிலாக பணம் கொடுக்கின்றனர் என்று கவலையுடன் கூறினார்.

சமுதாயத்தில் போலியான செய்திகள் பரவி வருவதற்கு எதிராய் எச்சரித்த கர்தினால் தாக்லே அவர்கள், நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவுமாறு விசுவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நற்செய்தியை அறிவிப்பதற்கு, விண்ணக அணிகள் தேவை, வானதூதர்கள் தேவை என்று மறையுரையில் கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், இயேசு பிறப்பு பற்றி வியப்படைகிறோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.  

இஞ்ஞாயிறன்று மின்டனோவாவில் 6.9 ரிக்டர் அளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் இத்திருப்பலியில் நினைவுகூர்ந்து செபித்தார், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மனிலா கர்தினால் தாக்லே.

கிறிஸ்மஸ் பெருவிழா திருப்பலியை பொது இடத்தில் வைத்துக்கொள்ளலாம் என 1587ம் ஆண்டில் மெக்சிகோவிற்கு திருத்தந்தை அனுமதியளித்ததையடுத்து கிறிஸ்து பிறப்பு நவநாள் திருவழிபாடு தொடங்கியது. இஸ்பானியர்கள், பிலிப்பீன்சில் காலனி ஆதிக்கத்தைக் கொண்டிருந்தபோது, இப்பழக்கம் பிலிப்பீன்சிலும் துவங்கியது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2019, 15:39