Wroclawவில் டேஜே இளைஞர் கூட்டம் Wroclawவில் டேஜே இளைஞர் கூட்டம் 

இளைஞர், கிறிஸ்துவின் தூதர்களாகச் செயல்பட வேண்டும்

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகில், கிறிஸ்துவின் தூதர்களாகச் செயல்பட வேண்டும். அழிவின் வடுக்கள் ஐரோப்பாவின் முகத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை இளைஞர்கள் அறிந்திருக்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

போலந்து நாட்டின் Wrocław நகரில், டிசம்பர் 28, இச்சனிக்கிழமையன்று துவங்கும், Taizé கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுமத்தின் 42வது ஐரோப்பிய இளைஞர்கள் கூட்டத்திற்கு, பல்வேறு கிறிஸ்தவ சபைத் தலைவர்கள், ஐ.நா..பொதுச் செயலர், மற்றும், அரசியல் தலைவர்கள் நல்வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

இன்றைய உலகில் இளைஞர்களுக்கு எண்ணிலடங்காத வாய்ப்புகள் உள்ளவேளை, டேஜே குழுமத்தினரின் இக்கூட்டம், இளைஞர்களுக்கு மிகவும் விலையேறப்பெற்றது என்று, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகில், கிறிஸ்துவின் தூதர்களாகச் செயல்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ள முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள், 1989ம் ஆண்டில் பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்டவேளையில், பனிப்போர் முடிந்துவிட்டது என்ற உணர்வு உட்பட, ஐரோப்பா பெரிய நம்பிக்கைகளுடன் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நினைவுகூரப்படும் இவ்வேளையில், அழிவின் வடுக்கள் ஐரோப்பாவின் முகத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை இளைஞர்களாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென்று கூறியுள்ள முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள், ஒப்புரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆங்லிக்கன் சபைத் தலைவர், உலகளாவிய இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைத் தலைவர், மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவுத் துறை தலைவர், ஐ.நா. பொதுச் செயலர், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உட்பட, பல தலைவர்கள், டேஜே இளைஞர்கள் கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2019, 15:30