பாகிஸ்தான் காரித்தாஸ் பாகிஸ்தான் காரித்தாஸ்  

பசிக்கொடுமையை அகற்றும் பாகிஸ்தான் காரித்தாஸ்

பாகிஸ்தானில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் போதுமான மழை பெய்யாததால், ஏழைகள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் காரித்தாஸ் மையம் செயல்படத் தொடங்கியதன் 54ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, கராச்சியிலுள்ள ஏழை விவசாயிகளுக்கு கோதுமை விதைகளை நன்கொடையாக வழங்கியுள்ளது, காரித்தாஸ் மையம்.

டிசம்பர் 12, இவ்வியாழனன்று, பாகிஸ்தான் காரித்தாஸ் நாளைக் கொண்டாடும் விதமாக, கராச்சி நகரின் ஏழ்மைப் பகுதிகளில் ஒன்றான, Gadapயில் வாழ்கின்ற விவசாயிகளுக்கு, ஐம்பது கிலோ கிராம் கோதுமை விதைகளை வழங்கியுள்ளது, காரித்தாஸ் மையம்.

இந்நிகழ்வு குறித்து ஆசியச் செய்தியிடம் தெரிவித்த, பாகிஸ்தான் காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி சலே தியெகோ அவர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் போதுமான மழை பெய்யாததால் இந்த மக்கள், மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், கோதுமைப் பயிர் செய்வதால் அம்மக்கள், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினார்.

பசி என்பது, வெறும் வயிறு காலியாக இருப்பது மட்டுமல்ல, பசிக்குப் போதுமான உணவின்றி கடுமையான நோய்களால் தாக்கப்படுவதும், உடல் மற்றும், மன வளர்ச்சியைத் தடைசெய்வதும் பசியினால் ஏற்படுவதாகும் என்றும், அருள்பணி தியெகோ அவர்கள் கூறினார்.

மேலும், காரித்தாஸ் மையத்தின் செயல்திட்ட இயக்குனர் மன்ஷா நூர் அவர்கள் பேசுகையில், இந்த மக்கள் தொடர்ந்து சவால்களைச் சந்தித்து வருகின்றனர் என்றும், எப்போதும் பசிக்கொடுமையிலே வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறினார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2019, 15:11